அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்


ஏழைகளின் இலட்சியம் அழியாது

17.11.61 அன்று சென்னை புரசையில் நடைபெற்ற வள்ளுவர் மன்ற ஆண்டுவிழாவில் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு.

“இந்த வட்டாரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து தி.மு.கழகத்திற்கு தேர்தல் நிதிக்காக நண்பர்கள் பணமுடிப்புத் தந்ததற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

உங்களின் தூய பணியின் பயனாகத் தி.மு.க. எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை எண்ணும்போது எனக்கே பிரமிப்பு ஏற்படுகிறது. இந்தத் தொகுதித் தோழர்கள் அடிக்கொரு தடவை, பாவமன்னிப்பு கேட்காமல் கழகத்திலே ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள்.

எவ்வளவு நல்லெண்ணம் இருந்தால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இங்கே கொண்டு வந்து என்னைப் பெயர் வைக்கச் சொல்லியிருப்பார்கள்.

காங்கிரசாரின் எண்ணம் ஈடேறாது

இத்தகைய பாச உணர்த்தியும் நேச உணர்ச்சியும் கொண்டே தி.மு.கழகத்தை விறுவிறுப்பான விடுதலை இயக்கத்தை ஒழித்து விடலாம் – உருத்தெரியாமல் ஆக்கிவிடலாம் என்று காங்கிரசுக்காரர்கள் தப்புக் கணக்குப் போட்டால் அவர்கள் எண்ணம் ஈடேறாது. அவர்களின் ஆசை கருகி அழியும். ஆற்றல் அறிவு படைத்த நீங்கள் நினைத்தால் காங்கிரசை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிவிடலாம்.

எதிர்பாராத இடங்களிலெல்லாம் ஏற்றமிருக்கக் காண்கிறேன். ஒரு கிராமத்திற்குப் போனால் இன்னொரு கிராமம் இப்படி பட்டி தொட்டிகள் எங்கும் கழகக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதைக் காண்கிறேன்.

பணக்காரர்களுக்குக் கொள்கை சீக்கிரம் விளங்கும். அதே நேரத்தில் அக்கொள்கையை விரைவிலேயே மாற்றியும் கொள்வார்கள். ஆனால் ஏழைக்கக் கொள்கை சீக்கிரம் விளங்காது. விளங்கிவிட்டால் துரோகியாக மாட்டார்கள். எனவேதான், பணத்தைக் காட்டி, பரிதாபத்திற்குரிய மக்களிடம் ஓட்டு வாங்க நினைக்கிறார்கள். ஆனால், பணத்துக்காக இலட்சியத்தை ஏழைகள் விட்டுவிடமாட்டார்கள்.

உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் அவர்கள், சட்டசபை நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து, அலசிப் பார்த்து ஆராய்ந்து ஆணித்தரமான பேச்சுக்கள் மூலம் ஆட்சியாளர்கள் செய்யும் அநீதிகளை எடுத்துப் பேசி இடித்துக் காட்டி வருபவர். நீண்ட பல நாட்களாக நம் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி, அரசியல் அனுபவத்துடன், ஜனநாயகத்தின் உறுதுணையாகச் சட்டமன்றத்தில் அவர் பணியாற்றி வருகிறார்.

காலத்தை வீணாக்காதீர்

தேர்தலுக்கு இரண்டொரு மாதங்களே இருக்கின்றன ஒரு நாளைக்கு 4. 5 கூட்டங்கள் ஒரு கூட்டம் ஒன்று அல்லது இரண்டரை மணிஎன்ற விதத்தில் நடத்தினால்தான் ஓரளவுக்கு அரசியல் கருத்துகளைக் கழகத் தோழர்கள் தரமுடியும். இப்படிப்பட்ட மேடையும், அலங்கார ஒளி விளக்குகளும் போட்டுக் காலத்தையும், பணத்தையும் வீணாக்காமல் இருப்பதற்கு ஒரு வழி செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன்.

ஒரு மோட்டாரில் ஒலிபெருக்கியைப் பொருத்திக் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட தொகுதிக்குச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் பேசிவிட்டு இன்னொரு தொகுதிக்குச் செல்ல வேண்டும். இதற்குரிய வேலைகள் நடைபெறுகின்றன. அரசியலாரிடம் அனுமதி கோரி அனுமதி கிடைத்தவுடன் அந்த முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்.

எடுத்துச் சொல்ல வேண்டிய கருத்துகள் ஏராளம் இருக்கின்றன. நாம் சொல்லும் கருததுக்களைக் காங்கிரசுக் காரர்கள் மறுக்கவும், அந்த மறுப்பகளை நாம் மீண்டும் மறுத்து விளக்கவும் உரிய முறையிலே பரபரப்பு இருக்க வேண்டுமே தவிர, பரபரப்பு இருக்கவேண்டுமே என்று பல தலைவர்கள் பல மணி நேரம் பேச வேண்டிய முறையில் அமையக்கூடாது.

மக்கள் சிந்திக்க வேண்டாமா?

காங்கிரசுக்காரர்கள் எங்களுக்கே உங்களுடைய ஓட்டைத் தாருங்கள் என்று கன்னத்தைத் தடவிக் கையைப் பிடித்துக் கேட்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் எக்கட்சிக்கு எப்படிபபட்ட கொள்கை இருக்கிறது. எப்படிப்பட்ட ஆளுக்கு நாம் ஓட்டுப் போட வேண்டும் என்பதைப் பொதுமக்கள் நன்றாக உணர்ந்து பார்க்க வேண்டும்.

இருபது ஆண்டுகளாகக் குடியிருந்தவன், வீட்டுக்குச் சொந்தக்காரன் வீட்டைக் காலி ்செய்யச் சொன்னால், என்னையா காலி செய்யச் சொல்கிறீர்கள்? நான் குடி வந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? என்று தன்னுடைய சொந்த வீட்டைப் போலக் குடியிருக்கும் வீட்டை நினைத்துக் கொண்டு சொல்வான். நான் கல்லூரியில் படித்த நாட்களில் கூட்டுக் குடித்தனம் இருந்த வீட்டில் குடியிருந்தவன் எனவே, எனக்கு இதெல்லாம் நன்கு தெரியும்.

அதைப்போல 14 ஆண்டுகளாக ஆட்சி செலுத்துகின்ற காங்கிரசை தி.மு.கழகமும், கம்யூனிஸ்டும், சுதந்திராக் கட்சியினரும் காலி செய்யுங்கள் என்று கேட்கிறோம். 14 ஆண்டுகள் இருந்த எங்களையா என்று காங்கிரசுக்காரர்கள் கேட்கிறார்கள்.

குடியிருந்தவனைக் காலி செய்யச் சொல்லும் வீட்டுக்குச் சொந்தக்காரர், வாடகை பாக்கி எட்டு மாதம், எதிர்வீட்டுக்காரனிடம் பகை, பக்கத்து வீட்டுக்காரனிடம் போட்ட சண்டை பஞ்சாயத்துக் கோர்ட்டிலிருந்து சப்-மாஜிஸ்திரேட் கோர்ட் வரை போயிருக்கிறது. எனவே உன் குடித்தனமும் வேண்டாம். நீ வாடகை பாக்கி தராவிட்டாலும் பரவாயில்லை காலி செய்தால் போதும். இந்த வீட்டை வேறு யாருக்கும் வாடகைக்கு விடுவதற்காக உங்களை காலி செய்யச் சொல்லவில்லை. நாங்களே குடிவரப் போகிறோம் என்று சொல்பவரைப்போல் நாங்களும் காங்கிரசாருக்குச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

தொல்லைகளை ஒருகணம் எண்ணுவீர்!

கெஞ்சிக் கேட்டு ஒட்டுப் பெறுகிற நோஞ்சான கட்சியல்ல எங்கள் கட்சி, தப்புப் பேச்சுப் பேசி – அவசரப் பேச்சுப் பேசி – வரைப்பேச்சுப் பேசி – ஏமாற்றும் பேச்சுப் பேசி ஊரை ஏய்க்கிற கட்சியல்ல எங்கள் கட்சி. கண்ணைக்கட்டி உங்களைக் காட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. 14 ஆண்டுக்க கால ஆட்சியில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் – அடைந்த நஷ்டங்கள் – பெற்ற துன்பங்கள் ஆகியவைகளை எடுத்துச் சொல்கிறோம். நீங்கள் ஆராய்ந்து பார்த்து, அல்லல்தான் ஏற்பட்டது. தொல்லைகள்தான் உண்டாயின என்பதை உணர்ந்தால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள். இந்திரன் சந்திரன் – இமயமலையில் ஊசி முனையில் எட்டாண்டு தவம் கிடந்து இன்றுதான் வந்தோம் என்று பொய்யும் புளுகும் பேசுத் தெரியாது எங்களுக்கு.

ஒரு வீட்டில் நல்ல குடித்தனம் இருக்கிறது என்றால். மின்சார விளக்கு போட்ட 12 பல்புகளும் அப்படியே இருக்க வேண்டும், வீட்டுத் தரை இடியாமல் எல்லாம் ஒழுங்காக இருப்பதும் அவசியம். மாறாக 12 பல்புகளில் 2 பல்புகள்தான் மிச்சம் இருக்கின்றன. அதிலும் ஒன்று உடைந்திருக்கிறது. தலையெல்லாம் இடிந்திருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? அதைப்போல் காங்கிரசு ஆட்சியில் நாடு கெட்டுவிட்டிரு்க்கிறது.

கடன் சுமை எவர்மீது விழும்?

ஆட்சியலமர்ந்திருப்பவர்கள் வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடன் சுமை காங்கிரசு தலைமீது விழும். கம்யூனிஸ்டுத் தலைமீதும் விழும். சுதந்தராக் கட்சியின் ீமுதும் விழும், தி.மு.க. தலைமீதும் விழும். இந்தக் கூட்டத்திற்கா நாம் போவது? என்று கூறுபவர்கள் மீதும் விழும். இதை நான் எடுததுச் சொன்னால், கடன் கொடுத்த எனக்கு இல்லாத அக்கறை இந்த அண்ணாதுரைக்கு ஏன் வந்தது? என்று காமராசர் கேட்பார்.

நான் அவருக்குச் சொல்லிக் கொள்வேன் – கடன் கொடுத்தவனுக்கு இல்லாத அக்கறை கடன் கட்டவேண்டியவனுக்குத்தான் இருக்கிறது. தாய் சாப்பிட்டால் மகள் சாப்பிடாமல், தம்பி சாப்பிட்டால் அண்ணன் சாப்பிடாமல், கணவன் சாப்பிட்டால் மனைவி சாப்பிட்டால், குழந்தை சாப்பிட்டால் தாய் சாப்பிடாமல் காலம் தள்ளுகிற நாம்தான் கடனைத் தீர்க்க வேண்டும். அப்படியில்லாமல், காமராசர் தோட்டத்தில் கிணறு வெட்டி அதில் தங்கப்பாளம் கிடைத்து, அதை அமெரிக்காவில் விற்று, அந்தப் பணத்தைக் கொண்டா கடனை அடைக்கப் போகிறோம்?

காரணம் சொல்ல வேண்டும்

ஆமாம், கடன் வாங்கினோம். அதைக் கேட்க நீங்கள் யாரென்று சொல்வது அரசியல் அநாகரிகம். அரசியல் அறிவீனம். இதற்கென ஒரு காரணம் சொல்ல வேண்டும். சொல்வார்களா என்பது சந்தேகம். நல்ல காங்கிரசுக்காரர்கள் கோபப்படாமல் பதில் சொல்ல எண்ணினால் கடன் வாங்கிய பணத்தைக் கொண்டு இத்தனைத் தொழிற்சாலைகள் நிறுவினோம். அதில் வரும் இலாபத்தைக் கொண்டு கடனைத் திருப்பி அடைக்கப் போகிறோம் என்று சொல்லலாம்.

பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கிக் கையிலுள்ள ரூ.2000 ஐக் கொடுத்துவிட்டு, அந்த வீட்டை ரூ.8000க்கு பாங்கியில் அடமானம் வைத்து அந்தப் பணத்தை வீடு விற்றவனுக்குக் கொடுத்து விட்டால், வருகிற வாடகையை வைத்துப் பாங்கியிலுள்ள கடனைக் கட்டலாம் என்பது போன்ற வாதத்தை வேண்டுமானால் இத்துறையில் நாம் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

வாங்குவோர் எவரோ?

பெருமளவில் வாங்கிய கடனைக் கொண்டு பல பொருள்களை உற்பத்தி செய்வதாகவே வைத்துக் கொள்வோம். அமெரிக்க நாட்டுக்காரன் பார்த்து, ஆகா, இதுவல்லவோ மோட்டார் என்றா வாங்கப் போகிறான்? இங்கிலாந்துக்காரன் பார்த்து. எப்பேர்ப்பட்ட துணி என்றா வாங்கப் போகிறான்? ஜெர்மன்காரன் பார்த்து இதுபோன்ற மருந்து எங்கும் அகப்படாது என்றெண்ணியா வாங்கப் போகிறான்.? ரஷ்யாக்காரன் பார்த்து இதுவல்லவா ராக்கெட். இதை வாங்கிப் பார்த்து நாமும் செய்யலாம் என்றா வாங்கப் போகிறான்?

இதற்கெல்லாம் மாறாக, ரஷ்ய நாட்டுக்காரன் போயும் போயும் என்ன ஆர்டர் கொடுத்திருக்கிறான் தெரியுமா? இதை நான் கேலிக்காச் சொல்லவில்லை, உண்மையைச் சொல்கிறேன் ரூ.40 லட்சம் அளவில் செருப்புக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறான். செருப்பு தைப்பதற்குத்தான் இவர்கள் லாயக்கு என்று நம்மை அவர்கள் நினைக்கிறார்களோ என்றும்கூட எண்ணத் தோன்றுகிறது. இந்தியாவில் தோல் அதிகம்-மக்களும் அதிகம். எனவே தோலால் செய்யப்பட்ட பொருள்களைச் செய்து அனுப்புங்கள் என்று ஆர்டர் தந்திருக்கிறார்கள் போலும்.

ஒரு நிமிட நேர மன்னன்!

எல்லோரும இந்நாட்டு மன்னர் என்றார் பாரதியார், அவர் சொன்னதான் உட்பொருளைப் பாரதி விழா கொண்டாடும் தேசிய நண்பர்கள் உணரவில்லை. இந்நாட்டு என்று சொன்னவுடனே தலையிலே கிரீடம் இல்லை. கையிலே செங்கோல் இல்லை. அமருவதற்குச் சிம்மாசனம் இல்லை ஆளுவதற்கு இராஜ்யம் இல்லை என்று எவரும் எண்ணிவிடக்கூடாது. பாரதியார் அதை, பொருளோடுதான் சொன்னார். ஐந்த ஆண்டுக்கு ஒருமுறை நீங்கள் மன்னர்கள். பிப்பரவரி 26, 27இல் நீங்கள் மன்னராவீர்கள் ஓட்டுச் சாவடிக்குச் சென்றவுடன் உன் பெயரென்ன? என்று வாக்குப் பதிவு அதிகாரி கேட்க, ஆறுமுகம் என்று சொல்ல, உங்கள் தந்தை பெயர் என்ன? என்று அவர் கேட்க, அருணாசலம் என்று சொல்ல, உடனே அவர் பட்டியலைச் சரிபார்த்து ஓட்டுச் சீட்டைக் கொடுக்க, அதைப் பற்றுக் கொண்டு, உள்ளே போய்ப் பெட்டிக்குள் போடுவதற்குள் இருக்கின்ற ஒன்றரை நிமிடத்திற்குத்தான் நீங்கள் மன்னர்( வாக்குச் சீட்டைப் போட்டபின் நீங்கள் மன்னரல்ல – மக்கள்கூட அல்ல – அடிமைகள்.

இந்திய அரசாங்கம் வெளியிட்ட கூலிக் கணக்குப்படி நீங்கள் பெறுகின்ற கூலி 2 அணா 4 அணாதான். இதனைக் கொண்டுதான் தாய் தந்தை, கணவன் மனைவி, தம்பி, தங்கை, குழந்தை, சினிமா, மருந்து இவையெல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறீர்கள்.

இதுதானே இன்றைய நிலைமை?

நீங்கள் தருகின்ற வரிப்பணம் சாம்பாரில் போட்ட பெருங்காயம் போல் இருந்தால் வரவேற்கலாம். ஆனால் கடலில் கரைத்த பெருஙகாயமாக ஆகிவிட்டதே!

தனிப்பட்ட முதலாளிகள் சும்மாவா லட்சக்கணக்கில் பணத்தைத் தேர்தல் நிதியாகக் காங்கிரசுக்குக் கொடுப்பார்கள்? கொழுத்த லாபம் பெறுவதற்குத்தான் அவர்கள் காங்கிரசை நாடுகிறார்கள். அவர்கள் தரும் பணத்தைக் கொண்டு காங்கிரசுக்காரர்கள் ஏழைகளை நாடி அதன் மூலம் ஓட்டுப் பெறுகிறார்கள்.

பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழைகளோ தீராத வல்வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தான் என்று பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

வெற்றி தேடி தருக!

முதலாளி தன் ஏவலாளியைப் பார்த்து, ஏண்டா இப்படிக் கொட்டிருக்கிற? என்று கொச்சைத் தமிழில் திட்டுவதைப் போல், வயிற்றை இறுக்கிக் கட்டுங்கள் என்று நேரு பேசியிருக்கிறார். முன்பெல்லாம் தாளிப்பு வாசனை இரண்டு வீட்டுக்கு அப்பால் வரும்போதே மூக்கைத் துளைக்கும். இப்போது தாளிப்பு வாசனையே தெரிவதில்லை, காரணம். எண்ணெய் இருந்தால் தானே? தாய்மார்களே, அரிசிப் பானையையும் எண்ணெய்ச் சட்டியையும் திறந்து பார்த்தாலே போதும் – ஓட்டு நமக்குத்தான்.

பெண் பார்த்துவிட்டு வந்தவடன் பெண்ணைப் பற்றி வர்ணிக்காமல், ஒரே வார்த்தையில் அந்தப் பெண் நம் குடும்பத்துக்கு தகாது என்று சொல்வதுபோல் காங்கிரசுக்கட்சியும் நம் நாட்டுக்கு தகாது. அவ்வளவுதான் நான் சொல்வேன். எனவே, தோழர்களே( அச்சப்படாமல் – உற்சாகம் குறையாமல் தேர்தலில் ஈடுபாடு கொண்டு உழைத்து வெற்றிதேடித்தாருங்கள் என்று கூறி விடைபெறுகிறேன்.

(நம்நாடு - 24.11.61)