அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

எனது கருத்தோட்டம்

நாம்
வாழ்ந்திடும்
ஊரும் உலகும்
எப்படி யிருத்தல்
வேண்டும்
என்றிடின் -
மெய்யது தளர்ந்து
கையது ஏந்திப்
பிச்சை கேட்டு
இரந்திடும் மாந்தர்,
இரக்கமென்ற
ஒரு பொருளிலாப்
பேரரசைக்
கல்லாய்ச் சமைத்த
கஞ்சனின்
உருட்டு விழியும்
மருட்டிடும்
பார்வையும்,
கடுந்தேவைப்
பாட்டின்
ஓயா ஓலம்;
உளமதை
உலுக்கிடும்
புலம்பல்;
களைதனை
இழந்த
குற்ற நெஞ்சின்
வெளிறிய
வதனம்;
பொய்தனை யுரைத்துக்
கறைமிகப்
படிந்து
கன்றிய உதடுகள்,
இகழ்ச்சிக்
கொடுமையில்
இன்பங்
கண்டிடும்
குரூரக்
கண்கள்,
இவை யாவையும்
இல்லா தொழிந்த
ஊரில், உலகில்
நோயும் நொடியும்
பற்றிடா
உள்ளமும் உடலும்
உருவும் திருவும்
இரண்டறக் கலந்த
இல்லற வாழ்வின்
வடிவம் வழக்கும்
மக்கள்தம் வாழ்வினில்
மெத்தவும் பொருந்திடின் -
மாந்தர்தம்
வழ்நாள் நீண்டிடும்;
அச்சம் அகன்றிடும்;
களிப்பு
ஊறிடும்;
அன்பு செழித்திடும்.
ஊரில், உலகில்
என்பது உறுதி!
மனிதனின் மாண்பும்
மீணடிடும்
ஊரில், உலகில்!

(அண்ணாமலைப் பேருரை - 1968)