அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


வண்டு கண்டேன்

(இசை அமைத்திடுக)

பண்பாடும் வண்டு கண்டேன் - காதல்
பண்பாடும் வண்டு கண்டேன்.
பாராயோ! எனைச் சேராயோ!
இன்பம் தாராயோ, எனப்

(பண்)

செண்டாகி, சேயிழை கொண்டாட
செடிதனில்
நின்றாடும்
மலர் மங்கை
மனம் மகிழ

(பண்)

தித்திக்கும் இசை அளித்துத்
தேடி எனை அழைத்துச்
சுற்றிச்சுற்றி வட்டமிட்டுச்
சுருதிகூட்டிடும் அன்பு
மெத்தவும் உருக்குதெந்தன்
சித்தமதை என்றுஎண்ணிச்
சிரித்திட,

(பண்)

மலரிடை குதித்துமே
மதுவினை ருசித்துமே
மொண்டு,
நிரம்ப உண்டு,
கனி கொண்டு,
பண்டு,
பாடிய பண் மறந்து,
மலரைத் துறந்து
வேறிடம் பறந்து

(பண்)


கள்ள மில்லாக் கன்னியரைக்
காதலில் இழுத்து வைத்துக்
காரியம் கனிந்த பின்னர்
காதகம் செய்யும் கயவர்
எங்கள் இனம், எங்கள் இனம்
எச்சரிக்கை, எச்சரிக்கை,
என்று முழங்குவது போல்
எனக்க றிவிக்கும் இன்ப

(பண்)

(திராவிடநாடு, பொங்கல் மலர் - 1955)