அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆறுமுகமும் அழுகுரலும்
ஐந்து வீரர்களும், ஒரு சூரரும் என்ற தலைப்புக் கொடுத்து, அடுத்த வீட்டுக்காரி பிள்ளைபெற, தான் அரசமரம் சுற்றி அடிவயிற்றைத் தடவியும் கருவுறாத காரணத்தால், சலிப்புக் கொண்டவள் குழவிக்கல் கொண்டு அடிவயிற்றிலே இடித்துக்கொண்ட கதைபோலே, தன் ஆசிபெற்றவர்களுக்கு, தன் ஆராதனைக்குரியவர்களுக்கு, வைசிராய் நிர்வாக சபையிலே இடம் கிடைக்காமல் வேறு யாராருக்கோ கித்துவிட்டது கண்டு, மனம் வெதும்பு அழுகுரலைக் கிளப்பியிருக்கிறது. பரிதாபத்துக்குரிய பாரததேவி! என் அனுதாபத்தை அதற்கு அனுப்புகிறேன். தேவி தேம்பாதே! உயர உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாவதில்லை! ஆசை தாசில் செய்ய இருக்கிறது நிலைமையோ கழுதைமேய்க்க வைக்கிறது என்பார்களே அதைப் போலாயிற்று உன் அன்புக்குரியவர்கள் கதி என்ன செய்யலாம்? இனி ஒரு முறை, சர்க்காரை மிரட்டிப் போரிடுவோம், புறப்படுவோம் என்று புலம்பிப்பார். கினடைத்தால் பெற்றுக்கொள் என்று தேவிக்குக் கூறிட என் நெஞ்சு என்னைத் தூண்டுகிறது. வைசிராய் நிர்வாக சபைக்கு இப்போது புதிதாக ஆறு பிரமுகர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அதிலே சர்.மகமது உசுமானுக்கம், டாக்டர். அம்பேத்காருக்கும் இடங்கிடைத் திருப்பதும், முக்கியமான இலாக்காக்கள் கிடைத்திருப்பதும், தேவிக்கு மிக்க துக்கத்தைத்தான் கொடுத்திருக்கும்! தீண்டாத ஜாதியார் என்றால் அவரை ஆரியரும் அவர் அடிவருடும் அஞ்ஞான சொரூபிகளும் தீண்டார். ஆனால், அவர்களுக்கு நாடாளும் நிலையத்திலே நடு நாயக இடங் கிடைப்பது கண்டு ஆரியர் மனம் அழியும், மமதை அழியும். ஆணமழிந்து ஆரியர், அன்றுபோல் இன்றில்லை. இன்றுள்ளதுமூ நாளை நில்லாது போலும் என்று இரங்கும் காலம் பிறந்து, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. இந்திரனைச் சந்திரனை, இருக்குவை யஜுரை, யாகத்தை, யோகத்தை, தசரத ராமனை, பலராமனை, கருடனை, கடுவனை, எதை எதையோ கூறி ஏய்த்துவந்த காலம் போச்சே என்று ஏக்கம் பிறந்துவிட்டது. பாபம்! மீசை நரைத்துப் போச்சே கிழவா, ஆசை நரைக்கலாச்சோ! என்று கேட்பதுபோல், ஆரியரே உமது காலம் மலையேறலாச்சே, களவு அழிந்தோழியலாச்சா என்று கேட்கவும் என்மனம் என்னைத் தூண்டுகிறது!

தாவிக்குதித்து, வாலைக் குழைத்து, வாயைத் திறந்து, எகிரிக்குதித்தும, எட்டாததாலே, சரி கூறிற்றாமே, சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும்! என்று. அதுபோல், பாரததேவி போன்ற பஞ்சாங்கங்கள், நம்மவருக்குக் கிடைக்காததால், இந்த வைசிராய் நிர்வாக சபைப் பதவிகளைப் பயனற்றன. பசையற்றன என்று பல சொல்லித் தமது பதைப்பை ஆற்றிக் கொள்கின்றன. எதிர் வீட்டிலே கலியாணம், இங்கோ இவன் கணவன் இறந்த தினம், பிறந்தது. சிரார்த்தம், எதிலே, ஜடைபோட்டு மலர்சூட்டி, மங்கள ஸ்நானம் செய்து. மணவரையிலே, பெண் அன்னமென நடந்து, ஆணழகன் கைபற்ற, வெள்ளை உடையும், விம்மும் விழியும் மொட்டைத் தலையும், குட்டைக் கருத்துங்கொண்ட விதவை, அவர் ஆடினார், பாடினார், எனக்காபரணம் சூட்டினார், ஓடினார், உழைத்தார், எனக்கு ஒன்பது வேலி நிலந்தந்தார், படுத்தார் புரண்டார், பாவி என்னை விட்டுப்போனாரே! என்ற பிரலாபிப்பது போலே, ஜாம் ./ஜாமேன, வைசிராய் வரவேற்க, சர்க்கார் அதிகாரிகள் எதிரே சலாமிட்டு நிற்க, புதிய அங்கத்தினர்கள் வேலையில் அமரச் செல்கின்றனர். அது கிடைக்காததால் வீங்கிய மனதுடன் வேதனைப்படும் வீணர் கூட்டம், ஐந்து வீரர்களும் ஒரு சூரரும என்று கிண்டல் பேசியாவது தமது துக்கத்தை மாற்றிகொள்ள முயலுகின்றன. ஐந்து வீரர்களும் ஒரு சூரரும் இவைகளைக் கவனிக்கவா போகிறார்கள்! கிழட்டுப் பிணங்களின் வாய் அசைபோடுவது கண்டு, முறுக்கு முத்தாயிகள், மூலைக்கா போயமர்வர்! யாரது, முன்பு சொன்னது குக்கல் குலைத்திருக்க, ஒட்டகம் வழிநடந்தே சென்றது என்று! ஆம! சர். சாமுவேல் ஹோர் கூறினார்! காங்கிரசைப் பற்றித்தான் முன்போர் முறை கூறினார். அந்த ஐவர் வீரராகவேனும், மற்றவர் சூரராகவேனுமிருக்கட்டும, அவர்களைக் குறை கூறும், இந்த தம்பட்டங்களின் தலைவர்கள் கூட்டத்தின் தன்மை என்ன! மூலவருக்கோ, சுயபுத்தி கிடையாது! உற்சவருக்கோ உண்மையை உணரும் திறமில்லை! பிரதம பூசாரியோ, பேதபுத்தியால், பிறிதோரிடம் புகுந்தார்! சேனாவீரருக்கோ சீற்றமிருக்கிறது. சமர் எழா முன்பு, சமர் என்றதும் சாந்தம் மேலிடுகிறது, இடையே நிற்கும் பக்திமான்களுக்கோ, சக்தியும் யுக்தியுமில்லை! இதுதானே தேவி! உன் தலைவர்கள் நிலை; இதைக்கண்டு முகத்தைத் தொங்கவிட்டுக்கொள்ளாது. திமிதிமி என்க் குதித்து, காகூவெனக் கூவி நிப்து ஏனோ, யோசித்துப்பார்.

மூலவர் என்று நான் குறிப்பிடுவது, யாரை என்பீர், காந்தியாரைத்தான் குறிப்பிடுகிறேன். அவர்தானே நாலணா தந்தாலும் தராவிட்டாலும், கண்கண்ட தெய்வம்! அவரைச் சுயபுத்தி இல்லாதவர் என்று கூற எவ்வளவு துடுக்குத்தனம் இருக்க வேண்டும். பரதனின் பதட்டத்தைப் பாருர், என்று கதர்ச்சட்டைகளே! பிறர் கருத்துக்குத் தாளம் கொட்டுபவரே! என்னைக் கோபியாதுர்! நான் துட்டத்தனத்தாலே, பதட்டச் சுபாவத்தாலோ கூறுவதல்ல. தயவு செய்து நம்புங்கள்!

கொண்டவன் குரங்கே என்றால், கண்டவன் திம்மான் என்பானாம் என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். அதுபோல், காற்தியாரைத் தமது தலைவராகக் கொண்டுள்ள தாசர் கூட்டத்தில் சிலரே, அவரைப் பற்றிய விஷயங்களை வெளியிட்டதால், நானோ பிறரோ காந்தியாரின் திருக்கலியாண குணத்தைக் காணீர் என்று எடுத்துக்காட்டி நகைப்பதிலே குற்றமென்ன! மேலும், உண்மையை உரைக்க அஞ்சுபவன், கோழை மட்டுமல்ல, நாட்டுக்குத் துரோகி, மக்களை மடத்தனத்தில் ஆழ்த்தும் பாதகன் என்பேன்.

கண்ணவிந்தவனைக் கண்ணாயிரமே என்றம், நடந்தாலே தடுக்கி விழுபவனைத் தாண்டவராயன் என்றும், திணறும் பேச்சுக்காரனை, நாவாயிரம் என்றும், கருத்தமேனியனைப் பொன்னி என்றம் கூறுவது பொருந்தாதன்றோ!

கோபத்தைக் குறைத்துக் கொண்டு, குமுறும் நெஞ்சை உம்மிடமே நிறுத்தி, கண்களைத் துடைத்துக்கொண்டு, நான் கூறுவதைக் கேளப்பா, தேசீயத் தோழா! காந்தியார் சொந்நப் புத்தி இல்லாதவர் என்று நான் கூறுவது, கல்கியின் ஆதராத்தின் மீதாகும்! கல்கியோ, காங்கிரஸ் ஏடு! ஜஸ்டிசை ஒழிக்க ஜல்லடம் கட்டிடும், சுயமரியாதையைப் பொசுக்கப் பறையடிக்கும், பார்ப்பனியத்தைப் பரப்பப்பாடும் பார்பபன ஏடு! அத்தகைய கல்கி காந்திக்குச் சுயபுத்தி இல்லை என்று எடுத்துக்காட்டி இருக்கிறது! உண்மையாகவா! என்று பதைபதைத்துக் கேட்வீர்! படியும், இதனை, பதற வேண்டாம் இனியும்.

மகாத்மா காந்தி அவதாரபுருஷர், சத்திய சந்தர், அஹிம்சா மூர்த்தி, அன்புன் உருவம். அவரைப்போன்ற தலைவர் கிப்பதற்கு நம் தேசம் எவ்வளவு பாக்கியம் செய்திருக்கவேண்டும் என்று கல்கி, 3 ஆம் தேதி எழுதுகிறது.

இது என்ன பரதா! கல்கி காந்தியாருக்குச் சுயபுத்தி இல்லை என்ற கூறினதாகச் சொன்னய். ஆனால் கல்கி எழுதியிருப்பதைக் கண்டால், அது காந்தியாரை அர்ச்சித்திருப்பதாகவன்றோ தெரிகிறது. இப்படியும் பச்சைப் புளுகு பேசுவதா? என்று கேட்பீர்கள். அவசரம் வேண்டாம் அன்பரே! இந்த அர்ச்சனை, அட்டவணைக்குக் கல்கி பேட்டுக் கொண்டது. பிறகு, காந்தியாரின் புதுப்போர்த் திட்டத்தைப் பற்றி எடுத்துககாட்டிவிட்டு, அதிலே முதலிலே ஒரு தவறு இருந்ததென்றும், பிறகு அதனைக் காந்தியார், பிறர் கூறக்கேட்டுத் திருத்திக் கொண்டார் என்றம் எழுதுகையிலேதான், அர்ச்சனையுடன் உண்மையை, நடிப்புடன் நிசத்தை மேல்பூச்சுடன் உள்ளக்கிடக்கையை எடுத்துக்காட்டி இருக்கிறது. அதைக் கவனியும் இதுபோது.
முன்னே எல்லாம் செய்ததுபோல் மகாத்மா இதை குறித்து ராஜாஜியிடம் கலந்து யோசித்திருந்தால் ராஜாஜி மேற்படி இடுக்கை, முதலிலேயே எடுத்துக்காட்டி அடைத்திருப்பார் என்று கூறுகிறது கல்கி.

கேளுங்கள் மூலவரின் யோக்யதையை! அவர் வெளியிட்ட திட்டத்திலே ஒரு இருக்கு, தவறு, இருந்தது, அதாவது அவர் தயாரித்த திட்டம் ஓட்டையுள்ளது. ஆனால் அந்த ஓட்டை அவருக்குத் தேரியவில்லை! பிறர் எடுததுக காட்டியபிறகு தெரிந்து கொண்டார். ஆனால், இத்தகைய ஓட்டை ஒடிசல் இல்லாத திட்டம் தேவை எனில், காந்தியார் முன்பெல்லாம் செய்ததைப் போலச் செய்திருக்கவேண்டும் என்று கல்கி யோசனை கூறுகிறது. இதற்க முன்பு காந்தியார் கையாண்ட முறையாதே என்பீர்! கல்கி கூறுவதைக் கேண்மின். ஆசசாரியாரை முன்பெல்லாம் காந்தியார் கலந்தா லோசித்ததுபோல் செய்திருக்கவேண்டுமாம்! எனவே, காந்தியார், இதுவரை ஆச்சாரியார் சொல்லிக் கொடுத்ததைக் கூறிவந்தார் என்பது தெரிகிறது. ஆகவே காந்தியாருக்குச் சுயபுத்தி இல்லை. ஆச்சாரியார் அருளும் அறிவை இரவல் கொண்டேதான் அவர் இதுவரை வாழ்ந்து வந்தார் என்பதும் தெரிகிறதல்லவா!

சுயபுத்தி இல்லாது, சூழ்ந்திருப்போரிடம் இரவல் வாங்கிப் பிழைக்கும் காந்தியார், அவதார புருஷராம்!

அவதார புருஷர்கள் அறிவை இரவல் வாங்கும் பேர்வழிகளாகவே இருப்பர் போலும்!

ஆச்சாரியார் போனாலென்ன, அபுல்கலாம் ஆஜாத் இல்லையா, அலகாபாத் பண்டிதர் இல்லையா, சர்தார் இல்லையா, சியாமளா தேவி இல்லையா என்று கேட்பீர்கள். இருக்கிறார்கள். பலர். இருந்துமென்ன! அவர்கள் சூன்ய மூனைகள்! அடியேன் கூறுவதல்ல கல்கியின் கருத்தே! படியும் இதனையும், தற்சமயம் மகாத்மாஜியைச் சுற்றி இருப்பவர்கள் பக்தி மட்டும் உள்ளவர்களாதலால்தான் மகாத்மா மேலும் மேலும் விளக்கம் கூறுவது அவசியமாகிறது என்று கல்கி எழுதிற்று. பக்தி உண்டு. யுக்தியோ, தவறைத் திருத்தும் சக்தியோ இல்லாத பல்லாண்டு பாடிடும் கோஷ்டியே இப்போது வர்த்தாவிலே காந்தியாரைச் சுற்றி வட்டமிடுகிறது என்பது குட்டிக் கல்கியின் கருத்து. கோழி பிடிக்கச் செல்லும் குள்ளநரி கள்ளநடை நடந்து கதவிடுக்கில் நுழைந்து போவதுபோல், காந்தியார் சுயபுத்தியற்றவர் என்பதைக் கூற, கல்கி, அர்ச்சனையைக் கலக்கி, பின்னர் உண்மையை, முக்காடிட்டுக் கொண்டுவந்து நிறுத்துகிறது நம் முன்பு! நடுக்கத்தால் பிறந்த அந்த நாசூக்கான முலாம் நீக்கிப் பாருங்கள். கல்கி கூறியதிலிருந்து, மூன்று தகவல்கள் தெரிய வருகிறதா இல்லையா.

1. காந்தியாருக்குச் சொந்தப்புத்தி இல்லை.

2. இதுவரை ஆச்சாரியாரைக் கேட்டு அவர் திருத்தியபடியே நடந்து வந்தார்.

3. இப்போது காந்தியாரைச் சூழ்ந்திருப்பவர்கள், சுத்த மண்டுகள்!

ஐந்து வீரரும ஒரு சூரரும் தென்படும் தேவியின் கண்களுக்கு, மதி இரல்பெறும் மகாத்மாவும், ஆட்டி வைக்கும் ஆசசாரியாரும், கையைக் கட்டிநிற்கும் கபந்தங்களும் இருத்தல் தெரியவில்லையா! ஏளனமாகக் கூறிவிட்டாளே தேவி, அதிகாரம் வகிக்கப்போகும் அறுவரை, அதே ஏளத்துக்காக நான், தேவியின் பூஜைக்குரிய திருக்கூட்டத்தைப் பற்றி, சூன்ய முனிவரும், அவரைச் சூழ்ந்துள்ள முண்டங்களும் என்று எழுதினால் தேசீய திருக்கூட்டத்துககுக் கோபம் பொங்காதா என்ற கேட்கியேன். பாருங்கள் உமது மனக்கண் கொண்டு அந்தப் படத்தை இரவல் மதிவாங்கும் மகாத்மா, மறுமணத்துக்குத் தயாராகும் ஆசசாரியார், விஷயமறியாத வீணர்கள் இதுதானே வார்த்தாக் காட்சி கல்கியின் எழுத்தோவியத்தின் படி! இத்தகைய இடத்தை ஏந்தித் தொழும் தேவியும் பிறவும், பிறரைப் பற்றிப் பேச, நாக்கை நீட்டுகின்றனவே, சொரணை என்ற சாணைக் கல்லிலே, நாவை வைத்து தீட்டிக்கொண்டு, மானம் எனும் மருந்துண்டு, பேதைமை எனும் நோய் போக்கிக் கொள்ளக்கூடாதா? என்று கேட்கிறேன். வீரர், சூரர் என்று ஏளனம் புரியும் ஏடுகள் இந்தப் புரிதய நிர்வாகச் சபைனினர் வெறும் பெம்மைகளாக இருப்பர் என்றும், வைசிராய் ஒரு பொம்மைக் கொலு வைத்திருக்கிறார் என்பதும போக்கிரித்தனம் அன்றோ!

பொம்மலட்டத்திற் கைதேர்ந்தவர் காந்தியார். அவரது பொம்மைகள் பிறரைப் பொம்மைகள் எனக் கூறுவது. குடியனும் பித்தனும் மற்றையோரைத் தூற்றும் தன்மையது போன்றதாகும். குறும்புக் குணங்கொண்ட குரங்கு. தன் முகத்தின் அவலட்சணத்தையும், கோணற் சேட்டையையும் விறர் கண்டு பரிகசிப்பதைப் பற்றிக் கருதாது. அது பிறரை அழகு காட்டும்! அதுபோலிருக்கிறது காந்துயக் கொலுப்பொம்மைகள், கொடிதாங்கிகள் மற்றவரைப் பொம்மைகள் என்றுரைப்பது ஆச்சாரியார் ஆட்சியிலே ஆடிக்கிடந்தன இந்தப் பொம்மைகள். அசகாய சூரரென வெளியே ஆர்ப்பரித்தன. ஆனால் ஆட்சிமன்றத்திலே, ஆமைபோல் நுழைந்து, ஆந்தைபோல் விழித்து, மந்திபோல் இளித்துக் கிடந்தன என்று அக்காலை இடித்துக் கூறாதாரெவரே! கொட்டாவி விட்ட நேரந்தவிர, வாய் திறந்தறியாத வக்கிரங்களுக்கப் பிறரைப் பொம்மைகள் என்றுரைக்க வாய் உண்டா? எவ்வளவு தைரியம் பாருங்கள்! இந்தக் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைக் கடிவாளமிட்டுக் கருப்புக் கண்ணாடியார் காடு மேடெல்லாம் இழுத்துத் திரிந்ததை இவர்கள் மறப்பினும் நாம் மறந்துவிட முடியுமா! சட்டசபையிலே, கட்டுப்பாடாக மௌன தேவைனைத் தொழுது, சில வேளைகளில் நித்திராதேவியைத் தழுவி வாழ்ந்த இவர்கள் தாம் எந்தத் தொகுதிக்கு எம்.எல்.ஏ.வாகினரோ அந்தத் தொகுதிபற்றி வாய்திறந்து பேசியதுண்டா? அவர்கள் மறந்தது மக்களை! மறவாதது மாதம் 75 ரூபாயை!! இத்தகைய மண்ணாங் கட்டிகளைக் கொலுநிறுத்தி வைத்திருந்ததை நாடு மறக்குமா! இவைகளைத் தலைவர்களாகக் கொண்ட ஏடுகள், வைசிராய் நிர்வாக சபைக்குச் செல்லும் தலைவர்களைப் பொம்மைகள் என்றுரைப்பது பொச்சரிப்பினாலே அன்றி வேறென்ன காரணத்தால் என்று கேட்கிறேன். நான் காங்கிரசாரை எதிர்பபவன் ஆகையினோல், இந்தத் தலைவர்களைப் பொம்மைகள் என்று கூறினேன் என்று சவுண்டிகள் சரக்குக் கூறும். நான் கூறினதும் கூறுவதும் கிடக்கட்டும். இதோ! பாரததேவியின் புலம்பரைக் கேளுங்கள். சென்னையில் காங்கிரஸ் மந்திரிசபை இருந்தபோது கட்சி மெம்பர்கள் உயிருள்ள ஜீவன்களைப்போல் நடந்துக் கொண்டதாக நமக்கு ஞாபகமில்லை இது பாரததேவியின் 3-ந்தேதி தலையங்கமப்பா! உயிருள்ள் ஜீவன்களாக நடந்து கொள்ளவில்லை இந்தக் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்! தஞ்சைத் தரணியிலே தேசீயக் கொடி ஏந்தி, வைரம் டாலடிக்க, வட்டி வியாபாரம் பெருக்க, வாகனம் வண்டி குலுங்க வந்தார் தென்னாட்டு நேரு என்று தாகசாந்தி, தீர்த்ததால் திருப்திகொண்ட தொண்டர் குழாம் பராக்குக்கூற பவனிவரும நாடிமுத்து அவர்களே! தீப்பொறியோ, சுரங்கவெடியோ, எரிமலையோ பாயும்புலியோ என்று பலரும் பயந்து கூறும் வண்ணம், படபடவெனப் பேசிடுவீர், கடகடவென நடப்பீர், கனல் கக்குவிர், பொப்பிலியும் திப்பிலியும் எனக்கு நிகலல்லவே என்று குழங்குவீர், திருச்சி என் கோட்டை, நான் வகுப்பதே மற்றவருக்குப் பாட்டை, வீரர்கள் வலம்வருவர் என் வீட்டை, வீசுவேன் விரோதிகள் மேல் சட்டை, எவரும் விரும்பார் என் விரோதமெனும் கோட்டை என்று கர்ஜிபபீரே, யை இரத்தினவேலுத தேவரே, ரணகளச் சூரரே! சேலம் ஜில்லாவிலே ஒரு ஜெயக்கொடி என் நாளிலே நாட்டுவேன், படை கூட்டுவேன், பகை மூட்டுவேன், தோள் தட்டுவேன், வெற்றி எங்கும் கொட்டுவேன் என்ற பாடும் வீராதிவீர வீரமார்த்தாண்ட நாச்சியப்பர் அவர்களே! பால் வடியும் முகஅழகரே பக்தவத்சலமே! வைத்திய சீனுவாசரே! வக்கீல் பாஷ்யம் அய்யங்காரே! சட்டநாதரே, சொக்கலிங்கரே, சுப்பையாவே, சுப்பிரமணியமே! காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே, கண்ணியமிக்கவரே, கேளும், கேளும், நீங்கள் உயிருள்ள ஜீவன்களாக நடந்துகொள்ளவில்லை என்று உமது கட்சி ஏடு, உம்மைக் கூறுகிறது. இதற்கென்ன கூறுகிறீர்? நீங்கள் சட்டசபையிலே, உயிருள்ள ஜீவன்களாக இல்லையாமே, ரோஷம் இல்லையா உங்களுக்கு, பாரததேவியின் இந்தப் பேச்சைக் கேட்டபிறகு, அந்த நாளிலே, சந்தர்ப்பம் இருந்தபோது நீங்கள் சட்டசபையிலே, மற்றக் கட்சியினர் ஆண்டபோது சட்டசபையினர் நடந்து கொண்டதுபோல், மக்களிடம் அக்கரை கொண்டு, மாம்பலத்தார் பின்னால் செல்வதைபிட, மதிவழி செல்வதே சரி என்று விஷயவிளக்கங்கூறி, விவாதத்திலே கலந்துகொண்டு, விவேகிகள் மற்றம் என்ற பெயர் சட்டசபைக்குப் பொருந்துமாறு செய்திருந்தால், இன்ற, உங்கள் கட்சி ஏடு, உங்களை உயிருள்ள ஜீவன்களாக நீங்கள் நடந்துகொள்ளவில்லை என்று இடித்துக கூறுமா? இந்த ஆலவட்டம் வீசப் பெற்றீரே, என்குக் வெட்கம் பிறக்கிறது, சொரணை பிறக்கவேண்டிய இடத்திலே காணோமே நான் என் செய்வேன். இந்த இலட்சணத்திலே, மற்றவர்களைப் பொம்மைகள் என்று கூறுவது எவ்வளவு துடுக்குத்தனம் என்பதைத் தொழர்களே, சற்று யோசித்துப் பாருங்கள்.

சினிமா வருவதற்கு முன்பு, பொம்மலாட்டம் நடப்பது வழக்கம் நம்நாட்டிலே. பெரிதும் அரிச்சந்திர நாடகந்தான் நடக்கும். பொம்மைக்குக் கயறுகள் கட்டிவிட்டு, பின்னாலே இருந்து ஆட்டி வைப்பார்கள். அதற்கும் சட்டசபையிலே நடந்ததற்கும் வித்தியாசமில்லை! கேளுங்கள். பாரததேவி இந்தப் பொம்மைகளைப் பற்றி மேலும் வர்ணித்திருபபதை. எதிர்க்கட்சியினர் சேவாட் கணக்கெடுக்கவேண்டுமென்று வற்புறத்தினால், அந்தச் சமயத்தில் கைதூக்கும் பொம்மைகளாய் இருந்ததைத் தவிர வேறெந்த உருப்படியான காரியத்தையும் செய்துவிடவில்லை கைதூக்கினவாம் இந்தப் பொம்மைகள்!

கைகூப்பின! கைதூக்கின! கைநீட்டின! - இன்று கை பிசைந்து கொள்கின்றன. சட்டசபையிலே ஆச்சாரியார் நுழைந்ததும் கைகூப்பவேண்டியது, வோட் கணக்கெடுக்கும் வேளையிலே ஆச்சாரியார் கண்சிமிட்டியதும் கை தூக்கவேண்டியது. மாதம் முடிந்ததும், 75க்குக் கை நீட்டவேண்டியது! இதுதானே இதுகள் செய்துவந்த காரியம். இன்று குறிப்பாக 75 இல்லையே என்று கைபிசைந்து கொள்கின்றன! சட்டசபைகளிலே இவர்களின் கை வண்ணமும், பொதுக் கூட்டங்களில் கேள்வி கிளம்பும் காலத்திலே இவர்களின் கால்வண்ணமும் கண்டோம், வேறென்ன கண்டோம்!

பாரததேவி இதைக் கூறிவிட்டுச் சும்மாவுமில்லை. மறுக்க ஆள் இல்லை என்றும் கூறியிருக்கிறது. இதை மறுக்கத் தினமணிக்குத் தைரியமுண்டா என்று கேட்கிறது பாரததேவி. மித்திரனையோ விகடனையோ கேளாமல், தினமணியை இந்தக் கேள்வி கேட்டதிலே ஒரு பொருத்தமிருக்கிறது! தினமணியின் ஆசிரியர் ஒரு எம்.எல்.ஏ. ஆகவேதான், தேவி கைரியமாகக் கேள்வி பிறப்பித்திருக்கிறது. ஆச்சாரியாரின் அதிகாரம் என்ற இரதத்தை இழுத்துச் செல்லப் பூட்டப்பட்ட புரவிகளிலே தினமணியும் ஒன்று. தினமணி பன்ற பெயர்கூட புராணத்தின்படி, ஒரு குதிரையின் பெயர் என்ற ஞாபகம்!! இது ஒரு பெரிய குற்றமா சார்! சட்டசபையிலே கட்சி ஒற்றுமை கருதி, சகலரும் தலைவருக்கு அடங்கி இருந்தனர். விவாதம் செய்து வீண்பொழுது போக்குவானேன் என்று இருந்தனர். விஷயம் பூராவும், கட்சிக் கூட்டத்திலேயே பேசி, விவாதிது முடிவுகட்டிக் கொண்டு, பிறகு மசோதாபாக சட்டசபைக்கு வருவது வாடிக்கை. ஆகவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு, சட்டசபையிலே விவாதிக்க வேண்டி அவசியமே இல்லை என்று அறிவாளிகளாகத் தங்கத் தாங்களே நம்பிக்கொண்டு உள்ள சில காங்கிரஸ் பிரகஸ்பதிகள் வாதாடுவர்!

அந்த வெட்கக் கேட்டையும், கேட்டுவிடுங்கள். கட்சிக் கூட்டத்திலேயும் இதே கதிதான்! சட்டசபை 10-ந்தேதி கூடுவதாயிருந்தால் 2-ந்தேதி அன்றுதான் கட்சிக் கூட்டம் கூட்டப்படு. எவ்வளவு பெரிய மசோதா வருவதாயிருந்தாலும முன்னதாக மெம்பர்களுக்குத் தகவல் கிடைக்காது. நாளை அசெம்பிளியில் இன்னின்ன விஷயங்கள் வருகின்றன என்ற தகவல் மட்டுமதான் மெம்பர்களுக்கு கொடுக்கப்படும் இதுவும், பாரததேவி வாக்கு! பார்த்துர்களா பாபம், இந்தப் பரிதாபத்துக்குரியவர்களின் வாழ்வை! சட்டசபையிலே எப்படியோ, அதுவேதான் கட்சிக் கூட்டத்திலும் வெட்டிக்கு உலவினர் வீண்காலம் போக்கினர்.

உயிருள்ள ஜீவன்கள் இபபடி நடத்தப்படுவதற்குச் சம்மதித்திருப்பார்களா? என்று பாரததேவி கேட்கிறது. தேவர் முதலாய ஆச்சாரிய அன்பர்கள் பதில் கூறுங்கள்! பிணங்கள் என்று கூறுவதைவிட வேறு கடினமான கண்டனம் உண்டோ! உயிரிருக்கையிலே, ஒருவேளை சோறும் வயிறாரப் போடாது. செத்தவிறகு பனிநீரால் குளிப்பாட்டி பட்டாதை போட்டு, பல்லக்கில் வைத்து, பத்து ஜஐத மேளம் கொள்ள பைத்துப் பிணத்தைத் தூக்கிச் செல்லச் செய்கிறார்களே, அதுபோல் சட்டசபையிலே காவடி தூக்கியின் வாய்க்குச் சீலையிட்டதுபோல் இவர்களை இருக்கச் செய்துவிட்டு. பிறகு வெளியே இரண்டோர் வார்த்தை அவர்களைப் புகழ்ந்து பேசிவிடுவார் ஆச்சாரியார். அவ்வளவுதான். இவர்களுக்கு உச்சி குளிர்ந்துவிடும்! இத்தகைய திருமேனிகளின் கூட்டம் இன்று வைசிராய் நிர்வாக சபையிலே இருப்போரைப் பொம்மைகள் என்று கூறுவது மடத்தனத்தின் சிகரமல்லவா என்று கேட்கிறேன். போர்க்கலாத்திலே பிரிட்டிஷ் பார்லிமெண்டிலே. சென்ற வாரம், சர்ச்சில் மந்திரிசபையை எவ்வளவு காரமாகக் கண்டித்தனர். விவாதம் எவ்வளவு கடுமையாக இருந்தது. சாதாரண காலத்திலே சென்னை சட்டசபையிலே ஆச்சாரியார் ஆட்சியிலே பொம்மைகள் கொலு வீற்றிருந்தபோது எவ்வளவு மௌனம் குடிகொண்டிருந்தது என்பதை இந்த இரு சபைகளையும் ஒப்புட்டுப் பார்த்துவிட்டு காங்கிரஸ் தோழர்களே ஓராயிரம் தடவை கன்னத்திலே போட்டுக்கொள்ளுங்கள். பிரிட்டிஷ் எதேச்சாதிகாரத்தைக் குறைகூறினது தப்பு. தப்பு என்று வறி, ஆச்சாரியார் ஆட்சியின் எதேச்சாதிகாரம். அவர் கட்சி ஆட்களையே உயிருள்ள நீவன்கள் அல்ல என்று அவர் கட்சியை ஆதரிக்கும் பத்திரிகையே, எடுத்துக்காட்டிக் கண்டிக்கும் போக்கிலே இருந்தது. மற்றவவர்களைக் குறைகூற, இனி மானமுள்ள காங்கிரஸ் தோழன் முன்வரமாட்டான் என்று கருதுகிறேன்.

ஆறு பிரமுகர்கள் நியமனம் பற்றி அக்ரகாரம் அழுகுரலைத்தான் கிளப்பும். அதிலே ஆச்சரியமில்லை. நமது கட்சி, இதைப்பற்றி அக்கரை கொள்ளவில்லை. முஸ்லிம் லீக் இது குறித்து, முகாரி பாடாது. ஏனெனில், இது கால் இவ்விரு கட்சிகளும், இன எதிர்கால வாழ்வுக்கு அடிகோலும் ஜீவாதாரமான பணியில் ஈடுபட்டுள்ளன. ஆரியரோ, அக்கப்பட்டதைச் சுருட்டும் இயல்பை நெடுநாட்களாகப் பெற்றவர். எனவே வைசிராய் நிர்வாக சபைக்குப் பல புதிய மெம்பர்கள் நியமனம் என்றதும் நாக்கில் நீர் ஊறக் காத்துக்கிடந்தனர். ஏமாந்தனர். அதனால் உண்ட எரிச்சல் ஐந்துவீரரும் ஒரு சூரரும் என்று அழுகின்றனர். இந்த ஆறுமுகம், ஆரியரிடையே அழுகுரலைக் கிளப்பிவிட்டதற்குக் காரணம் என்னவென்பீர்கள். ஆரியருக்கு இவர்களில் பெரும்பாலோர் ஆகாதவர்கள். ஆனால் என்செய்வது?ஆரியரே, ஏறுமயிலேறி விளையாடுமுக மொன்றே என்ற திருப்புகழ் தெரியுமா? அந்த மெட்டிலே இந்தப் பாடல் உமக்காக ஸ்பெஷலாகத் தயாரித்தேன். அது உங்களுக்கு அர்ப்பணம். பெற்றுக்கொள்க!

ஆரிய வஞ்சனைதனை அழிக்குமுகமொன்றே
ஆண்மையொடு காந்தீயம் அழித்த முகமொன்றே சபர்மதி சூரகுலம் சாய்த்தமுக மொன்றே
சட்டபரிபாலனம் சமைக்குமுக மொன்றே
பாராளும் பண்பினை பயக்குமுக மொன்றே
பகைத்தவர் நடுங்கிடப் பார்க்குமுக மொன்றே
ஆறுமுக மானவிதம் நீரறிதல் வேண்டும்
ஆரிய குலத்தவரே அழுகைவிட வேண்டும்

முதல் மூன்று முகம் நம்மவருக்க நன்கு தெரியும். ஆரிய வஞ்சனையை அழிக்கும் முகம் டாக்டர் அம்பேத்காருடையது. ஆண்மையோடு காந்தியத்தை அழித்த முகம் சர்.சி.பி.ராமசாமி ஐயருடையது. திருவாகூர் வராதே, உஷார்!! என்று சர்.சி.பி. கூறினதும் காந்தியார் அடங்கிய சம்பவம் நீங்கள் அறிந்ததுதானே. சபர்மதி சூரகுலம சாய்த்த முகம், சர். முகமது உஸ்மானுடையது சத்தியாக்கிரக காலத்திலே சாய்த்தாரே சூரப்புலிகளை அதுவும் தெரியும் உங்களுக்கு. மற்ற முகங்கள் மற்ற மூவருடையது. அவர்கள் பாராளும் பண்பும், பகைவரை அடக்கும் திறனும், சட்ட அறிவும் பெற்றவர்கள், இந்த ஆறுமுகம் தோன்றியதைக் கண்டு, அழும் ஆரியருக்குத் தேறுதல் கூறவே, இத்தனையும் சொன்னேன்! தேறுவரா?

(திராவிடநாடு - 12.07.1942)