அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

தம்பி! அடித்தாலும் அணைத்தாலும்

அடித்தாலும், அணைத்தாலும், ஐய,
நின் அன்பெனும் பாசமது அறிந்துருகும்
என்னெத்த அடியவர்கள் இங்குண்டு அதனால்
மின்னொத்த இடை உமையாள், கண்பொத்த
பொன்னொத்த மேனியனாய், பொடிபூசிப்
பண்ணொத்த மொழிகேட்டு இன்புற்று,
மண்விட்டு விண் வரட்டும் என்றே நிற்கும்
மாமணியே! நின் நோக்கம் அறிந்தேனன்றோ!

மற்றையோர் உற்றகுறை பற்றித்தாக்க
இதுமுறையோ? இது அறமோ? என்றே கேட்பர்
கற்றைச் சடையதனில் மதிசூடிக் காட்டும் தேவ!
உற்றகுறை உண்டெனினும் உள்ளம் நோகேன்
ஊர்தோறும் உன்புகழைப் பாடிச் செல்வேன்,
காரழகுமிகுந்திடு நந்தம் நாட்டில் கண்கசக்கிக்
கடிந்துரைப்போர் போக்கினரைக் கண்டால் காய்வேன்;
கண்ணுதலைக் கொண்டவனை அறியாதானே!
பண்டுமுதல் அவன்கொண்ட முறை ஈதன்றோ?
தொண்டு செயும் தூயவரின் பெண்டைக் கேட்டான்
துடித்திடாது அறுத்திடுக மகவை என்றான்,
பெயர்த்தெடுத்த கண்ணினை அப்பிக்கொண்டே
பெம்மானும் இருந்த நிலை அறியாய் போலும்;
அடித்தாலும், அணைத்தாலும் ஐயன், அன்றோ!
அவனடியை மறந்திடுதல் அடியார்க்குண்டோ!
அணைத்தாலென், அடித்தாலென், வேறு வேறா?
அனைத்துமே அவனாற்றும் வினையே யன்றோ?
அரகரா மகாதேவா! என்றேத்தித் தொழுவதன்றி
ஆகாது ஐயன் செயல் அடுக்காது, என்பார் உண்டோ?
ஆன்றோர்கள் அளித்த நெறி ஈதேயன்றோ!
அறியாது போனதுமேன், அறிவற்றோனே!
அடித்தாலும் அணைத்தாலும் அவனே ஐயன்!
அடிதொழா திருந்திடுவார், அடையார் இன்பம்!

(திராவிடநாடு - 05.08.1956)


(பதிகத்தில் உள்ள பொருளுக்கும் இன்றைய அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வேடிக்கையான தொடர்பினைத் தம்பியர் உணரத் தருகிறார்)