அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பட்டாபி வெற்றி!

பட்டாபி சீதாராமய்யா வெற்றி பெற்று விட்டார்.

பாபு சுபாஷ் சந்திரபோசுடன் போட்டியிட்டு முன்பு தோற்றார். இப்போது, பாபு புருஷோத்தம தாஸ் தாண்டனுடன் போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.

தாண்டன்- பட்டாபி, போட்டி பலமாகவே இருந்தது- பல பிரச்சனைகளை உள்ளடக்கிய தாகவும் இருந்தது.

மூன்று காரணங்கள் பட்டாபியின் வெற்றிக்கு.

1. தென் இந்தியர் ஒருவர் எப்படியாவது, காங்கிரஸ் தலைவராக வரவேண்டும், என்ற எழுச்சியும் அதன் காரணமாக எடுத்த்துக் கொள்ளப்பட்ட முயற்சியும்.

2. சமஸ்தானக் காங்கிரசிலே பட்டாபிக்கு, தாண்டனைவிட அதிகமான தொடர்பு இருந்த தால், சமஸ்தானத் தலைவர்களின் ஆதரவு பட்டாபிக்கும் கிடைத்தது.

3. தாண்டன், பதவியிலுள்ள காங்கிரஸ் கார்களின் ஊழல்களை அம்பலப்படுத்திப் பேசி விட்டார்- அதனால் ஏற்பட்ட அருவருப்பும், அச்சமும், பதவியிலுள்ள காங்கிரசார், பட்டாபியைப் பீடத்தில் அமர்த்தி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டனர். வெறும் தாண்டனே கண்ணீர் பொழிந்த வண்ணம் கண்டித்தாரே, அவர் காங்கிரஸ் தலைவருமாகி விட்டால், என்ன செய்வாரோ, என்ற பயம், அவர்களைப் பட்டாபியிடம் பரிவு காட்டச் செய்தது.

தென்னாட்டவர், என்பது இயற்கையான, பலம் பொருந்திய ஓர் உணர்ச்சி, என்பதற்கு பட்டாபி தேர்தல் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

ஆனால், இவ்வளவு இருந்தாலும் சமஸ்தானக் காங்கிரசின் தொடர்பு பட்டாபிக்குப் பலமாக இருந்திருக்கவில்லையாகையால், அவருக்கு வெற்றி கிடைத்திருக்காது. ஓட்டு விவரத்தை ஆராய்ந்து பார்த்தால், இது நன்கு விளங்கும். உதாரணமாக, கிழக்கு பஞ்சாப் சமஸ்தானங்களில், பட்டாபிக்கு 27 ஓட்டுகள் கிகிடைத்தன, தாண்டனுக்கு ஒரே ஒட்டுதான்! சமஸ்தானங்களிலே உள்ள தலைவர்களுக்கு பட்டாபியிடம் தொடர்பு அதிகம்- தாண்டன் அவ்வளவாகத் தெரியாது.

சமஸ்தானங்களிலே, இவ்விதமான செல்வாக்கு பட்டாபிக்கு இல்லையானால், நிலைமை வேறாகி இருக்கும்.

வங்காளம், 181 ஓட்டுகளைத் தாண்டனுக்கு அளித்து- பட்டாபிக்கு 72 ஓட்டுகளே கிடைத்தன! இங்கு மொத்தம் 255 ஓட்டுகள். இருவர் மட்டுமே. யாருக்கும் ஓட் தரவில்லை.

பட்டாபியின், வெற்றி மூலம், மற்றோர் உண்மை புலனாகிறது.

இந்தியர்- என்ற ஓர் உணர்ச்சி உண்மை யானது, உருவானது என்று பேசப்படுகிறதே, அது பொய் என்பதை பட்டாபியின் வெற்றி காட்டு கிறது. எப்படி எனில், பட்டாபிக்கு ஆதரவு தர வேண்டுமென்று அறிக்கைகள் விட்ட நமது மந்திரி மார்கள், தாண்டனும் - பட்டாபியும், தாங்களும் ஒரே இந்திய இனம் என்று மனதார நம்பியிருந்தால், பட்டாபி, தாண்டனைவிட அறிவாற்றலில், அனுபவத்தில் சிறந்தவர். ஆகவே அருக்கு ஓட் அளியுங்கள்என்று மட்டுந்தானே கூறவேண்டும்! ஆனால் அமைச் சர்கள் கூறினது அதுவல்ல- பட்டாபி, தென்னாட் டவர்- தென்னாட்டவர் காங்கிரசின் தலைவராக, நெடுங்காலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. எனவே, பட்டாபிக்கு ஓட் கொடுத்து இந்த மனக் குறையைப் போக்கிக் கொள்ள வேண்டாமா என்று பேசினர்.

ஏன், இந்திய இனம், எனும் உணர்ச்சி, தென்னாட்டவர் என்ற உணர்ச்சிக்கு இடம் அளித்தது?

இந்திய இனம் என்ற உணர்ச்சி போலி யானது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

ஆந்திரர்- தமிழர், என்ற பேதப் பேச்சு, தென்னாட்டவர்- வடநாட்டவர், என்ற பிரச்னை யின்போது இருக்குமிடம் தெரியாது மறைகிறது. இது முக்கியமானது மட்டுமல்ல, மகிழ்ச்சி தரு வதுமாகும். ஆந்திர, தமிழக கேரளப் பகுதிகள் அனைத்தும் தென்னாட்டவர் என்ற காரணத்துக் காக, பட்டாபியின் பக்கம் ஆதரவு காட்டின.

இனி, இந்த வெற்றியின் காரணமாகச் சில புதிய பிரச்னைகள் கிளம்ப இருக்கின்றன.

பட்டாபி, ஆந்திரம், தனி மாகாணமாக வேண்டுமென்பதிலே தளராத நம்பிக்கைக் கொண்டவர். ஆந்திரர் தனி மாகாணக் கோரிக்கை விஷயத்திலே மிகமிக பரபரப்பு அடைந்துள்ளனர்.

பண்டித ஜவஹர் உள்ளிட்ட பல தலைவர் கள், மொழி வழி மாகாணங்கள் அமைப்பதை, இப்போது தேவையற்ற காரியம் என்று கூறுகிறார்கள்.

காங்கிரசுக்குத் தலைவராக ஒரு ஆந்திரர் வந்தபிறகும், ஆந்திரத்தைத் தனி மாகாணமாக மல் இருக்கலாமா? என்ற எண்ணம் ஏற்படும். பட்டாபியை ஆந்திரர், தனி மாகாண அமைப் புக்காவன செய்யும்படி வற்புறுத்தப் போகிறார்கள்.

படேல், பாஷாவாரி அமைப்பு, இந்திய யூனியன் அமைப்பு சக்தியைக் சிதைக்கக் கூடியது. பல சிக்கல்கள் நிறைந்தது. மாகாணத்துக் குள்ளாகவும், மாகாணத்துக்கு மாகாணமும் மனமாச்சரியங்களை மூட்டக்கூடியது என்று எண்ணுபவர்.

பட்டாபி மொழிவாரி மாகாண அமைப்புக் காக வேலை செய்யத் தொடங்கினால் படேலுடன் மோதிக் கொண்டாக வேண்டும்! இரும்பு மனிதரல்லவா, படேல்!! படேல் - பட்டாபி மோது தலின் விளைவு என்னவோ, யார் கண்டார்கள்!

(திராவிட நாடு - 31.10.1948)