அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2
1

சிட்டுக்குருவி கருத்துக் கதை -
திருச்சி மாநில மாநாடு -
தேர்தலில் போட்டியிடுவது பற்றி பிறர் கருத்து

தம்பி,

ஒரு கதை சொல்கிறேன், கேள். கருத்தளிக்க இட்டுக் கட்டிய கதை.

சிட்டுக்குருவி ஒன்று - அதற்குச் சிறிதளவு அதிகமான குறும்புத்தனமாம். கதைதானே, தம்பி! சிட்டுக் குருவிக்கு குறும்பு இருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டு விடாதே!

மரத்திலே உட்கார்ந்து கொண்டிருந்த அதனிடம் ஒரு "காசு' இருந்தது - அவ்வழியே ஒரு மன்னன் சென்று கொண்டிருக்கக் கண்ட குருவி, குறும்புள்ளதல்லவா, அதனாலே கூவிற்றாம்,

"எங்கிட்டே
ஒரு காசு இருக்கு
யாருக்கு வேணும்'' என்று.

மன்னன் புன்னகையுடன் இக்காட்சியைக் கண்டுவிட்டு, மேலால் நடந்தான். விடவில்லை குருவி - கீச்சுச் கீச் சென்று விடாமல் கத்திற்றாம்.

"எங்கிட்டே
ஒரு காசு இருக்கு
யாருக்கு வேணும்''

என்று. வேடிக்கைக்காக மன்னன் "எனக்குத்தான் கொடேன்' என்று கேட்டானாம். குருவி உடனே,

"ஐயயே, ஒரு ராஜாவுக்குக் காசு வேணுமாம், என் காசு வேணுமாம்!'' என்று கூவிற்றாம்.

செச்சே! மெத்தக் குறும்புத்தனம் கொண்ட குருவி இது என்று எண்ணிக்கொண்டு, மன்னன் தன் வழி செல்லலானான்; குருவி விடவில்லை.

எனக்குப் பயந்து
எடுத்தான் ஓட்டம்
இதோ ஒரு ராஜா!

என்று பாடிற்றாம்.

போக்கிரிக் குருவியே என்று கோபமாக அல்ல, செல்லமாகக் கூறியபடி, மன்னன் குருவியை ஓட்டினானாம் - குருவி அப்போதும் சும்மா இருந்ததா? அதுதான், இல்லை!

"குருவியைக் கொல்ல
வருகிற ராஜா
பறந்து வா, பார்ப்போம்!''

என்று சவால் விட்டதாம்!

மன்னன் சிரித்தபடி, தன் அரண்மனையை நோக்கி விரைந்தான். குருவி, குறும்புத்தனத்தை விடவில்லை.

"எனக்குப் பயந்து
ஓடிப் போனான்
ஏமாந்த ராஜா''

என்று கூவிற்றாம்.

கதை! கருத்து என்ன என்பது புரிகிறதல்லவா? குறும்புக் குணம் கொண்டவர்கள், ஒருவர் எதைச் செய்தாலும், ஏதாவது பேசுவர்; நமது எந்தச் செயலுக்கும் ஏதேனும் ஓர் விஷமத்தனமான பொருள் கொண்டு, ஏசுவர்! அதிலும் அரசியல் உலகில், சொல்லத் தேவையில்லை; வாயைக் கிளறி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதிலே வல்லமை மிக்கவர்கள் ஏராளம். அதிலும் தாமாக ஏதேனும் செய்ய இயலாத நிலையோ அல்லது எதைச் செய்யினும் ஏமாற்றமே காணும் நிலையோ ஏற்பட்டுவிட்டால், சொல்லத் தேவையில்லை, பிறர் செய்யும் எந்தச் செயலும் அவர்களுக்குக் "கேலிக் கூத்தாக' - வீண் வேலையாக'த்தான் தெரியும்!

தி.மு.க. - தானே! பேசுவார்கள் - ஓயாமல் பேசுவார்கள் - ஓராயிரம் விஷயம் பற்றிப் பேசுவார்கள் - எது ஓட்டை, எங்கே ஒடிசல் என்று தேடித் தேடிக் கண்டுபிடித்துப் பேசுவார்கள் - வேறே என்ன செய்வார்கள்? - என்று பேசுவர்!

சலிப்போ கோபமோ கொண்டு ஒரு நாலு நாளைக்கு நமக்கேன் வீண் தொல்லை என்று "பேசாமல்' இருக்கிறோம் என்று வைத்துக் கொள்-அவர்கள் வாய் அடைத்துப் போகும் என்கிறாயா! இல்லை!

சீந்துவார் இல்லை இதுகளை. சத்தமே காணோம். மூச்சு பேச்சு இல்லை. முடிந்தது இதுகள் கதை.

இவ்விதம் "ஏளனம்' கிளம்பும்.

"கத்தத் தெரியும் கரடியாக! கண்டபடி பேச முடியும்! போராட்டம் நடத்துவரோ! அதற்கான ஆற்றல் ஏது இதுகளிடம்?''

என்றோர் சமயம் பேசுவர்; அந்த ஏளனப் பேச்சால் எரிச்சல் கொண்டு, கிளர்ச்சி, போர், ஏதேனும் துவக்கி ஈடுபடுகிறோம் என்று வைத்துக்கொள், தம்பி. பயல்கள் பரவாயில்லை' இப்போதுதான், "சூடு சொரணை' பிறந்தது என்று பேசும் அளவுக்காவது பண்பு காட்டுவார்களோ? அவர்களால் அதுவும் முடிவதில்லை!

பூ! பூ! போராம், போர்! எதற்காகப் போர்? தாங்கள் இருப்பதைக் காட்டிக் கொள்ள வீண் ஆரவாரம் விளம்பரத்துக்காக இந்த வீறாப்பு!

இவ்விதம் இருக்கும், இயலாமையை மறைத்திட இழிமொழி பேசுவதைக் கலையாக்கிக்கொண்டவர்கள் போக்கு!

நமது சிந்தனை தம்பி, இத்தகைய "சிட்டுகள்' மீது செல்லக் கூடாது! சென்றதில்லை. எனவேதான், நாம் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று வருகிறோம்.

மாநில மாநாடு நடைபெறப் போகிறது என்று நாம் வெளியிட்டபோது,

சிரித்தார்கள் - ஏளனமாக

சீந்துவரோ இதுகளை? என்று கேட்டனர்.

மாநாடு மகத்தானதோர் வெற்றியாக அமைந்திருக்கிறது.

1,10,000 ரூபாய்கள் நுழைவுக் கட்டணமாகக் கிடைத்தது என்று நாம், குதூகலத்துடன் கூற முடிந்தது.

நாவலர் இப்போது கணக்காயும் வேலை பார்த்து வருகிறார்; எனவே மேற்கொண்டு, விளக்கம் நமக்கெல்லாம் விருந்தாகக் கிடைத்தவண்ணமிருக்கிறது.

நுழைவுக் கட்டணம் 1,12,000
பிரதிநிதிகள் கட்டணம் 5,000
பொதுக்குழு உறுப்பினர் கட்டணம் 1,000
அங்காடி உரிமைக் கட்டணம் 6,000

இத்துடன், மாநில மாநாட்டுக்காக, மாவட்டங்கள் முன் கூட்டியே அளித்த நன்கொடைத் தொகை 28,000

ஆக மொத்தத்தில் வரவு என்ற வகையில் கிடைத்த தொகை 1,52,000

இனி, மாநில மாநாட்டுக் கொட்டகை அமைப்புக்காக நாம் வாங்கிப் பயன்படுத்தி, இப்போது நம்மிடம் உள்ள கொட்டகைச் சாமான்கள் விற்பனை மூலம் 10,000

கிடைத்தாக வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனையும் கூட்டினால், களிப்பு மிகத்தான் செய்யும்.

மாநில மாநாட்டுக்கு நுழைவுக் கட்டணம் செலுத்தி வருவதுதான், "அறம்' என்ற உணர்ச்சி பழுதுபடாமலிருந் திருந்தால், அந்த "அறம்' பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு அனைவருக்கும் இருக்கவேண்டுமல்லவா, அதனை நாம் செம்மையாக நிறைவேற்றியிருந்திருந்தால், குறைந்த அளவு, மேலும் 50,000 கிடைத்திருக்கும்.

அதனை இழந்தது கழகம்.

வெளியாரும், வெதும்பிய மனத்தினரும், வேடிக்கை காணும் நோக்கினரும், மாற்றாரும் கூடி நமக்கு இந்தத் தொகை கிடைப்பதைத் தடுத்துவிட்டனர்.

பரவாயில்லை!

இந்த முறை பெற்ற "அனுபவம்' இனி, இவ்வித "ஓட்டைகளை' எப்படி அடைப்பது என்ற நுண்ணறிவை, மாநாடு அலுவலில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்குத் தந்திருக்கிறது.

அந்த அனுபவம், பல இலட்சத்துக்கு ஈடு - ஐயமின்றி.

நான் கூற வந்தது, தம்பி, குறும்பரும் குணக்கேடரும், நாம் மாநில மாநாடு நடத்தும் திட்டம் வெளியிட்டபோது, என்ன கூறினர்...? பெரியதோர் திடல் தேடி அலைந்த காலை, யாது பேசினர்? விரிவான அளவில் பந்தல் அமைத்தபோது, எத்துணைப் பரிகாசம் புரிந்தனர்?

"என்ன ஏமாளித்தனமய்யா இதுகளுக்கு? நாடே இங்கே திரண்டுவரும் என்ற நப்பாசையில், இதுவரை எந்த மாநில அரசியல் கட்சியும் அமைத்திடத் துணியாத அளவில் கொட்டகை போடுகிறார்களே! சில ஆயிரம் பேர் வரக்கூடும் - அதுவும் கட்டணம் செலுத்தாமல்! மிச்சமிருக்கும் இடத்திலே எதை அடைக்கப் போகிறார்கள்?'' என்றல்லவா கேட்டனர்.

கதையில் வரும் சிட்டுக்குருவி மட்டுந்தானா, அரசியலில் பலர் இருக்கிறார்கள் அதே போக்கில்.

அவர்களெல்லாம் ஆச்சரியத்தால் தாக்குண்டு, "ஐயய்யோ' போட வேண்டிய அளவில் வெற்றி கிடைத்தது.

இந்த வெற்றியைக் கண்ட பிறகாவது, அவர்கள் ஏளனம் பேசுவதை நிறுத்திக்கொண்டரோ? முடிந்ததா, சிட்டுக் குருவியால்!

இப்போது, வேறு முறையில் தமது எரிச்சலைக் காட்டுகிறார்கள்.

ஒன்றரை இலட்சம் தானா வசூல்!

என்னய்யா அநியாயம், வெறும் ஒன்றரை இலட்சம் தானா?

ஏதோ அவர்கள் நடத்திடும் மாநில மாநாடுகளிலே ஒன்பதரை இலட்சம் வசூலாவது போலவும், நாம் செல்வாக் கற்றவர்கள் என்பதாலே வெறும் ஒன்றரை இலட்சம் மட்டுமே "வசூல்' ஆனது போலவும் பேசித் தமது துக்கத்தைத் துடைத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

பரிதாபப்படுவோம் தம்பி, பரிதாபப்படுவோம்! வேறென்ன செய்யலாம்! மன்னன்! தன் வழி தானே சென்றான்! அவனென்ன சிட்டுக்குருவி தன் சீரழிவான குணத்தை விட்டொழித்தா லொழிய வாளாயிருத்தலாகாது என்றா காரியமாற்றினான்! வேடிக்கையான பறவை! விநோதமான போக்கு! என்று எண்ணிச் சிரித்தான்.

விந்தையான மனிதர்கள்! விசித்திர சித்தர்கள்! என்று நாமும் கூறிவிட்டு, வேறு வேலைகளைக் கவனிக்கவேண்டியது தான்!

வேலைதான், தம்பி, நிரம்ப இருக்கிறதே!

இது சொத்தை, இது சொள்ளை என்று கண்டிப்பதும்,

இதை ஒழிக்கப் போர், அதை எதிர்த்துக் கிளர்ச்சி என்று குழப்பம் விளைவிப்பதும்,

இதன் பெயரை மாற்று, அந்த முறையை அகற்று என்று எதையாவது சாக்காகக் கொண்டு கலகம் உண்டாக்குவதும் - செச்சே! ஒரு அரசியல் கட்சி இப்படியா நடந்து கொள்வது? ஆளும் கட்சி தவறான பாதையில் சென்று மக்களுக்குக் கேடு செய்கிறதென்றால், இக்கட்சியை நீக்கிடும் வாய்ப்புதான், மக்களாட்சி முறையில் இருக்கிறதே, தேர்தல் தானே மாமருந்து, அதிலே ஈடுபட்டு மக்களுக்குப் பணியாற்றாமல் சொல் வீச்சும் சிற்சில வேலைகளில் கல்வீச்சும் நடத்துவதுதான், அழகா, அறமா, அரசியலா! என்றெல்லாம் காமராஜர்கள் கூறி வந்தனர்.

தேர்தல் என்பதே ஒரு பெரிய "தெகிடுதத்தம்' ஆக்கப் பட்டிருக்கிறதே, பெரும் பணம் செலவு செய்யக்கூடியவர் களுக்குத்தானே, அவர்களுடைய குணமும் செயலும், குடி கெடுப்பதாயும், நாடு பாழ்படுவதாயும் இருப்பினும், வெற்றி கிட்டுகிறது. நடைபெறுவது ஜனநாயகம் என்று பேசப்பட்டாலும், பணநாயகமல்லவா உண்மையில் காண்கிறோம். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவது எளிதான காரியமல்லவே. உண்மைக்கு ஊறு விளைவிக்க எண்ணற்ற வழிகளைத் திறம்படச் செய்திடும் வன்கணாளர்கள் பொதுவாழ்வுத் துறையிலே நடுநாயகர்களாகி விட்டனரே, என் செய்வது! என்று நாம் கூறினோமென்றால், கை கொட்டிச் சிரித்து கையாலாகாத் தனத்தை மறைத்திட ஏதேதோ பேசுகிறார்கள், மக்களிடம் உள்ளபடி செல்வாக்கு இருந்தால் தேர்தலிலல்லவா அதனை எடுத்துக் காட்ட வேண்டும் என்று பேசிக் கேலி செய்வர்.

திருச்சி மாநாட்டிலே நாம் தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு செய்தோம்.

இது கண்டு, மெத்தச் சரி, இதுதான் முறையான காரியம், ஒரு அரசியல் கட்சி இப்படித்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாராட்டுகின்றனரா? இல்லை!

ஒழிந்தார்கள்! அழிந்தார்கள்! தீர்ந்தது! தீய்ந்தது!- என்று சாபம் கொடுக்கிறார்கள்.

ஓட ஓட விரட்டி அடிப்போம் - உருத்தெரியாமல் ஒழிந்து விடப்போகிறார்கள்! - என்று ஆரூடம் கணிக்கிறார்கள்.

தேர்தலில் ஈடுபடப்போவதில்லை என்று கூறினால். கையாலாகாத்தனம் என்று கேலி பேசுவது; தேர்தலில் ஈடுபடுவது என்று திட்டமிட்டாலோ சாபம்! வெகுண்டெழுந்தான் பிள்ளையின் மனம் வெதும்புகிறது! என்ன! என்ன! இதுகள் தேர்தலில் ஈடுபடவிடுவதா! ஆஹா! எப்படி இதைச் சகிப்பேன், எவ்வாறு இதனைத் தாங்கிக் கொள்வேன்!- என்று துக்கம் துளைத்திடும் நிலைபெற்று, தூற்றக் கிளம்புகிறார்.

காரணம், தம்பி, நாம் எந்த முறையில் பணியாற்றும் போதும், அது கழகத்தின் கட்டுக்கோப்பினைச் சமைத்திடும் பணியாகட்டும், கிளர்ச்சி மூலம் கழகத்தின் உரத்தை வலுப்படுத்தும் பணியாகட்டும், கேடு நீக்கிட அறப்போர் தொடுத்திடும் செயலாகட்டும், தேர்தல் களத்திலே ஈடுபடும் காரியமாகட்டும், எதைச் செய்ய முற்பட்டாலும், அதனைச் செம்மையாகச் செய்திடும் வழிவகை கண்டறிந்து, ஆர்வம் ஆத்திரமாகாதபடி பாதுகாத்துக்கொண்டு பணியாற்றுகிறோம், அதன் காரணமாக, நமது சக்திக்கும் மீறிய அளவில் வெற்றிபெறு கிறோமல்லவா, அந்த உண்மை வெகுண்டெழுந்தான் பிள்ளையின் உள்ளத்தை உறுத்துகிறது; திடீரென்று ஓர் திகில் பிறக்கிறது. அந்தத் திகிலிலிருந்து தப்பித்துக்கொள்ள, தீர்த்துக் கட்டிவிடுகிறேன், ஒழித்துப் போடுகிறேன் என்றெல்லாம் நம் மீது கண்டனம் வீசுகிறார்.

மாநாடு முடிவுற்றதும், மாநில முதலமைச்சர் - காமராஜர் திருச்சிக்கு வந்தார் - அமைச்சர்களுக்கென்றே அமைந்துவிட்ட ஏதோ ஓர் வேலையைக் கவனிக்க.

"வந்த வேலையை மறந்து பந்தல் காலைக் கட்டிக்கொண்டு நின்றானாம்' என்றோர் பழமொழி உண்டு. அதுபோல அவர், எதற்கு வந்தாரோ அதை மறந்தார், எடுத்தார் பாணம், தொடுத்தார் கழகத்தின்மீது!

தேர்தலில் ஈடுபடப்போகிறார்களாம்! ஈடுபடட்டும், ஈடு படட்டும்! இவர்களுக்கு அழிவு காலம் இதுதான்! - என்று கூறிவிட்டார்.

சரி, புதியதோர் ஆபத்து அல்லது சங்கடம் என்ற முறையில் அவர் இதுபோலச் சபிக்கிறார் என்று எண்ணிக்கொள் வோம். ஆனால் அவர் அத்துடன் விடவில்லை.

தி.மு.க. தேர்தலுக்கு நிற்கிறது என்பது பற்றி, காங்கிரஸ் காரர்களாகிய நாங்கள் கிலிகொள்கிறோமா! ஏன், கிலி! என்ன நேரிட்டுவிடும்? மந்திரி வேலை போய்விடும் என்றா நாங்கள் பயப்படப் போகிறோம்! போனால்தான் என்ன! மந்திரி வேலை, சட்டை மாதிரி!-என்று அரசியல் பேசுவதாக எண்ணிக் கொண்டு, தமக்கு ஏற்பட்டுவிட்ட கிலியை வார்த்தையாகக் கக்குகிறார்!

மிகச் சாமான்யர்கள் நாம்! ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபடுவதற்கான "பேழைபலம்' அற்றவர்கள்! நாட்டின் பெரிய ஏடுகள் அத்துணையும், ஆளும் கட்சிக்குச் சாமரம் வீசி மகிழ்வன, நம்மை நிந்திப்பதில் இனிமை காண்பன! நமது திட்டமும் கொள்கையும், ஆவலோடு அனைவரும் ஓடிவந்து நமது முகாமில் சேர்ந்துகொள்ளத்தக்க விதமான, மெருகு உள்ளன அல்ல! இந்நிலையில், நாம் தேர்தலில் ஈடுபடப் போகிறோம் என்றதும், ஏன், காமராஜருக்கு பதவி பறிபோகும் என்ற பயம் கிளம்ப வேண்டும்? அதிலேதான் சூட்சமம் இருக்கிறது!

நாம் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும், நாமே எதிர் பார்க்காத அளவு வெற்றி கிடைத்து வருகிறது என்பது காமராஜருக்குத் தெரியும். தமிழக அரசியல் குறிப்பேடு, இதனைத் தெளிவாகக் காட்டுகிறது.

கண்ணீருடன் பிறந்தோம் - இரண்டோர் முறை கதறித் துடித்து, கைகாலை உதைத்துக் கொண்டு பாலூட்டுவாரும் சீராட்டுவாருமின்றி மடிந்துபடுவோம் என்றனர்! பிழைத்துக் கொண்டோம் - வளர்ந்து வருகிறோம்!

உட்பகை மூட்டிவிட்டால் உருக்குலைந்து போவோம் என்று எண்ணி முயன்றனர் - மூக்கறுபட்டனர்.

கிளர்ச்சிகளில் ஈடுபட்டால், ஆளவந்தார்களின் அடக்கு முறையால் தாக்குண்டு, தாங்க மாட்டாமல் திகைத்துத் திண்டாடி மூலைக்கொருவராக ஓடி ஒளிவோம் என்றனர் - அஞ்சா நெஞ்சும், அறநெறி நின்றிடும் ஆற்றலும் பெற்றவர் நாம் என்பதனை அவனி அறிந்திடச் செய்தோம்.

மாமேதையாம் ஆச்சாரியார் பேசிப் பார்த்தார், ஏசிப் பார்த்தார், கடுங்கோபம் கொண்டு இதுகளின் கணக்கையே தீர்த்துக்கட்டி விடுகிறேன் என்று முழக்கமிட்டார்! நாம், வளர்ந்து வருகிறோம்.

இதுபோலத்தான் தேர்தலும்! தேர்தலில் ஈடுபட்டால் நாம் தீர்த்துக் கட்டப்பட்டு விடுவோம் என்று, திகிலும் வெறுப்பும் கொண்ட வெகுண்டெழுந்தான் பிள்ளைகள் கூறிவிட்டு - நாம், இந்தத் தேர்தலில் ஈடுபடுவதையும், கழக வளர்ச்சிக்கும் கொள்கை வளர்ச்சிக்கும், நமது குறிக்கோளில் வெற்றி காண்பதற்கும் ஓர் "படிக்கட்டு' ஆக்கிக்கொள்வோம் - ஐயம் வேண்டாம்!

தேர்தலில் ஈடுபட்டு, எப்படியாவது சட்ட சபையில் இடம் பிடித்துக்கொண்டு, அதன் மூலமாகப் புதிய "கௌரவம்' செல்வாக்குப் பெற்று, பளபளப்பு அடைய வேண்டும் என்ற அற்ப நோக்கத்துக்காக நாம் ஈடுபடவில்லை.

அரசியல் பட்டுப்பூச்சிகளும் வெட்டுக்கிளிகளும் அவ்விதமான அற்ப ஆசைகொள்ளும்.

ஒரு நாட்டை மீட்டிடும் பெரும் பணியினை நமதாக்கிக் கொண்டுள்ளவர்கள், இத்தகைய இழிநிலைக்குத் தங்களை ஆளாக்கிக் கொள்ளமாட்டார்கள். நாம் மேற்கொண்டுள்ள பணி, நம்மை எத்துணை தூய்மையுடையோராக்கி வைத்திருக்கிறது என்பதை வெகுண்டெழுந்தான் பிள்ளைகளால் உணர்ந்துகொள்ள முடியாது. நாம் மேற்கொண்டுள்ள மகத்தான பணி - விடுதலைக் கிளர்ச்சி - தாயகத்தின் தளை ஒடித்துத் தன்னாட்சி அமைத்தல், இத்துணைப் பெரும் குறிக்கோளை, நிறைவேற்றிடத் தக்கவர்கள் நாம் என்று ஆணவம்கொண்டு நாம் இதிலே ஈடுபட்டோமில்லை. மற்றையோர், தமது மனதை வேறு வேறு பிரச்சினைகளில் பதித்துவிட்டது கண்டு மனம் வாடி, அந்தோ! தாயகமே! நின் கரங்களில் பூட்டப்பட்டுள்ள தளைகளை நொறுக்கி, நின் கண்ணீர் துடைத்து, அரியணை ஏற்றி அகங்கனிந்து நோக்கி இன்புறும் அறச்செயலில் ஈடுபடாமல், அறிவாற்றல் கொண்டோர், திறம்படைத்தோர், வசதி நிரம்பியோர், விளக்கு நோக்கிச் செல்லும் விட்டில் நிலையில், எவர், நமது இன்றைய இழிநிலைக்குக் காரணமோ அவர்களின் புன்னகையைப் பெறக் குற்றேவல் புரியக்கிளம்பிவிட்டனரே, அன்னை அழுகிறாள், அதனைக் கண்டும் காணாதாராகி, அவளைத் துகிலுரியும் பேர்வழிகளுக்குத் துதிபாடித் திரிகின்றனரே, என்னே இக்கொடுமை என்று எண்ணி வேதனைப்பட்டு, நாமேனும், திறனும் வசதியுமற்றுக் கிடக்கும் சாமான்யர்களான நாமேனும், அன்னையின் கண்ணீரைத் துடைத்திட முனைவோம், மாற்றாரின் ஈட்டி நமது மார்பினில் பாய்ந்து குருதி கொட்டினும், நாம் குற்றுயிராகிப் போயினும், பரவாயில்லை, மிகச் சாமான்யர்களாகிய நாம் இந்த மகத்தான் காரியத்தில் ஈடுபடுவதைக் கண்ட பிறகேனும், ஆற்றலை ஆகா வழியில் செலுத்திடும் அன்பர்கள் அன்னையின் பணிக்குத் தம்மை ஆட்படுத்தும் நிலை பெறட்டும் என்ற உணர்ச்சியுடன் விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டுப் பணியாற்றி வருகிறோம்; அந்தப் பணியில், நாம் ஈடுபடுவதால் நமக்கே ஓர் புத்தம் புதுப் பண்பு கிடைத்திருக்கிறது! மலர் பறித்திடுவோனுக்கு, தொட்டுத் தொட்டு கரமும் மணக்குமன்றோ! அது போலத்தான்! தாயக விடுதலைக்கான பணியில் ஈடுபட்டதால், நாம் தனியானதோர் ஆற்றலை, பண்பை, பொறுமை, பொறுப்பு, கண்ணியம், கடமை உணர்ச்சி ஆகியவற்றினைப் பெற்று விட்டோம் - அதன் பயனாக நமக்கு இயற்கையாக உள்ள குறைகள் கூடத் தாமாகப் பட்டுப்போய், புதியதோர் "தகுதி' கிடைத்து வருகிறது!

எடுத்துக்கொள்ளும் காரியம் ஏற்புடையதாயின், ஈடுபடுவோருக்கும் அது புதுப்பொலிவு தரத்தான் செய்கிறது என்பதை, தூய பணியில் ஈடுபட்ட நாம் உணர்ந்து வருகிறோம்.

நமது சொல்லிலே ஓர் சுவையும், நமது செயலிலே ஒர் சீலமும், நமது முறைகளிலே ஓர் உறுதிப்பாடும் கிடைத் திருப்பதற்குக் காரணம், நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியம், கோழையையும் வீரனாக்கிடும் ஆற்றல் வாய்ந்தது. சாமான்யர்களை உயர்பண்பினர்ஆக்கிடத்தக்க தூய்மை நிரம்பியது. தம்பி! தாயக விடுதலை என்பது போன்றதோர் தூய பணி வேறேதுமில்லை என்பதை வரலாற்றுச் சுவடி நன்கு எடுத்துக் காட்டுகிறது. இவனா இப்படிச் செய்தான்! இவனிடமா இத்துணை ஆற்றல் இருந்து வந்தது! என்றல்லவா வியந்து புகழ்ந்தனர், விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்பற்றி! கட்கமேந்திடத் தெரியாதவன், வாட்போர் வீரர்களை மிரண்டோடச் செய்திருக்கிறான்! சிற்றூரில் பிறந்து, சிறு குடிலில் வாழ்ந்து, கழகினியில் வேலை செய்தவன், தன் உள்ளத்தில் தாயக விடுதலைப் பணிக்கான தூய்மைக்கு இடமளித்ததும், மேதைகள் கண்டு பாராட்டத்தக்க அறிவும், வீரக் கோட்டத்துக் காவலர்கள் கண்டு வியந்திடத்தக்க ஆற்றலும் பெற்று, வெற்றியைத் தேடித் தந்திருக்கிறான் என்பதை நமக்கு எடுத்துக்காட்டத்தானே வரலாறு இருக்கிறது.

தொட்டால் மணக்கும் சவ்வாது - என்று பாடுகிறார் களல்லவா, தம்பி, அதுபோல நாம் எடுத்துக் கொண்டுள்ள காரியம் நமது சொல்லுக்கும் செயலுக்குமே ஓர் தனி மணம் கமழத்தக்க நிலையைத் தந்திருக்கிறது.

காங்கிரஸ், நாட்டு விடுதலைக்கான "பாசறை'யாக இருந்தபோது, அதிலே ஈடுபட்டிருந்தவர்களுக்கு இதே நிலை இருந்தது.

இன்று காங்கிரஸ், பாசறையுமல்ல, பல்கலைக் கழகமுமல்ல, போட்டிப் பந்தயக் கூடாரமாகி விட்டது - எனவேதான், அதிலே ஈடுபட்டுப் பணியாற்ற, அரசியல் சூதும் அடுத்துக் கெடுக்கும் தொழில் திறனும் தேவைப்படுகிறது - அதன் பயனாக, இயல்பாக உள்ள நற்குணமே நாளாவட்டத்திலே நசித்துப்போகிறது, நயவஞ்சகம் உள்ளத்தில் தாராளமாக நெளிகிறது.

நாட்டு விடுதலை எனும் நற்காரியத்துக்கு நம்மை நாம் ஒப்படைத்து விட்டோம்; அதன் பயனாக நாமே தூய்மைப் படுத்தப்பட்டு விட்டோம் - அற்ப ஆசைகளைச் சுட்டெரித்து விட்டோம் - எனவே அதே நோக்குடனேயே, தேர்தலில் ஈடுபடுவோம்!

தேர்தல் ஆயிரத்தெட்டு சூதுகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் பிறப்பிடம், இருப்பிடம். அந்தச் சூதும் சூழ்ச்சியும் ததும்பிடும் நிலையில் உள்ள நம்மிடம் இவர்கள் போட்டியிட்டு என்ன செய்யப்போகிறார்கள்! நம்மாலே பேழையுடையோரை பிடித்திழுத்து வரவும், பேச்சு விற்போரைக் குத்தகைக்கு எடுக்கவும், பேதம் பிளவு மூட்டிக் காரியம் சாதிக்கவும், தட்டிக் கொடுக்கவும், தடவிக் கொடுக்கவும், தழுவி மகிழ்ச்சி தரவும், குழைந்து குதூகல மூட்டவும் முடியுமே! இவர்கள் வெட்டு ஒன்று துண்டு இரண்டெனப் பேசத்தானே அறிவர் கொள்கைக்கு ஒத்து வருவோரின் கூட்டுறவு மட்டும்தானே கொள்வர். இந்நிலையில் இவர்கள் தேர்தலில் ஈடுபட்டுக் காணப்போகும் பலன் என்ன? என்று வெகுண்டெழுந்தான் பிள்ளை கருதுகிறார் - கூறவே செய்கிறார்.