அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தூக்குவீர் கத்தியை!

கெர்ச் பிரதேசத்தைக் கசக்கிப்பிழிந்து விட்டோம் என்ற கர்வம் ஒருபுறம் இருப்பினும், கார்காவ் முனையில், மார்ஷல் டிமோ ஷெங்கோ, மாபெரும் படையுடன், பலத்த எதிர்ப்பையுஞ் சமாளித்துக் கொண்டு முன்னேறியபடி இருப்பது கண்டு ஹிட்லரின் நெஞ்சு துடிக்கிறது. போர் முனையிலுள்ள தளபதிகளோ, ஹிட்லரின் ஏதேச்சாதிகாரத்தைக்கண்டு முணுமுணுக்கிறார்களாம். எனவே ஹிட்லர் போர்முனைக்கு விரைந்தோடியிருக்கிறார். கார்காவில் நடக்கும் கடும்போரில் களத்திலே ஜெர்மன் பிணங்கள் குவிகின்றன. புதிய ஆயுதமொன்றை உபயோகிக்கிறோம், என்று பெர்லின், பீதிகிளப்பப் பேசுகிறது. டோனெட்ஸ் பகுதியிலே பாய்ந்துவரும் டிமோஷெங்கோவின் படைகளை பயமுறுத்தவே இதுபோல் பெர்லின் செய்தி கிளப்பியிருக்கிறது. மாஸ்கோ வாயிலிலே வந்துநின்று மிரட்டியபோதே கலங்காத ரஷியர், இந்த மிரட்டலுக்கா இப்போது பயப்படப் போகிறார்கள்! ஏராளமான துருப்புகளை அணிவகுத்துக் கொண்டிருக்கிறது சோவியத் சர்க்கார்! வட ஆப்பிரிக்காவிலே போர் வலுத்துவிட்டது. கார்காவ் முனையிலே கடும்போர் நடக்கிறது சீனாவைச் சிதைத்து விடுவதென்று சீறி ஜப்பான் ஆங்கு பெரும்போர் நடத்துகிறது. ஆஸ்திரேலியாவிலே, ஆசியா கண்டத்திலே புதிய அமைப்பு ஏற்படப்போகிறது, அதிலே சேரப்போகிறாயா இல்லையா என்று ஜப்பானியப் பிரதமர் டோஜோ கேட்கிறார், மிரட்டுகிறார். இங்ஙனம் போர் பயங்கரமானதாகிக் கொண்டே போகிறது. உள்நாட்டிலோ, பஞ்சமும் வேலையில்லாக் கொடுமையும், பயமும் பதைப்பும் மிகுந்து வருகிறது. ஹர்கொள்ளைக்காரரின் அட்டூழியங்கள் ஓர் புறம்! வேலை நிறுத்த வேதனை மற்றோர்புறம், விலைவாசி உயர்வு வேறோர்புறமும் வாட்டுகிறது. இந்தியத் தளபதி ஜெனரல் வேவல், பத்திரிகை நிருபர்களிடம் பேசுகையில் இந்தியாவின் பாதுகாப்புக்காக, ஏராளமான தளவாடங்கள் வந்து குவிந்தபடி இருப்பதாகவும், குறிப்பாக, விமான எதிர்ப்பு ஆயுதங்கள் வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். இது கேட்டு ஆறுதல் மட்டுமல்ல, உற்சாகமும் நம்பிக்கையும் கொள்கிறோம்.

சிங்கப்பூரில் இருந்ததைவிட பலமான பாதுகாப்புகள், இங்கு, கொழும்பிலும், கல்கத்தாவிலும் செய்து வைத்திருப்பதாகக் கூறுகிறார். படைபலமும் ஆயுதபலமும் இருப்பினும், இந்தப் போரிலே மக்களின் மனஅரண் மிக முக்கியம். இதனைத்தான் சீனாவும், ரஷியாவும் நமக்கு விளக்குகின்றன. போர்முனை எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், உள்நாட்டிலே மக்கள்முனை. இக்கருத்துக் கொண்டே தேசியப் போர்முனை இயக்கத்தை இங்கு துவக்கியுள்ளனர், சென்னை மாகாண கவர்னர் தேசியப் போர்முனை துவக்கவிழாவில் சொற்பொழிவாற்றுகையில், சகல ஜாதி, மத, கட்சியினரும் ஒன்று சேருமின் என்று கனிவுடன் அழைத்தார். மாகாணத்தின் பல நகர்களில் இவ்விழா நடைபெற்றது. தேசியப் போர்முனை அமைப்பில் அதிகாரிகளாக, பல தோழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மக்களைப் போர்முனை மனப்பான்மை கொண்டோராக்குவர், அதற்கான பிரசாரமும் செய்வர். ஆனால், மக்களிடையே ஓரளவு ஆயுதபலமும் இருக்கத்தானே வேண்டும். நேசநாடுகளிடம் நம்பிக்கை இருக்கிறது. ஜப்பானி யரிடம் வெறுப்பு இருக்கிறது. இதுபோதுமா! அமளி என்றதும் ஆயுதம் எங்கே என்றுதானே எவரும் கேட்பர். இச்சமயத்தில், இராணுவத்தினருக்கு மட்டுமல்ல வேலை! நாட்டு மக்கள் யாவருக்குமே வேலை! அவர்கள், ஓரளவு பயிற்சி பெறவேண்டும். ஓரளவு ஆயுதந்தாங்கும் உரிமை தரப்பட வேண்டும். கடலோரப் பிரதேசத்திலே எதிரிகள் எங்கா வதோரிடத்தில் காலடி வைத்தால், அவர்களை எதிர்க்க வேண்டுமே! எதைக்கொண்டு எதிர்ப்பது! இதை உத்தேசித்தே பிரிட்டனில், உள்நாட்டுப் பாதுகாப்புப் படை என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினர். (பிஷீனீமீ நிதணீக்ஷீபீ) இது இப்போது மிகப்பயன்படுகிறது! விமானத்தின் மூலம் பிரிட்டனில் வந்து குதித்த ஹெர்ஹெஸ் ஓர் உள்நாட்டுப் படையினரிடந்தானே சிக்கினார்! அது போன்றதோர் அமைப்பு இங்கு வேண்டும்.

போர் மனப்பான்மையை வளர்த்து, எதிரியை எத்தகைய கஷ்டமனுபவித்தேனும் முறியடித்தே தீருவோம் என்ற நெஞ்சுறுதி இருக்க வேண்டுமானால், சாதாரண காலத்திலே மக்கள் இருப்பதற்கும் போர்க்கால மக்களுக்கும், பார்த்ததும் விளங்கிக் கொள்ளக்கூடிய வித்தியாசம் இருக்கவேண்டும். ஒவ்வோர் நகரிலும், நகர மக்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி, உள்நாட்டுப் படைகள், தேசியப் போர்முனை அமைப்பாளர்களால், நிறுவப்பட்டு, அந்தப் படைகளுக்குச் சிறிது பயிற்சியும், கட்டாரியோ, கத்தியோ, தாங்கும் உரிமையுந்தரப்பட்டு, அவர்கள் உலவிக்கொண்டிருந்தால், உணர்ச்சி எங்ஙனமிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டுகிறோம், போர்முனையிலே இராணுவம் இருக்கிறது எதிரியை முறியடிக்க, நமது நகரிலேயே, உள்நாட்டுப் படை இருக்கிறது, பயம் என்ன இனி! என்று மக்கள் நம்பிக்கையும் தைரியமும் பெறுவர். கூர்க்கா வீரர்களுக்கு இருப்பதுபோன்ற கத்தியோ, கட்டாரியோ, இத்தகைய உள்நாட்டுப் படைக்குத் தரப்படவேண்டும். நாட்டுக்கு ஆபத்து என்றதும், “தூக்குவீர் கத்தியை!” என்றதும் நகருக்கு நகர், கிராமத்துக்குக் கிராமம், உடைவாளை உருவிக்கொண்டு உணர்ச்சியோடு கிளம்பும் வீரர்களைப் பெறமுடியும்! சர்க்கார் விரும்பினால், நீதிக்கட்சி இத்தகைய உள்நாட்டுப்படைக்கு, அஞ்சா நெஞ்சர்களாக, ஆயிர மாயிரம் வீரத்திராவிடர்களைத் தரத் தயாராக இருக்கிறது. தோள்வலிவும், மனவலிவும், போர்ப் பரம்பரைக் குணமும், அறப்போருக்காக ஆவியை அர்ப்பணம் செய்யும் ஆற்றுதலும் கொண்ட வீரவாலிபர்களை, நீதிக்கட்சி, அணிவகுத்து நிறுத்திக் காட்டமுடியும். சர்க்கார் சம்மதித்துப்பார்க்கட்டும்.

“தூக்குவீர் கத்தியை” என்று கூறட்டும், பல இலட்சம் கரங்களிலே வாள் விளங்கும், வீரம் ததும்பும், வெற்றிமலரும்! சர்க்கார் இதைக்கவனிப்பார்களா! பிரிட்டனிலே உள்நாட்டுப்படை அமைப்பில் பங்கு கொண்டவரும், ரஷியாவிலே, கொரில்லாப் படைகளை நேரில்கண்டு பல நுட்பங்களைத் தெரிந்து கொண்டவருமான விட்டிங்டன் என்ற நிபுணர், விரைவில் இந்தியா வரக்கூடுமென்றுரைக்கப் படுகிறது. அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, சர்க்கார், இதனைச் செய்ய வேண்டுகிறோம்.

31.5.1942