அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இஃதன்றோ தோழமை!

பாகிஸ்தானை ஒப்புக்கொள்வதாகப் பாசாங்கு செய்து, லீகினரை மயக்கி, திராவிடரைத் தட்டிவிட்டு, சர்க்காரைத் தழுவலாம் என்று ஆச்சாரியார் மனப்பால் குடிக்கிறார். ஆச்சாரியாரின் சுழல் சுற்றுப்பயணம், கனல் கக்கும் பிரசங்கம், அறிக்கைகள், முதலியன கண்டு, இன்றுவரை, ஜனாப் ஜின்னா மௌனம் சாதிக்கிறார். கக்சார்களின் தலைவர் எழுதிக் கேட்டதற்கும், கடிதத்திலே இதுபற்றி விவாதிக்க இயலாது என்றுரைத்துவிட்டார். ஜனாப் ஜின்னா, ஆச்சாரியாரின் போக்கைக் கண்டு ஆனந்த மடைந்ததாகவோ, பரவசமுற்றதாகவோ, ஒரு குறிப்பும் காட்டிக்கொண்டாரில்லை. பெருங்குணம் படைத்தோரின் இயல்பே அதுதான். தூற்றினால் துடிப்பதில்லை, போற்றினால் பூரிப்பதில்லை! கடமையைச் செய்வர், கலங்கமாட்டார்! கஷ்ட நஷ்டமேற்பர், கண்பிசைந்து கொள்ளார்! ஜனாப் ஜின்னா, ஆச்சாரியாரை ஓடோடிவந்து ஆலிங்கனம் செய்துகொண்டு, “ஆச்சாரியாரே! உமது உதவிக்கு எமது வந்தனம்” என்று கூறமாட்டார். அவர் அல்லா பக்ஷல்ல, அற்ப சந்தோஷப் படவோ, அலறவோ, ஆனந்தத்தாண்டவமாடவோ, தேவையில்லை. அவர், அரசியல் ஊஞ்சலாடுபவருமல்ல, ஆச்சாரியாரைத் துணைகொள்ள, கவி இக்பாலின் கனவு, இன்று ஜனாப் ஜின்னாவின் திட்டம் பாகிஸ்தான் திட்டமாக வெளிவந்து இருக்கிறது. கவி இக்பாலின் கனவு, காலத்தினால் கலனாகாத, நவீன நாகரிகத்தினால் போட்டியிட முடியாத, உலக விற்பன்னர்களால் வியக்கப்படும் தாஜ்மஹால், அதிலே உலவிய மன்னர்களின் சரிதை, ஆகியவற்றால் உண்டான உணர்ச்சி! இத்தகைய பாகிஸ்தானுக்கு ஒரு பார்ப்பனரின் ஆதரவு கிடைத்தாலென்ன, கிடைக்காமற் போனாலென்ன! அதிலும் இன்று ஆதரவு காட்டும் ஆச்சாரியார், நேற்றுவரை ஜனாப் ஜின்னாவைத் தூற்றியவர், நாளை மீண்டும் தூற்ற ஆரம்பித்தால் நாம் ஆச்சரியப் படமாட்டோம். எனவேதான் ஜனாப் ஜின்னா இதுவரை, மௌனமாகவே இருக்கிறார்.
திராவிடரும் இஸ்லாமியரும் தோழர்கள், கூட்டுப் படை அமைத்துப், போர்நடத்தி வெற்றிக்கொடியை நாட்ட வேண்டியவர்கள். இந்தத் தோழமையை, முஸ்லீம் லீக்கினால் நிறுவப்பட்ட தேசப் பாதுகாப்புச் சபையின் அங்கத்தினரும், பிரபல தலைவருமான ஜனாப் கலிகுஸ்மான், அண்மையில் கள்ளிக்கோட்டையில் பேசுகையில் அழகுறக் கூறினார்.

“தென்னாட்டு ஆட்சி திராவிடரிடமே இருத்தல் வேண்டும். திராவிடர்களுக்குத் திராவிடஸ்தானம் தேவை. அவர்கள் இனி ஆரிய ஆட்சியிலே இருக்கச் சம்மதிக்க மாட்டார்கள்” என்று அன்பர் கலிக்குஸ்மான் கனிவுடன் கூறினார். தமக்குச் சாதகமான, பாகிஸ்தான் ஆச்சாரியாரால் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது என்பதற்காக அவர் தென்னாட்டு அடிப்படைப் பிரச்னையாகிய, திராவிடநாட்டுப் பிரச்னையை மறந்தாரில்லை. அதை மறந்து பேசும் ஆச்சாரியாருக்குச் சரியான சவுக்கடி தருவதுபோல், ஜனாப் கலிக்குஸ்மான், பேசியுள்ளார். இஃதன்றோ தோழமை!

ஆனால் ஆச்சாரியார், இதனை உணருவாரா! நமக்குச் சந்தேகமே. நல்ல மாட்டுக்குத்தான் ஓர் அடி! நல்ல மனிதருக்கு ஒரு சொல்! ஆச்சாரியார், லீகரும் திராவிடரும் சேர்ந்து அடிமேல் அடி தருவதுபோல், செய்த பிரசாரத்துக்குப்பிறகு, மூன்றாண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானை மட்டும் ஒப்புக்கொண்டிருக்கிறார். இனி திராவிட நாட்டுப் பிரிவினைப் பிரச்சினையையும் ஒப்புக் கொள்ளச் சிலகாலம் பிடிக்கும். நமது கட்டுப்பாடான பிரசாரமே அந்த நிலைமையை உண்டாக்கும். திராவிடத் தோழர்களே! எங்கே உங்கள் சங்கநாதம்!

31.5.1942