அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


நமது செல்வம்
‘முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் ஒரு முழு மதி’ போலவும் -

முள்ளை எதிர்த்து முன் வந்து நாம் நுகர வீசும் மலர் மணம் போலவும் -
தகுதி உடையாருக்குத் தடைகள் என்னதான், எவ்வளவுதான், யார்தான், எத்தனை நாட்களுக்கு விதிக்கினும் - அவர்களின் கீர்த்தியை மறைக்க முடியாது; அவர்தம் நிலையைக் குலைத்துவிடவும் இயலாது.

எவ்வளவுதான் நிந்தனையும், பழியும் சுமத்தப்பட்டாலும் - மாற்றார் எவ்வளவுதான் தாக்கினாலும் - தவறான பிரச்சாரம் செய்து வந்தாலும் - நீதிக்கட்சி மணிகளின் ஒளியை மங்க வைக்க முடியாது.

அத்தகைய மணிகளில் ஒன்றுதான் - பெரியார் அவர்களின் பேரன்புக்குப் பாத்திரமான ‘தமிழர் எழுச்சியின் சித்திரம்’ - ‘திராவிட ரத்தினம்’ - சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள்.

இலண்டனில் உள்ள (பிரிட்டன் அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும்) இந்திய அமைச்சரின் ஆலோசனையாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1940 மார்ச்சு 11ஆம் தேதி பதவியை ஏற்றுக்கொண்ட அவர் பணியாற்றத் தொடங்குவார்.

நமது சர். செல்வம் பொறுப்புள்ள பதவிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்; ஆனால், பொறுப்புள்ள நிருவாகம் அவருக்குப் புதிதல்ல.

அவர், “எனக்கு வாதாடத்தான் தெரியுமேயொழிய, நாடாளத் தெரியாது” எனக் கூற வேண்டிய நிலையில் உள்ளவர் அல்லர்;

சர். செல்வம் வாதாடியுள்ளார்! நாம், அவரது பிரபல வழக்கறிஞர் வாழ்வை மட்டுமே குறிப்பிடவில்லை; அவர் தமிழருக்காக வாதாடி வந்ததைத்தான் பெரிதும் குறிப்பிடு
கிறோம்.

அவர் நாடாண்டும் இருக்கிறார்!

நாட்டைத் திறம்படவும் அவர் ஆண்டு இருக்கிறார்!

நாட்டை ஆண்டதுடன், நம்மவர் உயரும்படியான நன்முறையில் ஆண்டுள்ளார்!

தமிழர் செல்வம்
போர்க்குணமும், தமிழர் வாழ்வுக்காகப் பணியாற்றும் திறனும் படைத்த சர். செல்வம் - புதிய களம் சென்று, புது முறையில் போர் புரிந்து, தமிழரின் கீர்த்தியை நிலை நாட்டுவார் என்பதில் தமிழ்நாடு நம்பிக்கை வைக்கிறது: “வாழ்க செல்வம்!” என்று வாயார, மனமார வாழ்த்துகிறது.

தஞ்சையில் சிறந்த வழக்கறிஞராகவும் பிறகு ‘பப்ளிக் பிராசிகூட்டர்’ ஆகவும் இருந்து புகழ்பெற்று, பொதுமக்கள் தொண்டில் புகுந்து, தஞ்சை நகரசபை, ஜில்லா போர்டு, கல்விக் கழகம் ஆகியவற்றில் தலைமை பூண்டு நடத்தி - இலண்டனில் முன்னர் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் பிரதிநிதியாகச் சென்று நம்மவர் சார்பாகப் பேசி, சென்னை அரசிலே நிருவாக அதிகாரியாக வீற்றிருந்து - சர். செல்வம் பலப்பல துறைகளில் பணியாற்றியுள்ளார்.

எனவே, பொறுப்பும் புகழும் பொருந்திய பதவி அவருக்கு வழங்கப்பட்டு, அவர் இங்கிலாந்து சீமை சென்று, இந்திய அமைச்சரின் ஆலோசனையாளராக வீற்றிருக்கப் போவது கேட்டு நாம் மிகமிக மகிழ்கிறோம்.

சர். பன்னீர்செல்வம் - தமிழரின் வெல்வம். அவருக்குக் கிடைத்துள்ள பதவி, தமிழருக்கு அளிக்கப்பட்ட பதவி; அவர் உயர்வு. தமிழர் உயர்வு; அவர் மகிழ்வு, தமிழர் மகிழ்வு!
எனவே, அவரை வாழ்த்துகிறோம் எனில், அது தமிழ் நாட்டவரை வாழ்த்துகிறோம் என்று பொருள்.

சர். செல்வம் சாய்வு நாற்காலியில் படுத்துறங்கிக்கொண்டு இருந்தவர் அல்லர்; போரில் பங்கெடுத்துக் கொண்டிருந்தவர்!

சர். செல்வம் வயது முதிர்ந்து வேலை ஏதும் செய்ய இயலாது எனக் கருதப்படும், வேலையை விட்டு விலகியவர் அல்லர்; வேலை பல புரியும் விறுவிறுப்பான பருவத்தில் உள்ளவர்!

வானுலகில் வசிக்கும் வாய் வேதாந்தி அல்லர் அவர்; செய்தி ஞானத்துடன் உலக அனுபவம் பெற்றவர்!

‘விடுதலை – நாளிதழ்: 20.1.1940