அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இரண்டு மூளைகள்!

இருப்பது இரண்டு மூளைகள்! அதிலே ஒன்று உருகிவிட்டது, மற்றொன்று குழம்பிவிட்டது!! நிலைமை எப்படி என்பதை விளக்கவேண்டுமோ!

காங்கிரசிலே “பிரதான புருஷர்கள்” “ஜீகள்,” இருவர். ஒருவர் காந்தியார், மற்றொருவர் ஆச்சாரியார். முன்னவருக்கு மூளை உருகிவிட்டது, மற்றவருக்குக் குழம்பிவிட்டது. நாமல்ல கூறுவது. இருவரையும் ஏத்தி ஏத்தித் தொழுதுவந்து, இதுபோது எடை போட்டுப்பார்த்துத் திருச்செங்கோட்டாரைவிட வார்தாவாசியே கனமிக்கவர் என்று கண்டு அவர் காலடி தொழுவதே ஜென்ம சாபல்ய வழி என்று கருதும், ஏடு கூறுவதை நாம் எடுத்துரைத்தோம், புனைந்தோமில்லை.

“இந்திய விடுதலைக்காக மகாத்மாகாந்தி இரவும் பகலும் தம் மூளையை உருக்கிக் கொண்டிருக்கிறார்.”
* * *

குழம்பியிருக்கும் அவருடைய (ஆச்சாரியாருடைய) நுண்ணறிவுக்கு இனித்தெளிவு கொடுக்கக் கூடியவை கீதையும் உபநிஷத்துக்களும் தான்.”

18-6-42ல் பாரததேவி, தீட்டியுள்ள தலையங்கத்திலே காணக் கிடைக்கும் தங்கமொழிகள். காந்தியாருக்கு மூளை உருகிக்கிடக்கிறது! ஆச்சாரியாருக்குக் குழம்பிவிட்டது!!

பரிதாபத்தைப் பாரீர், இரு தலைவர்களுக்கு இக்கதி எனில், இதை எண்ணி எண்ணி ஏங்கும் தொண்டர்களின் துயரம், எப்படியிருக்கும்! அந்தோ அவர்கள் கதி என்ன! வார்தா முனிவர், “போர்” என்கிறார், ஆச்சாரியார், “அமைதி” என்கிறார். முன்னவர் கருத்துக்கு முற்றிலும் மாறான கருத்துரை காட்டுகிறார், பின்னவர். சம்பந்திகளின் சமர், நகைச்சுவைக்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகிவிட்டது.

காந்தியாரின் புதுத்திட்டம் வெளிவந்ததும் ஆச்சாரியார் அதன் மண்டைமீது ஓங்கி அடித்துவிட்டார். காந்தியார்மீது மட்டுமா அடிவிழுந்தது? காங்கிரசும் தப்பவில்லை!

“காங்கிரசின் ஒரு கோஷத்துக்காகப் பணிந்து பிரிட்டிஷார் இந்த தேசத்தைவிட்டு அகன்றுவிடுவார்களென்று தோன்றவில்லை.” என்று ஆச்சாரியார் கூறிவிட்டார். காங்கிரசின் குரலே இந்தியாவின் குரல் என்று கூவியவர்தான், என்றபோதிலும், நாட்டிலே உள்ள நிலைமையை இனியும் மறைத்துப் பயனில்லை என்பதை உணர்ந்து, காங்கிரசின் ஒரு கோஷம் கிளம்பிப் பயனில்லை என்று கூறிவிட்டார். ஆம்! இவரது கேளாகக்காதையே, நமது இந்தி எதிர்ப்புக்கோஷம் துளைத்தது, பண்டித ஜவஹரின் காதையும் லீக்முரசு குடைந்தது, இனி மறைத்தால் பயனில்லை!

பிரிட்டிஷார் வாபிசானால், அந்த ஒவ்வொரு அங்குல நிலமும் ஜப்பானியாரிடம் பிடிபடும் என்று ஆச்சாரியார் கூறுகிறார். உண்மை!

நெடுநாட்களுக்குப் பிறகு உதித்த இந்த விளக்கம், ஆச்சாரியாருக்கு நின்று நிலைக்கவேண்டுமென்பதே நமது அவா!

காந்தியாரின் கருத்துகளுக்கு இதுவரை செவிலித்தாயாக இருந்துவந்த ஆச்சாரியார், இப்போது காந்தியாரின் கருத்து தொட்டிலிருக்கையிலேயே அதனைத் தொடமாட்டேன் என்று கூறிவிட்டு, தூர விலகி விட்டார். தலைவர்களின் இந்தப்போக்கு, ‘பாரத தேவிக்குப் புலம்பும் நிலைமையை உண்டாக்கி விட்டதைக்காண நாம் ஆச்சரியப்படவில்லை. ‘தேவி’யின் துயர் விரைவில் துடைக்கப்படுமென்ற நம்பிக்கையும் நமக்கில்லை.

நிற்க, பொதுவாகக் காங்கிரசின் நிலைமை பரிதாபத்துக்கும் பரிகாசத்துக்கும் உரியதாக இருப்பதைக் கண்டும், அதில் இருந்து கொண்டுள்ள தோழர்கள் இனியேனும் “வாபசாகக் கூடாதா!” என்றுதான் நாம் கேட்கிறோம்!

தோழர் சுபாஷ் சந்திரபோஸ், காந்தியாரிடம் முரண்பட்டதும், ஆச்சாரியார், போஸின் படகு ஓட்டைப் படகு என்றுரைத்து அதிலே ஏறாதீர் என்று எச்சரித்தார். இப்போது, காந்தியாரின் படகு, ஓட்டைப்படகு என்றுரைக்கிறார்! வாசகம் அதுவல்லவெனினும், கருத்து அதுவே! ஆச்சாரியாரின் “படகோ,” அடியிலே ஆயிரம் ஓட்டை என்று காந்தீயர்கள் கூறுகின்றனர். இந்த இரண்டும் வேண்டாம் தோழர்களே! சுயமரியாதைக் கொடி பறக்கும், நீதிக்கட்சியின் மரக்கலம், சண்டமாருதத்தையும் சமாளித்துக்கொண்டு சமதர்மபுரியை நோக்கிச் செல்கிறது, அதிலே வந்து சேருமின், என்று காங்கிரசிலே உள்ள தமிழரைக் கனிவுடன் அழைக்கிறோம்.

அரும்பு கோணிடினும் மணம் குன்றாதன்றோ! கரும்பு கோணிடினும், சுவை கோணுமோ! இரும்பு கோணியே யானையை அடக்கும் ஆயுதமாக மாறுகிறது. அதுபோல் நமது கட்சிவிரிந்து பரந்த நிலையில் இல்லை எனினும் அதுகூறும் நீதி, நிலைத்தே நிற்கும். நிதி குறைந்திடினும், நமது நீதி குறையாது. நீளப்புகழ் பரப்பி, நெடுமரத்தில் கொடிகட்டி, நிகர் இல்லை என்று நிகண்டு நீட்டிடினும், நீதிமறக்கும் கட்சி, நின்ற சுவர் மாரியில் சரிந்து வீழ்வதேபோல், சடுதியில் சாய்ந்தே தீரும். ஜாரின் கட்சி, எவ்வளவு பெரிய கோட்டை கட்டி, வைரத்தால் வாயலமைத்து, அதை எதிர்த்தெவரும் வராதபடி, சுற்றிலும் ஆத்தீகமெனும் ஆழிஅமைத்து மதக்குருமார்களெனும் முதலைகளை அதிலே வளர்த்து, கோட்டைமீது பரம்பரை எனும் கொடிமரத்திலே. படாடோபம் எனும் கொடியைப்பறக்கவிட்டு, பார்ப்போர் கண்கூசும் பளபளப்புடன், கேட்போர் செவி சிதறும் அட்டகாசத்துடன், ஆண்ட ஜார், பகல் பட்டினிகளால், பஞ்சைப் பனாதிகளால், நொந்த உள்ளத்தவரால், தாக்குண்டு தகர்ந்து தரை மீதுருண்டது, புராணமல்ல, சரிதம்! சரிதம் சாற்றும் பாடத்தைச் சற்றே செவிமடுப்பீர், சாயும் உமது முயல் போக்கு, சீறி எழும், ரோஷமும், வீரமும், ஆவேசமும், ஆண்மையும். உம்மைநீர் உணர்வீர், உலகில் உமைத் தடுப்பார் இரார், இஃது உண்மை!

“சம்புவே என்னபுத்தி சலந்தனில் மீனைநம்பி
வம்புறு வடத்தைப்போட்டு வானத்தைப் பார்ப்பதேனோ?
அம்புவி மாதேகேளாய் அரசனை அகலவிட்டு
வம்பனைக் கைபிடித்த வாறு போலாயிற்றன்றே!”

மீன் துள்ளி விளையாடுகிறது, நரியின் நாக்கு துடிக்கிறது, அந்தத் துடிப்பிலே தன்னை மறந்தது நரி, வாயிலிருந்த இறைச் சித்துண்டு ஆற்றிலே வீழ்ந்து போயிற்று. அதேநேரத்தில் மீனும், பாய்ந்தோடி விட்டது. உள்ளதும் போயிற்றே என்று நரி வானத்தை நோக்கிற்றாம் வாட்டத்தோடு!
இதைக்கண்ட கன்னியொருவள், சம்புவே இதென்ன புத்தி? என்று கேட்டாளாம். அவள் விஷயம் நரிக்குத் தெரியும்! எனவே நரி “இது தெரியவில்லையா! மன்னனைவிட்டு பிரிந்து வம்பனை இழுத்துக்கொண்டு நீ திரிகிறாயே, அது போன்றதே” என்றுரைத்ததாம். அவள் அரசனைப் பிரிந்து கசடன் பின் செல்பவள்! வேடிக்கையான இக்கதையைக்கூறி பாடம் புகட்டும் பாடல், விளக்கும் நிலைபோன்றுளது காங்கிரசிலே இன்று!

“ஐயா! ஆச்சாரியாரே! இது என்ன புத்தி? இருந்த மந்திரி வேலையை, எங்கேயோ இருக்கும், வைசிராய் நிர்வாக சபை வேலையை மனதில் எண்ணிக்கொண்டு இழந்துவிட்டு, இன்று இரண்டுமின்றி ஏங்குகிறீரே” என்று மௌலானா அபுல்கலாம் ஆசாத் கேட்க ஆச்சாரியார், “இது தெரிய வில்லையா மௌலானாஜீ! நீர் உமது இஸ்லாமிய சமூகத்தைவிட்டுப் பிரிந்து, காந்திக் கூட்டத்தில் கலந்துவிட்டு, இன்று அந்தக்கூட்டத்திலே பலரே இஸ்லாமியரின் இலட்சியத்தை ஆதரிக்கத் தொடங்கியதால் இரண்டுங்கெட்டு இருக் கிறீரே, அது போன்றுதான்” என்று பதில் கூறுவதுமான, நிலைமை இருக்கிறது. நன்று, நன்று, இவர்தம் நிலைமை! நாட்டுக்கு நாயகம், என்றுரைத்தனரே இந்த ரசாபாச நடன சாலையை! காண்மின், ஆங்கு நடைபெறும், காட்சிகளை! இனியும் இந்தக் கூட்டத்திலே இருப்பதோ, இக்கூட்டத்தில் ஒரு பகுதியையோ, பிறிதொன் றையோ நம்புவதோ, நன்மை பயக்குமா பயக்காதா என்பது கிடக் கட்டும், நமது தன்மானத்துக்கு இது காப்பா, மூப்பா என்பதனைச் சிந்தித்துப் பாருங்கள் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். மிக முக்கிய மான சமயங்களிலே, காங்கிரசில் நட்பு முறிவதும் நயவஞ்சகமும் சகஜமாகிவிட்டது. நெருக்கடியான நேரத்திலே குரு சீட சம்வாதம் சந்தைக்கடைச் சந்தடியையும் மிஞ்சிடக் காண்கிறோம்.

இந்நிலையில், நமது கட்சியினர், காங்கிரசின் கோளாறான காட்சியை எடுத்துக்காட்டி, தமிழரை அதனின்றும் பிரித்து, நீதிக்கட்சியில் வருமாறு அழைக்கும் பணியை ஆற்ற வேண்டும் என்பதே நமது அபிப்பிராயம். ஆச்சாரியாரின் ஆதரவு, பாகிஸ்தானுக்கும், திராவிடஸ்தானுக்கும் கிடைக்கிறதென்று நாம் பூரிக்கத் தேவையில்லை.

நாட்டிலே, பிரிவினைக்கோர் கட்சி, அதை எதிர்க்க மற்றோர் கட்சி என்று அமையுமேல், ஆச்சாரியார், காங்கிரசைக் கைகழுவி விட்டு, பிரிவினைக்கோரும் கட்சியில் சேருவதாக இருப்பின், அதுபோது அவர் நம் ஆதரவுக்கும் அன்புக்கும் பாத்திரமாவார். இதுபோது அவரது நிலைமை, அதுவல்ல.

நாம் ஜனநாயக வாதிகள், காங்கிரசோ பாசீச மனப்பான்மை கொண்டதென நாம் பன்னெடு நாட்களாகக் கூறிவந்துள்ளோம். இதே கருத்துடன் முன்னம் காங்கிரசிலே, தோழர்கள் நரிமன், கரே, ஆகியோர், போரிட்டனர். அதுபோது நாம் அவர்களின் வாதங் களையும், அவர்கள் காங்கிரசின் கோளாறை விளக்கினதையும் எடுத்துரைத்து, “இதுதான் காங்கிரசின் இலட்சணம்” என்று இடித்துரைத்து வந்தோமே யன்றி, நரிமனைத் தழுவினோமில்லை, கரேயிடம் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அந்தப்போக்கே இச் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றது என்பதோடு, அத்தகைய போக்கினால் மட்டுமே, காங்கிரசின் யோக்கியதையை வெளிப்படுத்தவும், அவ்விதம் வெளிப்படுத்துவதன் மூலம், அதிலிருக்கும் நமது தமிழ்த் தோழர்களை நமது பாதைக்குத் திருப்பவும் வழியாகுமென்றே நாம் கருதுகிறோம். இந்தப் போக்கின்றி, ஆச்சாரியாரை நாம் நமது அன்பர் எனக் கொள்வது,, காங்கிரசின் அவலட்சணத்தை அறிந்து அதைவிட்டு நீங்க வேண்டுமென்று கருதும் தோழர்களையும், இனியும் அங்கேயே இருக்கும்படி செய்வதாக முடியுமென்பது மட்டுமல்ல, நம்மவரில் சிலரைப்பலி கொடுத்துவிட வேண்டி நேரிட்டுவிடவுங்கூடும் என்று நாம் அஞ்சுகிறோம்.

அவசர ஆனந்தமடைவோர் பின்னர் கைபிசைந்துக்கொள்ள நேரிடும் என்று நாம் முன்பு கூறினோம். ஜனாப் ஜின்னாவின் ஆதரவில் நடப்பதும், முஸ்லீம் லீக்கின் முரசுமான ஞிகிகீழி டான், 14-6-42ல் இதே கருத்தைத் தலையங்கத்திலே தீட்டியிருப்பது கண்டு, மிக மகிழ்கிறோம்.
டான் எழுதுகிறது “முஸ்லீம்களிலே ஒருசாரார் எளிதிலே எதிலும் திருப்தி அடைந்துவிடும் வாடிக்கைக்காரர்களாக உள்ளனர். பாகிஸ்தானை இந்துபிரசாரம் பலமாக எதிர்த்தபோது இந்த வகையினர் பீதி கொண்டு விட்டனர்.

பிறகு பாகிஸ்தான் பிரேமை இஸ்லாமியரிடையே அமோகமாயிற்று. உடனே இவர்கள் தமது சந்தேகத்தைத் துடைத்துக் கொண்டனர்.

“சிலகாலம் சென்றதும், தோழர் ராஜகோபாலாச்சாரி யாருடைய சென்னைத் தீர்மானம் வெளிவந்தது. பாகிஸ்தான் தந்தாக வேண்டும் என்று அதன் மூலம் அவர் தெரிவித்தார். இது (எளிதாகத் திருப்தி அடைகிற) அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகம். எனவே அவர்கள் தோழர் ராஜகோபாலாச்சாரியாரை, தமது வீரர் என்று வாழ்த்தலாயினர். திடீரென தோழர் ராஜகோபாலாச்சாரியார் மனம்மாறி, பாகிஸ்தான் ஆதரவாளராகி விட்டார் என்று அவர்கள் எண்ணினர். ஆனால், அது மனமாற்றமன்று. அரசியல் சாணக்கியமே யாகும். ஓராண்டுக்கு முன்பும் தோழர் ராஜகோபாலாச்சாரியார், இந்துமகாசபைத் தலைவர்கள் போன்றே பாகிஸ்தானை எதிர்த்தார். பசுவை வெட்டுவது போன்றது பாகிஸ்தான் என்று கூறும் அளவுக்கு இருந்தார். அவர் இப்போது தீரமாக இருப்பதை அறிவாளிகள் போற்றவேண்டுமென்பதில் சந்தேகமில்லை, ஆனால், இது நமது பிரச்சினையைத் தீர்த்துவிட்டதாகாது. நமது இலட்சியம் இன்னொரு வரின் உதவியாலோ ஆதரவாலோ, கைகூடும் என்று கருதுவது, கானல் நீர் வேட்டையாகவே முடியும். நமது முயற்சி, தியாகத்தால் மட்டுமே நாம் நமது இலட்சியத்தை சித்தியாக்க முடியும்.

ஆரம்பத்திலே இந்து எதிர்ப் பிரசாரத்தைக் கண்டு, பயந்தது கோழைத்தனம். அதுபோலவே, இப்போது நமது உரிமையை தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஆதரிக்கிறார். ஆகவே பாகிஸ்தான் நமக்குக் கிடைத்துவிட்ட மாதிரிதான் என்று ஆனந்தப்படுவதும் அர்த்தமற்ற ஆபாசமாகும். பிரமாதமான நம்பிக்கையும், அவசர ஆனந்தமும், நம்மை வழிதவறிவிடச் செய்யும்.

நமது சக்தி, நமது அறிவு, நமக்குத் துணையாகுமேயன்றி, இன்னொருவரின் உதவிக்கரம் நமக்கு வெற்றி அளிக்காது!!

டான் கருத்தைப் போன்றதே நாம் தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினைபற்றி எழுதுகையில் வெளியிட்டுள்ள கருத்தும்.

நாடறியா நடராஜன், நமது தமிழ் காக்க நாமுழைப்போம் என்றுகூறி, நடந்தான் சிறைச்சாலை நோக்கி! நன்றே செய்தாய், சுகமே போய்வா, என்றுரைத்தார் தந்தை. பாழுஞ்சிறையிலே படுத்த படுக்கையிலே, பைந்தமிழ் வீரன் நோயுற்று நொந்தான். மரணம் நேர்வந்து நின்று, அணைத்தது. மணம் வீசும் புகழுடன் மைந்தன் வருவானென்று, மாடியில்லா மண்வீட்டில், மகிழ்விலாத வயோதிகர் காத்துக் கிடக்கையிலே, பிணம் வந்துசேர்ந்தது! தமிழரின் கண்களிலே வெள்ளம் புரண்டோடி வழிந்தது.

தீரன் தாலமுத்து தீந்தமிழைத்தாக்க ஒரு தில்லுமொழி துணிந்ததா என்றுரைத்து நுழைந்தான் சிறைக்குள், பிணந்தானே வெளியே விசப்பட்டது! இளமையிலே, இன்னல்கண்ட, அவன் மனைவி, இனி உலகே எனக்கோர் சிறை, என்று சோகித்து அறுத்தெறிந்த தாலியைத் தன் திருக்கண்ணீரால் அபிஷேகித்து, அவர் சென்றிருந்த சிறையிலே நான் நின்று தவங்கிடப்பேன் என்றுரைத்து ஏகினரே!

மாதரும் சிறையோ! மக்களும் சிறையோ, மகனுக்கும் அதுவேதானோ! என்று துடித்தனவே தமிழரின் குடும்பங்கள்.

புதுச்சேரித் தேங்காய் பூக்காது காய்க்காது என்று புண்பட்ட தமிழரிடை புகன்றாரே முதன் மந்திரியார்.

அறுபதாண்டுப் பெரியாரை அக்கினிக்குப் பரிசளிக்க, பெல்லாரி அனுப்பினார், அண்ணல் பன்னீர்ச் செல்வம், “ஆகுமோ” என்று கேட்க, “வெப்பம் விருந்து” என்றுரைத்தாரே, பாராளும் மண்டபத்தில். பதைத்த மக்களைப் பார்த்து பார்ப்பன மந்திரியார் “பாலருக்குப் பால்வேண்டி பாவையர் சிறைபுகுந்தார்” என்றுரைத்து ஏளனம் செய்தாரே. இருபத்தி ஏழு மாதங்களிலே, ஆச்சாரியார் தமிழருக்கிழைத்த இன்னல்களை, நாம் மறக்கினும், நாமறக்க மறுக்குதே நாவடக்கினும், நமது நெஞ்சு பொங்குதே! துயர் முந்துதே! எங்ஙனம் அவருடன் தோழமை கொள்வோம்? ஏன் அத் தோழமை!

அவர் தமது பழைய கருத்தைப் படுகுழியிலிட்டாரா! பார்ப்பன வேடத்தை மாற்றிக் கொண்டாரா? பதைத்த தமிழருக்குப் பரிகாரம் தருவாரா! தாலமுத்துவின் மனைவியின் தாலி, அறுந்தது, அதன் முன்னிலையில், நாமும் அவரும், தழுவிக் கொண்டு நிற்பதா!

தமிழரின் ஆதரவு, தோழமையோ அவருக்குத் தேவை என்றால், தமது ஆட்சிக்காலத் தவறைத் தாம் உணர்ந்ததாக, தமிழருக்கிழைத்த தீங்குகளுக்காகத் தாம் மனம் வருந்துவதாக, ஆச்சாரியார் ஓர் அறிக்கை வெளியிடட்டும். கொட்டு முழக்குடன் கூடுவோம் அவருடன். இல்லையோ, அவர் வேறு, நாம் வேறு, இடையே இடப்படும் பாலம், நிற்காது, நிலைக்காது!

21.6.1942