அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வார்தா முனிவர் யாகம் செய்தால்...!

“ஓகோ! தூக்கமா? பக்கத்திலே இவன் தேவியும் இருக்கிறாள். தன்னை வெல்பவர் இல்லை என்ற மன நிம்மதியால், நன்றாக நித்திரை செய்கிறான். ஆ! நான் இவ்விதம் நிம்மதியாகத் தூங்கி எத்தனை நாட்களாகி விட்டன. படுக்கையில் புரண்டு புரண்டு நான் புலம்புகிறேன். இவனோ நிம்மதியாகத் தூங்குகிறான். சற்று விழி, பிறகு, என்றென்றும் விழித்துக்கொள்ள முடியாத பெருந் தூக்கத்திலே உன்னைக்கொண்டு போய்ச் சேர்க்கிறேன்.” என்று, முத்தநாதன். மனதிற்குள் கூறிக்கொண்டான்.

அவனெதிரிலே, மலரணைமீது மன்னன் மெய்ப்பொருள் நாயனார், தம் தேவியுடன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். வாயிற் காப்போரையும் மீறிக்கொண்டு உள்ளே நுழைந்த முத்தநாதன், மன்னன் துயில்வது கண்டு, மனதிலே பலப்பல எண்ணினான். பிறகு மன்னனை எழுப்பி, தான் வந்த காரியத்தை நிறைவேற்றிக்கொள்ளக் கருதினான். முத்தநாதன், உரத்த சத்தத்துடன் “அரகர மகா தேவ!” என்று கூவினான். மன்னன் விழித்துக்கொண்டான். “ஆகா! முகத்திலே என்ன பொலிவு! பக்தி ததும்பும் கண்கள்! நீறு பூசிய நெற்றி! உருத்திராக்க மாலை துலங்கும் கண்டம்! சிவ சொரூபமே, சிரம் தாழ்த்தினேன், உமது வரவு, எனது வினைகளை அறுத்தொழிக்குமென்றே நம்புகிறேன். அரனடியாரே எமக்கு ஆண்டவன். அடியேனை ஆட் கொள்க” என்று கூறி, கை கூப்பி நின்றான் மன்னன்.

முத்தநாதன், சிவனடியார்போல, காவிபூண்டு, உருத்திராக்க மாலை தரித்து, கட்டுக்கட்டாக நீறு பூசி அங்கு வந்திருந்தான். திருக்கோயிலூரை ஆண்டு வந்தவனும், திக்கெட்டிலும் தன்புகழ் பரப்பியவனும், இதே முத்தநாதனெனும் சிற்றரசனைப் பன்முறை முறியடித்தவனுமாகிய மன்னன் மெய்ப்பொருள் நாயனாருக்கு, சிவனடியார்களிடம் விசேஷமான பக்தி உண்டு. எனவே, முத்தநாதன் சிவனடியார்போல் வேடம்பூண்டு சென்று, மெய்ப்பொருள் நாயனாரைக் கொல்லவே, அன்று அவ்வேடத்தில் அங்கு வந்தான். அவன் எண்ணியபடியே மன்னனும், வேடத்தைக் கண்டு மயங்கி, முத்தநாதனைச் சிவனடியாரெனக் கொண்டு வணங்கிட, வஞ்சனை வெல்வது கண்டு முத்தநாதன் மகிழ்ந்து, புத்தகக் கவுளியைக் காட்டி, “மன்னா! நின்னிடம் தனித்திருந்து சில பேசி, மெய்ப்பொருள் உரைத்திட விழைகிறேன்” என்றுரைக்க, மன்னன், தேவியை அனுப்பிவிட்டு, தனித்திருந்து, “திருமந்திர மெதுவென்று கூறுக” என்று கேட்க, புத்தகக் கவுளியைக் காட்டி, “மன்னா! நின்னிடம் தனித்திருந்து சில பேசி, மெய்ப்பொருள் உரைத்திட விழைகிறேன்” என்றுரைக்க, மன்னன், தேவியை அனுப்பிவிட்டு, தனித்திருந்து, “திருமந்திர மெதுவென்று கூறுக” என்று கேட்க, புத்தகக் கவுளியிலே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மன்னனை முத்தநாதன் கொன்று, வஞ்சனைக்காரரை நம்பிடுபவர் உயிர் இழப்பர் என்ற மெய்ப்பொருளை நமக்கெல்லாம் உணர்த்தினான்.

முத்தநாதர்கள் இன்றும் உள்ளனர்!!

அவர்கள் இன்றும், யாரைக் கெடுக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனரோ, அவர்கள் எந்த வேடத்தைக் கண்டால் சொக்குவரோ, அதே வேடமணிந்து வருகின்றனர். தேசபக்த வேடத்தில் வரும் வஞ்சனைக்காரரின் வலையிலே வீழ்வோர், விபரீதமான விளைவுகளுக்கு ஆளாகித் தவிப்பர் என்பது திண்ணம்.
* * *

நிருபர் : காந்தியார் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்திலே நீங்கள் கலந்துகொள்ளப் போகிறீர்களா?

இராசகோபாலாச்சாரியார் : தாங்கள் கலந்துகொள்வதாக உத்தேசமோ?

நிருபர் : நான் காங்கிரஸ்காரனல்லவே!

ராஜ் : பிறகு, என்னை ஏன் கேட்கிறீர்கள்?

வார்தாவிலிருந்து திரும்பிய இராசகோபாலாச்சாரியாருக்கும் பத்திரிகை நிருபருக்கும் இத்தகைய பேச்சு நடந்ததாம். காங்கிரசல்லாத நீர் எப்படி, காந்தியார் துவக்கப்போகும் சத்யாக்கிரகப் போரிலே கலந்து கொள்ளப் போவதில்லையோ அதைப் போலவே, நானும், காங்கிரஸ்காரனல்ல. எனவே, நானும் அந்த, இயக்கத்திலே கலந்து கொள்ளப்போவதில்லை, என்பதே ஆச்சாரியார் பேச்சின் கருத்து, காங்கிரஸ்காரர் என்றுள்ளவர்கள், எல்லோரும் இந்தப் போரில் கலந்து கொள்வார்களா என்பதே சந்தேகம். சிறை புகவேண்டும் என்றதும், எத்தனையோ “தேச பக்தர்களுக்குத்” திடீர் காய்ச்சலும், குலைவலியும் வருவதுண்டு. குடும்பத்திலே தொல்லை, பாகப் பிரிவினையாகவில்லை, புதுக்கலியாணம் செய்து கொண்டு ஆண்டு ஒன்று கூடச்சரியாக முடியவில்லை, என்று ஏதேதோ கூறுவர், சிறை புகுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள, உள்ளே புகுந்ததும், ஆஸ்த்மா, அல்லது அபெண்டிசிடிஸ், குன்மம் அல்லது குமட்டல் என்ற ஏதாவதோர் வியாதி இருப்பதாகக் கூறி, சிறையிலிருந்து ஆஸ்பத்திரி, பிறகு அங்கிருந்து வீடு, வந்து சேரும் வித்தையைச் சிலர் செய்வர்.

காங்கிரஸ்காரர் அனைவருமே போகிறார்களோ இல்லையோ என்பதே சந்தேகமாக இருக்கும்போது காங்கிரசல்லாதவர்கள் இந்தப் போரிலே கலந்து கொள்வார்களா, மாட்டார்களா என்ற கேள்விக்கே இடமில்லை. கேட்கவேண்டிய கேள்வியும் அதுவன்று.

நாட்டை எதிரிக்குக் காட்டிக்கொடுக்கும் கூட்டத்திலே நீர் சேருகிறீரா? என்பதே கேள்வி. மானமும் மதியும், நாணயமும் நற்குணமும் கொண்ட எவனும், எதிரிக்கு நாட்டைக் காட்டிக் கொடுப்பேன் என்று கூறமாட்டான்!

ஆனால், இந்த உபகண்டத்திலே, குறிப்பாகக், கங்கைக் கரைத் தீரத்திலே, காட்டிக் கொடுக்குங் கும்பல், (முத்த நாதர்கள்) பன்னெடு நாட்களாகவே வாசஞ் செய்து வருகிறது. கத்தி கேடயம் தாங்கத் தெரியாது அக்கூட்டத்துக்கு, காவி கமண்டலத்துடனோ, முப்பரி தர்ப்பையுடனோ காட்சிதரும் கபடக் கூட்டம், நெருக்கடியான நேரங்களிலே எதிரிகளுக்கு உளவு கூறியும், உள் நாட்டிலே கலக மூட்டியும், படை வரிசைகளிலே பீதி கிளப்பியும் பாமரரிடையே பேதம் விளைவித்தும், நாட்டை நாசமாக்கி வந்தன. நவநந்தர்கள் கால முதற்கொண்டு இந்த நாசகால வேலையைச் செய்து வந்ததற்குச் சான்றுகள் பலப்பல உண்டு.

ஐரோப்பாவிலே, நாஜிப்படைகள், திடீர்திடீரென வெற்றிகள் பெற்றதற்கு இத்தகைய துரோகிகளின் செயலே முக்கியமான காரணமாக இருந்ததென்பதை உலகறியும். இத்தகைய காட்டிக் கொடுக்கும் கும்பல், ஒவ்வோரிடத்திலே ஒவ்வோர் முறையைக் கையாளும். நாட்டு மக்களுக்குள்ள இயற்கையான சுதந்திரதாகத்தை எடுத்துக்கூறி, அதையே சாக்காகக் கொண்டு, எதிரிக்கு இடமளிக்
கும் இழிசெயல் இங்கு கையாளப்படும் முறையாக இருக்கிறது.

பிரிட்டிஷாரே வெளியே போய்விடுவீராக என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து சத்யாக்கிரக ஓமத்தை மூட்டுகிறேன், அதற்கு சமித்தும் சரகும் நெய்யும் நிவேதனப் பொருளும் சேகரியுங்கள் என்று வார்தா முனிவர் கூறிவிட்டாராம். வந்துவிட்டது சுயராச்யம் என்று கருதிக்கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தின் ஏமாளித்தனத்தை ‘முதல்’ எனக்கொண்டு தமது கடைசிச் சூதாட்டத்தை ஆடிப்பார்க்கப் போகிறாராம் காந்தியார். இவரது இந்தச் செயலை, வெளிநாடுகளிலே ஹிட்லருக்கு உடந்தையாக இருந்த உளவாளிகளின் செயலுடனும் பந்தியிலே பற்றுக் கொண்டிருந்த மெய்ப்பொருள் நாயனாரைக் கபடத்தால் கொன்ற முத்தநாதன் செயலுடனும் ஒப்பிட்டு நான் கூறுவது தக்க காரணத்தோடேயேதான், தகிடுதத்தமன்று. பிரிட்டிஷாரே வெளியே போ! என்று கூறுவது, ஜப்பானியரே உள்ளே வா! என்று அழைப்பதாக இருக்கமுடியுமே தவிர வேறென்னவாக இருக்க முடியும்! காந்தியார்களின் மனதிலே ஒரு தப்பெண்ணம் உண்டாகி விட்டது. அச்சுநாட்டுப் படைகளின் கை ஓங்கிவிட்டதாக அவை தீர்மானித்துவிட்டன. எனவே இந்தச் சமயத்திலே பிரிட்டிஷாரை வெளியே போ என்று கூறும் கிளர்ச்சியைத் துவக்கினால், ஹிட்லரும் டோஜோவும் களிப்படைந்து உச்சி மோருவர் என்று கருதுகின்றன. இது பித்துக்கொள்ளிப் போக்கின்றி மதியூகமாகாது. ஹிட்லரும், டோஜாவும் இந்தியாவுக்குள் நுழையவேண்டுமானால், பிரிட்டிஷ் படைபலத்தை எதிர்க்க வேண்டுமே என்று எண்ணி யோசிக்கின்றன. இந்த நேரத்திலே, உள்நாட்டிலே குழப்பம் விளைந்தால் உள்ளே நுழைய இது சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி அச்சுநாட்டுப் படைகள் குதூகலிக்கும். உள்ளே நுழைந்தால் எதிர்க்கப் படை ஏது! படை இல்லாதபோது பூர்ணகும்ப மெடுத்துக்கொண்டு பூர்ணைய்ய பரம்பரை, எதிர்கொண்டழைத்து வந்து “எமது மதத்தைப் பரிபாலித்து எம்மை இரட்சியும் பிரபோ!” என்று அஞ்சலி செய்து கெஞ்சும். மதத்தை ரட்சிக்க அச்சுநாடு தயங்காது! ஏனெனில் அதற்குத் தெரியும், இந்நாட்டுப் பேதம் பிளவு, ஜாதித் தொல்லை சாத்திரச்சண்டை, மூடத்தனம் முதலியன மதப்பிரசாதமே என்பது. எனவே இத்தகைய மதத்திலேயே இந்த மக்கள் மூழ்கிக்கிடந்தால் தான், அடிமைகளாக்கிச் சவாரிசெய்ய சுலபமாக இருக்குமென்று தீர்மானித்துவிடும்! பார்ப்பனருக்கும் இது பரமதிருப்தி! யாரோ ஆளட்டும் நமக்கென்ன! நமது ஆட்சியிலே குறுக்கிடாதவரையிலே இலாபம் நமக்கு என்று எண்ணிவிடும். திதி உண்டு, கோயில் பூஜை உண்டு, வேதபாராயணம் உண்டு, விதவிதமான பிரசாத வகையறாக்கள் உண்டு. பூசச்சந்தனமும் சூடிக்கொள்ளப் பூவுமுண்டு, அடிமைவேலை செய்ய சூத்திரருண்டு, என்ற இந்த ‘அரசு’ நிலைத்துவிட்டால் மற்றவற்றைப்பற்றிப் பார்ப்பனர்களுக்கு என்ன கவலை? யார் ஆண்டாலென்ன? எத்தகைய ஆட்சியாக இருந்தால்தான் என்ன? என்றே எண்ணுவர். உண்மையிலேயே தோழர்களே, இதுவரை இந்த உபகண்டத்திலே எத்தனைவிதமான ஆட்சி ஏற்பட்டிருந்தபோதிலும், பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலே குறுக்கிடவில்லை யென்றால் அந்த ஆட்சியைப் பார்ப்பனர் குறை கூறுவதில்லை. தங்கள் ஆதிக்கத்துக்குக் குறைவு வருகிறதெனக் கண்டுகொண்டால் போதும், உடனே சதி செய்வர், எதிரியிடம் நாட்டைக் காட்டிக்கொடுக்க முனைவர். இது தொன்று தொட்டு நடந்துவரும் வழக்கம். ‘இந்திரனே! எமக்கு நல்ல மழை கிடைக்கும்படி செய். எமது எதிரிகளான தஸ்யூக்களை நாசம் செய்” என்று ரிக் வேதகாலத்திலே கேட்ட ஆரியர்கள், இன்றும் அதே நோக்கத்துடனேயே வேலை செய்து வருகின்றனர், காட்டிக் கொடுத்திருக்கின்றனர். ஒவ்வோர் காலத்திலே ஒவ்வோர் விதமான முறையைக் கையாண்டுள்ளனர்.

நார்வே நாட்டைக் காட்டிக்கொடுத்த குவிஸ்லிங்கின் முறைக்கும், நாம் வாழும் இந்த உபகண்டத்தைக் காட்டிக் கொடுக்கக் கிளம்பியுள்ள குவிஸ்லிங் கூட்டத்தின் முறைக்கும் வித்தியாசமுண்டு. ஆனால் இருவரின் செயலும், துரோகத்தின் மீதே கட்டப்பட்டிருக்கிறது. இங்குள்ள குவிஸ்லிங் நாட்டுக்கு சுயராச்யம் கேட்கும் வேடத்தைப் புனைந்துகொண்டு நாற்புறமும் ஆபத்துச் சூழ்ந்துள்ள இந்த வேளையிலே நாட்டிலே குழப்பத்தை உண்டாக்கத் துணிந்து இந்தச் செயலை ஆதரிக்குமாறு மக்களிடமும் முறையிடக் காண்கிறோம். நாட்டுக்கு விடுதலை யார் வேண்டாமென்றார்கள்? யார் வேண்டாமென்று உரைப்பார்கள்? யார்தர மறுக்கிறார்கள்? தர மறுக்க யாருக்கு உரிமை உண்டு? விடுதலை என்பது பரிசன்று! கேட்டுப்பெற! அது ஒரு நிலை, நம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டால் அந்த நிலையை அடைதல் முடியும்! பக்குவமடையா முன்போ, காலம் கனியா முன்னமேயோ, அதை அடையத் துடியாய்த் துடித்தாலும், ஆட்டமாடினாலும், ஆப்பசைத்த மந்தி அடைந்தது போன்ற அவதியே அடைய வேண்டி நேரிடும். இதனை உணர மறுப்போரின், உள்ளத்திலே இருப்பது உண்மையிலே நாட்டு விடுதலை என்னும் நோக்கமன்று, நயவஞ்சகம் குடிகொண்ட உள்ளமே அத்தன்மையோருடையது.
சுதந்தரம் சுந்தரமான கருத்துள்ளது! அதை பெற்றுத்தான் தீரவேண்டும். அதிலே சந்தேகமில்லை. ஆனால் இப்போதுள்ள காலநிலை, சுதந்திரத்தைச் சுவஸ்திக்கொடியோன் சூறையாடும் நேரம்! ஜப்பானியர் அழிக்கும் காலம். வீரப்பிரான்சும், வெஞ்சமர் புரியும் வல்லமை கொண்ட பெல்ஜியமும், நாடி நடுங்கா நார்வேயும், பிறவும் தமது சுதந்திரத்தை இழந்ததைக் கண்டு, உலகம் பதைக்கும் நேரம். ஏராளமான படைபலம் கப்பற்கூட்டபலம், விமானபலம், இவ்வளவுடன் மக்களின் மன அரண் எனும் பலம்பெற்று தயாராகவும், கஷ்டநஷ்டமேற்கும் திறனுடனும் உள் நாட்டிலே ஒற்றுமையுடனும் இருந்தாலன்றி, சுதந்திரம் அரைமணி நேரமும் நிலைத்திருக்க முடியாதென்பதைக் கடந்த இரண்டாண்டுச் சம்பவங்கள் நிரூபித்துக் காட்டிவிட்டன. இந்நிலையிலே சுதந்திரம் கேட்பவர் ஒன்று இன்றைய உலகிலே அதன் நிலை யாது? என்பதை அறியாதவராக இருக்க வேண்டும், இல்லையேல் அறிந்தும், எதிரியிடம் கைக்கூலிபெற்று நாட்டைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தோராக இருத்தல் வேண்டும்.

பேர் துவங்கினதும் காந்தியார் இந்தச் சமயத்திலே, சர்க்காருடன் பேரம் பேசக்கூடாது, அது இழி தன்மையாகும் என்று கூறியதையும், நேச நாடுகள் தோற்று இந்தியாவுக்குச் சுயராச்யம் கிடைத்துப் பயனில்லை என்றும், லண்டன் மீது குண்டு பொழிந்தால் தனது கண்களிலே நீர் வழியுமென்றும் கூறியதுடன் இந்த யுத்தத்திலே இந்தியா கலந்து கொள்வதானால், இன்ன தேதிக்குள் சுயராச்யம் தந்துவிடுகிறேன் என்று பிரிட்டன் வாக்குத் தரவேண்டும், அதற்கான இறுதி எச்சரிக்கையை, காங்கிரஸ், பிரிட்டனுக்கு விடல் வேண்டும் என்று சுபாஷ் சந்திர போஸ் கூறினபோது அதைக் குறை கூறினதும், பின்னர், யுத்தத்தை எதிர்த்துப்பேச, பேச்சச் சுதந்திரம் வேண்டும் என்று கேட்டதும், அதைப்பெற, தனிப்பட்டவர்கள் சத்யாக்கிரகம் துவக்கியதும், அதிலே மந்திரிப்பிரதானாதியர் சிறை சென்றும், பட்டாளத்துக்கு ஆள் சேருவதோ, யுத்த நிதிக்குப் பணம் குவிவதோ ஒரு துளியும் பாதிக்கப்படாததையும், ஒரு முறை சிறை சென்றவர்கள், மீண்டும் போகமறுத்ததையும் கண்டு, சத்யாக்கிரகத்தை நிறுத்திக் கொண்டதையும், நன்கு தெரிந்து கொண்டுள்ளவர்கள், ஒரே வாரத்திலே போர், விறுவிறுப்பான போர், உக்கிரமான போர், உலகமே கண்டு அதிசயிக்கத்தக்க போர் என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் இந்தப்போர், புறப்படும் போது வேகமாகவும், போதையிலேயே வழி தவறியும், இடையிலே இடுப்பு முறிக்கப்பட்டும், சடுதியிலே சாயும் என்பதையும் நன்கு அறிவர். எட்டு மாகாணங்களை ஆண்ட பேர்வழிகள், காந்தியாரின் இடக்கரம் வலக்கரம் சங்கு சக்கரம், கதை தண்டம் என்ற அடைமொழிகளக்கு இலக்காக இருந்தவர்கள் சிறை புகுந்தபோதே, பத்திரிகைச் சலசலப்பின்றி பிறிதொன்று மில்லாது, பலிக்காது போய் விட்டதே. இம்முறை மட்டும் இடம் பொருள் ஏவல் தெரியாத கூட்டம் துவக்கப் போவதாகக் கூறும் இந்தப் போர், என்ன பலனைத் தரப் போகிறது? முன்பு நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் ஒரு வித்தியாசம் காட்டலாம் என்று காங்கிரஸ் வட்டாரம் கருதுகிறது. அதாவது, ஆங்காங்கு வகுப்புக் கலகத்தை மூட்டி விடலாம் என்று கருதுகிறது. இது என்ன பலன் தரும்? வகுப்புக் கலகத்துக்கு ஆஸ்பதமான காரணங்கள் இங்கு மலிந்து கிடப்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுமே யொழிய, நாடு சுயராச்யத்துக்கு இலாயக்காக இருப்பதையா காட்டும்! ஏனோ இந்தக் கெடுமதியும் மடைச்சதியும்?

பிரிட்ஷாரை வெளியே போகச்சொல்லி விடுகிறீரே, ஜப்பானியப் பேராபத்துக்கு என்ன செய்வீர்? என்ற கேள்விக்கு, “ஏதாவது செய்கிறோம்! ஒத்துழையாமையைச் செய்வோம்” என்று பதில் உரைக்கிறார்கள். என்னே பேதைமை! நம்மை ஒத்துழைக்கும்படி, ஜப்பான் கேட்டால்தானே, நாங்கள் ஒத்துழைக்க முடியாது என்று முடுக்காக இருக்க முடியும்! ஒத்துழைக்கும்படி, பிரிட்டிஷார் மட்டுமே கேட்பர்! ஆட்சியிலே பங்கும், அதிகாரத்திலே இடமும் தருவர், வட்ட மேஜை கூட்டினர் பிரிட்டிஷார், பிற நாட்டார், ஈட்டி முனையால் குத்துவர், உங்கள் நாடுதான், ஆனால் உங்களுக்குள் ஒற்றுமை பிறந்தால், ஆட்சியைத்தர அட்டியில்லை என்றுரைக்கின்றனர் பிரிட்டிஷார். பிறரோ, எமது வாள் வலியால் பெற்றோம், வாயைத் திறவாதீர், வாள் வலியிருந்தால், கிளம்புங்கள் பார்ப்போம் என்றே கூறுவர். இதுவரை, எத்தனை முறை, எத்தனை ஆயிரம் பேர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக என்று கூவியிருக்கிறார்கள், எவ்வளவு வன்மையான கண்டனங்கள், எவ்வளவு ஏளனமான பேச்சு, இவ்வளவுக்கும் இடந் தந்த பிரிட்டிஷ் இயல்பு போல, இனி வேறெந்த இயல்பும் இராது. ஒரு சமதர்ம பாட்லிவாலாவின் சொற் பொழிவைக்கேட்டுச் சகிக்காத ஆச்சாரியார், பாட்லிவாலாவைச் சிறையிலிடக் காணவில்லையா? சீராள சித்தி வலசாவில் தொழிலாளர் கிளர்ச்சி செய்தபோது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் காணவில்லையா? மதுரையிலே தொழிலாளர் மண்டை உடையத்தடியடி நடந்ததையும் தொழிலாளர் தலைவர்கள் சிறையிலே தள்ளப்பட்டதையும் கண்டோம், ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர் மொழிப்போருக்காகச் சிறையிலே தள்ளப்பட்டதைப் பார்த்தோம். இவ்வளவும் சாம்பிள் சுயராச்யத்திலே, பார்த்தோம்! இத்தகைய ஆட்சி நடத்தியவர்களிடம், பிரிட்டிஷாருக்கு இருப்பது போன்ற ஆட்சியும் அதிகாரமும், படை பலமும் இருந்திருக்குமானால், எழுதும் நானும், படிக்கும் நீங்களும், என்ன பாடு படவேண்டுமோ தெரியாது. இத்தகைய பேர்வழிகள், இன்று வெள்ளையரை விரட்டுகிறோம் என்று கூறும் வேடத்தை அணிந்துள்ளது, வேறு எதற்குமன்று, வெள்ளையர் நமது இனத்தின் உரிமைகளையும், இஸ்லாமியரின் இலட்சியத்தையும் சற்று மதித்து, ஓரளவு ஆதரிக்கத் தொடங்கி விட்டார்களே என்ற காய்ச்சலும் கடுப்புமேதான், இதைத் தோழர்களே உணருங்கள்.
* * *

“சுயராச்யமா வேண்டும்? எங்கள் நாட்டுக் கிளைவ், பிளாசி யுத்தத்திலே, உங்கள் நாட்டவரைத் தோற்கடித்து இந்நாட்டைப் பிடித்தார். மற்றோர் பிளாசியிலே, எங்கள் படைகளைத் தோற்கடித்து உங்கள் நாட்டை மீட்டுக் கொள்ளுங்கள்” என்று ஒரு வார்த்தை, பிரிட்டிஷ் சர்க்கார் சொன்னால், என்ன செய்வார்கள் காங்கிரசார்? காந்தியார் என்ன செய்வார்? ஓடோடி வார்தா சென்று அந்தராத்
மாவை அழைத்து, வரம் பெற்று, சர்வ சித்தி யாகம் செய்வாரா? அந்த யாகத்தின் பயனாக, நாற்பது கோடி மக்களைக் காக்க முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும், கின்னரர், கிம்புருடர், சித்த வித்தியாதரர்கள், ஓடோடி வந்து நின்று, ஓங்காரச் சத்தமிட்டுப் போர் புரிவார்களா? தக்ளிகள் துப்பாக்கிகளாகி, சர்க்காக்கள் சப்மெரைன்களாகிவிடுமா? கதர் துப்பட்டிகள் பலூன் பாரேஜ் (பலூன் அரண்) ஆகிவிடுமா! வீடுகளிலுள்ள குழவிக்கற்கள் உலக்கைகள் முதலியவை, பீரங்கிகளாகி விடுமா! என்னப்பா நடக்கும் தேசியத் தோழர், கூறு கேட்போம். ஏதோ ஜனநாயகம், தேசீயம், மனிதாபிமானம் முதலிய கொள்கைகளைப் பிரிட்டன் பேசுவதால், நம்மைப் பார்த்து, “பிளாசியில் பிடித்ததை மற்றோர் பிளாசி ஏற்பட்டால்தான் மீட்டுக்கொள்ள வேண்டும்” என்று கூறவில்லை. அங்ஙனம் கூறி விட்டால், உமது வண்டவாளம் விளங்கி விடுமே, தம்பி! இதைப் பலமுறை யோசித்துப்பார்.

நாட்டிலே, பிரிட்டிஷார் வெளியேறிவிட்டால் குழப்பம் விளையுமே, சட்டமும் சாந்தியும் இராதே, என்றுரைப்போரிடம், சகலமும் தெரிந்தவர் போல், “வரட்டுமே! அந்த வேதனையையும் பொறுப்போம்” என்று வீம்பு பேசுகிறார்கள் தேசீயத் தோழர்கள். அதன் விளைவு என்ன ஆகும் தெரியுமோ! மதியிருப்பின் யோசித்துப் பார்க்கட்டும்! பர்மாவிலே, எதிரியின் பிரவேசம் நேரிட்டதும், பிரிட்டிஷ் படை வாபசானதும், என்ன நடந்தது? பர்மாக்காரன் கத்திக்கும் இந்தியனின் கழுத்துக்கும் பொருத்தம் ஏற்பட்டது! இந்தியரின் கதிபற்றி, நடந்து வந்தவர்கள் கூறுவதைக் கேட்டுவிட்டுப் பிறகு சட்டமும் சமாதானமும் போனால்தான் என்ன என்றிருக்கும் போக்குச் சரியானதாகுமா என்று யோசித்துப் பார்க்கட்டும்!

எனது இனத்தவரைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் அம்சதூளிகா மஞ்சத்திலே படுத்துக்கொண்டு அப்சுர சுகிகளுடன் கொஞ்சிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. அவர்கள் மீது துவேஷமோ, கோபமோ கொண்டவர்கள் இல்லை, ஒரு சிறு கூட்டத்திற்கு துவேஷ மிருப்பினும், அதுவெள்ளத்தின் மீது மிதக்கும் தோணி போல், சூறை மோதியதும் சுக்கு நூறாகி
விடும்! நான் குழப்பம் வேண்டாம், கொந்தளிப்பு வேண்டாம், சட்டம் சரிந்து சாந்தி சாய்ந்து விடக்கூடாது என்று கூறுவது, ஆரியத் தோழர்களையும், வடநாட்டிலே வாட்ட வருத்தமின்றி உலவும் ஆரியதாசர்களையும் மனதிலே எண்ணி, அவர்களிடம் பரிதாபங்

கலந்த பாசம் கொண்டேதான், வல்லமை பொருந்திய பிரிட்டிஷ் ஆட்சி, காந்தியர்களின் வாய்ப் பேச்சினாலே ஓடிவிட்டது என்ற நிலைமை உண்டானால், தேசியத் தம்பி பாகிஸ்தானமும், திராவிட நாடும் தேவை என்று கூறுவோர், என்னென்ன எண்ணுவர், ஏதேது செய்ய முனைவர் என்பதைப் பற்றியும் சற்று எண்ணிப்பார்! அதற்கு முன்பு, வல்லமையுள்ள பிரிட்டிஷாரும் வெளியே போய்விட்டனர், இனி உள்ளே நுழைவதிலே தடை இல்லை என்று ஜப்பானியர்கள் எண்ணாமலிருப்பார்களா என்பதையும் யோசித்துப்பார். பிறகு உனது போரைத் துவக்கு.

9.8.1942