அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


கூட்டு அமைச்சரவை
(25.04.1968 அன்று அமெரிக்க நியூகேவனில் செய்தியாளர் ஒருவருக்கு அளித்த பேட்டி)

கட்சி பாகுபாடற்ற அரசியலை ஆதரித்தால், மைய அரசில் கொள்கையற்ற ஒரு குழப்பநிலை உருவாகும் அல்லது சர்வாதிகார நாடுகளில் உள்ள நிலை ஏற்பட்டுவிடும்.

காங்கிரஸ் அமைக்கும் கூட்டாட்சியில் சுதந்திராக் கட்சியைச் சேர்த்துக் கொண்டால் சோஷலிஸ்டுகள் அதில் சேர மாட்டார்கள். சோஷலிஸ்டுகள் ஓதுங்கிவிடுவார்கள். எனவே மைய அரசில் எல்லாக் கட்சிப் பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு தேசிய அரசு அமைக்கும் வாய்ப்பு தற்போதைக்கு இல்லை.

காட்டாக, அண்மையில் கட்ச் பற்றி நடந்த விவாதத்தை கூறலாம் கட்ச் தீர்ப்பைச் சில அரசியல் கட்சிகள் ஏற்றன. மற்றவை ஏற்கவில்ல். திமுகவும் மற்றும் சில எதிர்க்கட்சிகளும் அதை ஆதரித்தன. சுதந்திரக் கட்சி அதை ஆதரிக்கவில்லை. அதேபோல அப்துல்லா பற்றிக் கொள்கையளவில் ஜனசங்கமும் ச.கோவும் காங்கிரசுடன் சேர மறுத்துவிட்டன.

மாநில மட்டத்திலும் கட்சி பாகுபாடற்ற அல்லது அனைத்துக் கட்சி அரசு அமைப்பது கடினமே. காட்டாகத் தமிழகத்தில் காங்கிரசும் திமுகவும் சேர்ந்து கூட்டாட்சி அமைப்பதாக வைத்துக் கொள்வேம். அதன் பின்னர் காங்கிரசோ திமுகவோ என்ன சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க இயலும்? எந்த அடிப்படையில் மக்களிடயே ஆதரவைக் கோர முடியும்?

ஒரு குறிப்பிட்ட வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறோம். இதனால் அதைக் கைவிடமுடியாது. ஆனால் மாநில மட்டத்தில் எல்லா எதிர்க்கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு அரசியல் கட்சிகள் கூட்டு ஒன்றை உருவாக்கலாம். ஜெயப்பிரகாஷ் போன்ற உயர்நிலையில் உள்ள ஒருவர்தான் இதைச் செய்ய முடியும். ஆனால், இதற்கு ஜெயப்பிரகாஷ் இன்னும் நேரடியாக அரசியலில் இறங்க வேண்டும்.

(25.04.1968 அன்று அமெரிக்க நியூகேவனில் செய்தியாளர் ஒருவருக்கு அளித்த பேட்டி)