அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புன் சிரிப்பு!

வாதி: சொத்து என்னுடையது. முழுப்பொறுப்பும் என்னிடமே தந்துவிட வேண்டும்.

பிரதிவாதி: சொத்திலே எனக்குப்பாகம் உண்டு. அதைப் பிரித்துத் தந்துவிட வேண்டும். சொத்து நிர்வாகத்தை வாதியிடமே கொடுத்துவிட்டால், எனது பாகம் கிடைக்கமுடியாதபடி சூது நடத்தப்படும்.

நீதிபதி: பிரதிவாதிக்கு, சொத்திலே பங்கு உண்டு என்பதை வாதி ஒப்புக்கொள்கிறாரா?

வாதி: பங்குஉண்டு. ஆனால் சொத்தைப் பிரிப்பானேன். இருவரும் சேர்ந்து அனுபவிப்போம்.

பிரதிவாதி: வேண்டாம்! வேண்டாம்! அவர் டாம்பிகச் செலவாளியாகவும், நான் உழைப்பாளியாகவும், அவர் அதிகாரஞ் செலுத்தவும் நான் அடங்கி ஒடுங்கி இருக்கவும் நேரிடும்.

வாதி: அந்தப்பயம் வேண்டாம், நான் மிக நல்லவன். நானூறு நற்சாட்சிப்பத்திரங்கள் உள்ளன பாருங்கள்.

கோர்ட்டார்: சரி! இருவருக்கும் பங்கு உண்டு. பிரதிவாதி பிரிவினை கோருகிறார். சொத்துச் சீரழியும் என்று வாதி அஞ்சுகிறார். சொத்து, வாதியின் ஏகபோக அனுபோகமாகுமென்று பிரதிவாதி பயப்படுகிறார். இந்நிலையில், பிரித்துவிடுவது தான் முறை. ஆனால், இப்போது சொத்தின்மீது கடன் இருக்கிறது. அதைத்தீர்த்து, சொத்தைமீட்டுக் கொள்ளவேண்டும். அதற்காக, இருவரும் சேர்ந்து இன்னின்ன விதத்திலே ஒத்துழைத்து, சொத்தை மீட்டுக் கொள்ளட்டும். பிறகு பிரித்துக்கொடுக்க நான் இசைகிறேன். இடையே அவர்கள் பிரிவினை வேண்டாமென்று தீர்மானித்து விட்டாலும் எனக்குச் சம்மதமே.

பிரதிவாதிக்குப் புன்சிரிப்பு! வாதிக்கு வாட்டம்!

வஞ்சனையாக, சொத்து நிர்வாகமுழுவதையும் தான் பெற்றுக் கொண்டு, பிரதிவாதிக்குப் பட்டை நாமமிட வாதி கருதியது ஈடேற வில்லை. நியாயத்தைக் காட்டிக்கேட்போம், நடப்பது நடக்கட்டும், ஒருகை பார்த்தே விடுவோம் என்பது பிரதிவாதியின் எண்ணம். வஞ்சனைக்கு இடங்கிடைக்கவில்லையே என்று வாதி வாட, நீதிக்கு இடமிருக்கிறது என்ற நம்பிக்கையால், பிரதிவாதி மகிழ, கோர்ட் கலைந்தது. வாதி காங்கிரஸ்! பிரதிவாதி முஸ்லீம்லீக்! சொத்து, இந்திய நிர்வாகம், கோர்ட், டில்லிமாளிகை, நீதிபதி சர். கிரிப்ஸ்!

முதலில் காங்கிரஸ் தலைவர் மௌலானா அபுல்கலாம் ஆசாத், சர். கிரிப்சைக்கண்டு பேசிவிட்டு வந்தார், முகத்திலே உற்சாகமே காணப்படவில்லை, என்றும், பிறகு, முஸ்லீம்லீக் தலைவர், ஜனாப் ஜின்னா, சென்று பேசிவிட்டு வந்தார், அவர் முகத்திலே புன்னகை ஜொலித்தது என்றும், பத்திரிகைகளில் வெளிவரக்கண்டோம், மேலே கூறிய, வழக்குரைக் காதை நினைவிற்கு வந்தது. நடந்தது அதுதானா? நாள் சில செல்லின், விளக்கமாகத் தெரிந்துவிடும்.

சொத்தை, சொந்தக்காரிடம் தருவதுபோல நாட்டுக்கு ஏற்ற எதிர்கால அரசியல் திட்டம் வகுப்பதென்றால், நமது பங்கு இதுவெனக் குறித்து தனியாக்கிக்கொடுத்து விடுங்கள். 4 மாகாணங்கள் எம்முடையது - என்று முஸ்லீம்லீக் கேட்கிறது. ஆனால் சொத்தின் மீது கடன் இருப்பதுபோல், நாட்டின் தலைமீது ஆபத்து இருப்பதால், எதிர்கால அரசியல் நிர்ணயம் பற்றிப் பிறகு யோசிப்போம், முதலிலே, சொத்தைக் கடன் காரரிடமிருந்து மீட்பது போல், எதிரியை விரட்டும் வேலையில் ஈடுபடுவோம், அதற்காக, வழக்கை ஒத்திவைத்துவிட்டேனும், ஒன்றுபட்டு வேலைசெய்வோம் என்றும் கூறுகிறது. கிரிப்ஸ் கோர்ட்டின் தீர்ப்பு, நாம் மேலே கூறியுள்ளபடி இருப்பின், சொத்துக்கும் சேதமில்லை, நீதிக்கும் நடுக்கமேற்படாது. பார்ப்போம் பொறுத்திருந்து, பிரபல பாரிஸ்டர், நீதிபதி ஸ்தானத்திலமர்ந்திருக்கிறார், அவர் வாதிடுகிறாரா, நீதியைத் தீட்டுகிறாரா என்பதை!

29.3.1942