அறிஞர் அண்ணாவின் கவிதைகள்


தமிழ் இசை
பிரத்யேக விமர்சனம்
(வீரன்)
இடம்: சென்னை மெமோரியல் மண்டபம்
காலம்: 06.01.1946 காலை - மாலை. இரு வேலையும்.
ஐமா: மதுலை சர்.பி.டி.இராஜன் - வாய்ப்பாட்டு
மிர்ஜாபூர் ஜெமிதார் - மிருதங்கம்
சென்னை மதனகோபாலர் - கஞ்சிரா....

இன்று நடந்த இசைவிழாவிலே, வீழ்ந்துபோன கட்சியைத் தூக்கி நிறுத்த முன்வந்த -
முன்னால் இழந்துவிடப்பட்ட - மதுரை சர்.பி.டி.இராஜன் அவர்களின் இசையிலே,
சபையினர் மெய்மறந்து போயினர். முக்கியமாக, அவருடைய இசையிலே
'முகாரி'ஆலாபனை நேர்த்தியாக இருந்தது.


பிரதம பாடல்
இராகம்: முகாரி; தாளம்: ரூபகம்

(மெட்டு-அமைத்துக் கொள்வது. தாளத்தை மாற்றினாலும்
தயவு செய்து இராகத்தை மட்டும் மாற்ற வேண்டாம். பாவம் கெட்டுவிடும்.
பாவத்திலே, பா, கலா ரசிகர் டி.கே. சிதம்பரநாதரின் உச்சரிப்பு முறைப்படி)

என்ன செய்வது நண்பரே! நாம்
இனி ஏது செய்வது, தோழரே!

தேர்தலும் தோற்றது, தேகமும் இளைத்தது.
தேடிய பொருளே நம்மைகூட மறுத்தது.
ஓடியே வெளியிட்டார் ஓலமாம் அறிக்கையை
நாடியே வந்ததம்மை நட்டாற்றில் கைவிட்டார்.

கட்சிக்குத் தலைவன் நான் கனதனவான்களே!
காண்கிறேன் முகங்களைச் சோகமே தாங்கிட
ஏங்குதே என்மனம், தூங்குதே உள்ளமும்,
பாங்குடன் கூறுவீர், பலன்உண்டோ இனியுமே!

தமிழ் இசை - 2

நாடோ நமைஅறிய ஏடோ ஒன்றுமே இல்லை.
பாடுபடுவதற்கே பண்பினர் யாரும் இல்லை.
ஏனோ எனக்குத் தொல்லை, நீக்குவீர் இச்சிக்கலை.
தேனோ தோல்வித்தொல்லை, நானோ அதற்குச்சள்ளை!
வரும் தேர்தல் தன்னிலே வகையுடன் நில்லாவிடில்
வானம் இடித்திடாது, வாழ்வும் வறண்டிடாது.
வருமுன் உணர்ந்தேன் உண்மை, தெரிமின் இதுநன்மை
வகை உண்டெனின் சொல்மின், வாய்திறந்து பேசுமின்!

ஊரெங்கும் செல்லுக! உட்பகை வெல்லுக!
உற்றதுணை யெனவே ஒரு ஏடு தேடுக!
நற்றவம் துணைசெய்யும், நாதன்முன் நிற்பானே
நம்பினோம் வேலனை, நாம் வெல்வோம், ஏகியே!


குறிப்பு: நாதன் - கடவுளைக் குறிக்கும் சொல். பழைய ஜஸ்டிஸ் ஆசிரியரை அல்ல.

விசேஷக் குறிப்பு: அப்சர்வரின் அடாணாவும், சர்.இராஜனின் 'சண்முகப்பிரியாவும்' எதிர்பார்க்கப்பட்டன. நடைபெறாததால் ரசிகர்கள் வருந்தினர்.

(திராவிடநாடு - 13.01.1946)