அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஆங்கிலர் மீது பாயுமுன் ஆரியரே இதை அறிமின்! பெரியார் படை திரட்டுவார்

பர்மாவிலே குழப்பம் ஏற்பட்டதும், இந்தியரை விரட்டி, கத்திகாட்டி மிரட்டி, பர்மியர் போ வெளியே! என்றுரைத்தனராம்.

இந்தியாவிலே, இதுபோது, கைகூப்பி நின்று, வெள்யைரை நோக்கி, “போ உங்கள் ஊருக்கு” என்று கூறுமாறு காந்தியார் தமது சீடகோடிகளுக்குக் கூறுகிறார். இனி, நாம், கத்திகாட்டாமலும், கை கூப்பாமலும், இடுப்பிலே ஒரு கை இருத்தி, மார்பை நிமிர்த்தி, மற்றோர் கையால் வடநாட்டைச் சுட்டிக்காட்டி, வடநாட்டு மார்வாடி, குஜராத்தி, ஆரியர் ஆகியோரை, “பிழைக்கவந்து, இங்கு எமக்குள் பேதத்தைப்புகுத்தி, அடக்கி அடிமைகொண்டு, சக்கைகளாக்கிய சழுக்கரே, சமயம் பிறந்துவிட்டது! சரசரவெனக் கிளம்புங்கள் உங்கள் நாட்டுக்கு! போதும் உங்கள் உறவு” என்று கூறவேண்டி வரும்.

வெள்ளையரைப் “போ” என்றுகூறி போகச் செய்ய முடியுமானால், நாமும் ஆரியரையும் அங்ஙனமே ஏன் செய்ய முடியாது?

“போ வெளியே” என்று கூறும் இந்த முறை, மகா மேதாவித் திட்டமென்றால், அதேபோல் ஆரியரை அகற்ற நாமும் அதைப் போன்றே செய்வதில் தவறு என்ன இருக்க முடியும்?

போ வெளியே! என்று கூறிடும் கிளர்ச்சியை நடத்த, சர்க்கார், காந்தியார்களுக்கு இடமளித்தால், நமக்கும் அளித்தே தீரவேண்டுமன்றோ!

எனவே, காந்தியாரின் போருக்கு ஆள் திரட்ட இத்தமிழகத் திலே எவரேனும் முனைவரேல், பெரியார், படைதிரட்டி “ஆரியரே, உமது ஜென்மபூமி செல்லுங்கள்” என்று கூறிடச்செய்வார் என்பது திண்ணம்.

ஆரியர்கள் இதற்குச் சம்மதித்தால் தாராளமாக, காந்தியப் படைக்கு ஆள்திரட்ட முனையட்டும்! ஆங்கிலர்மீது பாய எண்ணுமுன்னம் ஆரியரே இதை அறிமின்!!
(திராவிடநாடு - 28.6.1942)