அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


தேம்புகின்றேன்

"கற்றதனா லாய பயன்என்சொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்"
என்றே வள்ளுவரும் இயம்பினார்.
என் உள்ளம் நன்றிதுவே என்றே கண்டதனால்
நான் இனி நாடிடுவேன் நல்லாசான் என்றே
நாற்புறமும் கண்னோட்டம் செலுத்தி நின்றேன்.

இருபதி னைந்தும் ஓர்ஐந்தும் கொண்டபிரான்
ஈர்க்கும் பேச்சழகன் இளவல் கண்டேன்.
காவியுடைக் கவினளிக்க காட்சிதரும் அடியாராய்
மலைமடத்தின் அதிபனானேன்;
மாதேவர்க் கடியானேன்;
மணிவாசகத் தமிழை மானிலம் அறியச்செய்து
மாசுதனைப் போக்கிநல்ல தேசுஉலவச் செய்வேன்,
என்றே இசைத்திடும் கீதம் கேட்டு
என்உடைமை மாற்றி னேன்மடம் புகுந்தேன்.

இளவழகன் என்றபெயர் இறைஅருகில் ஆகாதென்று
மணிமொழியார் ஆனேன்காண் மடத்தடிமையுமானேன்!

அடிகளார் உடன் செல்வேன்
அவருரையைச் செவிமடுப்பேன்,
அவர்க்கான தொண்டிறிந்துநான் செய்வேன்!
சிவப்பழமே! செந்தமிழே! சீலச் செல்வா!
என இறைஞ் சிமிக இன்பம் பெற்றேன்.
சழக்கருரை தனைஒழித்துச்
சன்மார்க்கம் தனை அழைத்துத்
தமிழகத்துக் கணிசெய்வேன்,
தம்பி! என்றார்.
தாள்பற்றி, வணங்கிநின்றேன்.
சிலகாலம் சென்றது தான்சிவ நெறியில்,
சீலர்இவர் வந்துற்றார். வெற்றி என்று,
திருப்புகழை அடியார்கள் பாடி நின்றார்.
தேனொழுகும் தீந்தமிழைப் பருகு கின்றேன்.

தெளிவற்ற நிலைஈ தென்றுஅன் றறியேன்.
தேம்புகின்றேன்!

கட்டுவது காவிதான்,
கருத்தோ ஆதிக்கம் தாவும் காணீர்!
உருட்டுவதும் உருத்திராக்க மாலை யேதான்,
உருட்டுவிழிப் பாவையர் மேலே நாட்டம்!
அருட்கடலே! என்றேத்தி வருவோர் பல்லோர்.
அவர் தாமும் அடித்தாட் கொள்வார்.
வெருட்டுவார், வெஞ்சினங் கொண்டு,
மருட்டுவார், மாடென்பார் மனிதர் தம்மை.
இருட்டு வந்துற்ற காலை,
இன்மொழி உண்டோ என்பார்?

கனிகள் பறித்திடவும் வகையும் கண்டார்
கதலித்தோட்டம் அதற்கான மாடம்!
காதிலே சேதி! கடுகளவும் ஒப்பவில்லை!
கண்படைத்த குற்றத்தால் கண்டேன் ஐயோ!

ஐயன் அழைத்தார் என்று ஆள் சொன்னான்:
மெய்யனைக் காண இப்போ
மேவுமோ என்று கேட்டுப்
பையப்பர் வந்து நின்றார்.
பழமடம் தன்னில் ஓர்நாள்

அறிந்துரைத் திடவும் எண்ணி,
அடிகளார் அறையை நாடி,
அடைககல மானேன், சென்றேன்,
ஐயகோ! கண்ட காட்சி!
அம்மவோ! சொல்லப் போமோ!
அருள்நெறி அளிக்கவந்த அண்ணலும்
பொருள்பறித் திடும்ஓர் புன்மொழிப் பாவைதானும்
விழிமொழி பேசி ஆங்கு
வியர்த்திடும் கோலம் கண்டேன்!

பதறினேன்! பயந்தேன்! நைந்தேன்!
அறம்இது தானோ ஐயா!
அருள்தரும் முறைஇ தானோ!
சீல மோ!சிவ நெறியோ!
சிற்றின்பக் கூடமோ, இம்மாடம் தானும்!
காடு டையசுட லைப்பொடி கொண்டு
கண்ணிலே தூவிடுதல் கற்றீர் நன்று
காரிருளில் எதைத் தள்ளி
காண்கின் றீரோ, பேரொளி ஈண்டு
என்றெல்லாம் கேட்க நெஞ்சம் ஏவிற்று,
எந்றன் நாவோ, குழறிற்று.

காஷாயம் கட்டியதும், கட்டிலறை காண்பதற்கோ?
ஏன்தானோ இவ்வெளி வேஷம்!
ஏற்புடைய செயல்தானோ?
என்றே எண்ணி,
கோல மதைநான் களைந்தேன்.
கொல்லு புலிக்காடு நீங்கி,
வந்துற்றேன் கல்விபயில் கூடம் நோக்கி.

அண்ணாவின் குறிப்பு:
(தெய்வநெறியைத் தமிழகத்தில் பரப்பும் மெய்ஞ்ஞானி என்று நம்பி, ஓர் கபடவேடதாரியிடம் சீடனாகிக் காவி அணிந்து பணியாற்றிய இளைஞன், உண்மை கண்டு, உள்ளம் வெதும்பு, காவி களைந்து விட்டு, இல்லறம் புகுந்து, நல்லறம் கற்றிடும் மாணவனான கதை-கவிதை அல்ல-புலவர் துணைகொண்டு கவிதையாக்கிக் கொள்க)

(திராவிடநாடு, 18.07.1954)