அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தங்கத் திரை
1

ரஷியாவின் சிறப்பு-
சோவியத் தலைவர்கள் வருகை -
இந்தியத் திட்டங்களில் குறைபாடுகள்.

தம்பி,

அன்னிய நாட்டுச் சகோதரர்களே! வாருங்கள் எங்கள் ஊருக்கு! வந்து பாருங்கள் எங்கள் நகரத்தை!

சிரித்து மகிழ்ந்து அளவளாவும் இனிய சுபாவமும், அதிதிகளை அன்புடன் வரவேற்று உபசரிக்கும் நற்பண்பும் கொண்டவர்கள் எங்கள் மக்கள். எங்கள் நகரில் கொடிய குளிரும் பனியும் உண்டு. ஆனால் எங்கள் இதயங்கள் மென்மையானவை - அன்பின் கதகதப்பு அவற்றில் நிறைய உண்டு.

சண்டை சச்சரவுகள் அற்ற சமாதான உலகம், அடக்குவோர் அடக்கப்பட்டோர் இல்லாத உலகம், அனைவருக்கும் இன்பகரமான வாழ்வை அளித்திட, சகல இனத்தவரும் நிறத் தவரும் சகோதரர்களாக ஒருமித்துப் பணியாற்றும் நல்லுகம் - இதுவே எங்கள் வேட்கை.

சோவியத் நாடு எனும் ஏடு, இந்த அன்பழைப்பினை வெளியிட்டிருக்கிறது; இதே கருத்துப்பட இங்கு மக்களின் மகத்தான வரவேற்பினைப் பெற்று உள்ளம் பூரித்த புல்கானின், குருஷெவ் இருவரும் பேசியுள்ளனர்.

காமராஜரே, ரஷியா போகிறாராம்!

ரஷியா போய்விட்டு வந்தவர்களெல்லாம், (இராஜகுமாரி அமிர்தகௌர் உட்பட) அங்கு உள்ள வளம், வசீகரம், இவைகளை வழங்கிய முறை, இவை குறித்துப் பாராட்டினர். அந்தப் புதுமுறை பூத்திடும் பொன்னுலகு பற்றிய ஆய்வுரைகளைப் படித்து இன்புற்றோரும், அந்நாட்டின் ஏற்றம், எழில் பற்றி மகிழ்ந்து பேசினர்.

காமராஜர் இந்த இரு வாய்ப்புகள் பெற்றாரில்லை. எனினும் ரஷிய நாட்டு முறை பற்றிக் குறைகூறிப் பேசக் கூசவில்லை.

ரஷியாவை ஏதோ சொர்க்க பூமி என்று பேசுகிறார்கள் - சொக்கிப் போகிறார்கள். சுத்தத் தப்பு. அதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு பெரிய ஜெயில் மாதிரி. சோத்துக்கே அங்கு கஷ்டம். அங்கு சுதந்திரம் கிடையாது, சுகமும் கிடையாது - என்று காமராஜர் பேசுவது வாடிக்கை. அவருக்கு ரஷியா செல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. பயணம், பக்குவத்தையும் பயனையும் அளிக்க வேண்டும்.

ரஷியா சென்று வருபவர்களைக் கேலி பேசும் காமராஜர் ரஷியா போகும் நிலை ஏற்படுவது கூட ஆச்சரியமல்ல. அவரை ரஷியாவுக்கு அழைத்துக்கொண்டு வருவதாக ராமமூர்த்தி வாக்களித்தாராமே, இந்தப் பூணாரம் பூண்ட புதுமைதான் எல்லா வற்றினையும்விட ஆச்சரியமானது.

வெளி உலகத் தொடர்புகொள்வதிலே விசேஷ அக்கறையோ அவசரமோ காட்டாமலிருந்து வந்த சோவியத் தலைவர்கள், இப்போது சில காலமாக, பல்வேறு நாடுகளுடன் நேசத் தொடர்புகள் கொள்ள முயற்சிக்கிறார்கள் - அமெரிக்கா அச்சப்படும் அளவிலும், பிரிட்டன் பீதி கொள்ளும் விதத்திலும் வெற்றியும் பெறுகிறார்கள்.

குபேரபுரியின் சொந்தக்காரர்கள் சாம்ராஜ்யாதிபதிகள் என்ற வகையில், முறையே அமெரிக்காவும் பிரிட்டனும் உலகில் உலவி உயர் இடம் கேட்டுப் பெற முடிந்தது. உலகில் இல்லாமையை விரட்டி அடித்து, ஏழை எளியோருக்கு வந்துற்ற இடர்ப்பாடுகளை ஒழித்துக்கட்டி, எல்லோருக்கும் எல்லாம் எனும் தூய கருத்து நடைமுறையில் மலர்ந்து மணமளிக்கத் தக்கதோர் புதுமுறை கண்ட நாடு என்ற முறையில், சோவியத் எவருடைய கவனத்தையும், ஏழை எளியோரின் அன்பையும், பெறத்தக்க ஒப்பற்ற நிலையில் இருக்கிறது.

முப்பதாண்டுகளுக்கு மேலாகவே இந்த அதிசயபுரி பற்றி, கவிஞர்கள் பாடி வந்தனர். இலட்சியவாதிகள் புகழ்ந்து வந்தனர், பொதுமக்கள் பூரிப்புடன் பாராட்டி வந்தனர் - எதேச் சாதிகாரிகளும் ஏய்த்துப் பிழைத்திடும் போக்கினரும், மதவாதிகளும் மாமிசமலைகளும் அருவருப்பையும் அச்சத்தையும் கக்கி வந்தனர், ஏளனமும் எச்சரிக்கையும் கலந்த குரலில் ஏசி வந்தனர் - எவரும் மறக்க முடியாததோர் மகத்தான நிலையில் சோவியத் நாடு முப்பதாண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.

இல்லாமையை ஒழித்த இன்பபுரி என்றனர் மக்கள். ஈசனை மறந்த இழிநிலையில் உள்ள நாடு என்றனர் எத்தர்கள், வீரமும், தீரமும் பொங்கிடும் நாடு, விம்மிடும் ஏழையின் கண்ணீரைத் துடைத்த நாடு, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து வீணில் உண்டு கொழுத்திருப்போரை விரட்டிய வீரர் கோட்டம் சோவியத் நாடு. தூங்கிக் கிடந்த அரிமா, விழித்தெழுந்து, தன் பிடரியில் ஒட்டிக்கொண்டு கிடந்த பூச்சி புழுக்களை உதறித் தள்ளி விட்டு, காட்டரசன் என்ற நிலையில் அடவியில் ஆட்சி செலுத்துவதுபோல, சுரண்டிப் பிழைப்போர் சூது மதியினர், ரசுபுடீன்கள், ராஜகோலாகலர்கள், உழைப்பைத் திருடுவோர், ஊரை அடித்து உலையில் போடுவோர் போன்ற நச்சுப் பூச்சிகளை நசுக்கிச் சாகடித்து, மக்களின் சக்தியை முழு அளவில் மிளரச் செய்து, உலகிலேயே ஒப்பற்ற நாடாக விளங்குவது சோவியத் நாடு என்று உள்ளத்தில் உயர் கருத்துக்களுக்கு இடமளிப்போர் பெருமிதத்துடன் கூறினர் - கோயில்களை இடித்துக் குளங்களைத் தூர்த்துவிட்டு, ஆத்மீகத்தை அழித்து விட்டு, ஞானிகளை விரட்டிவிட்டு, மதத்தை மாய்த்துவிட்டு, மக்களை மாக்களாக்கி கொடுங்கோலால் அவர்களைக் கருத்துக் குருடர்களாக்கி, பெரியதோர் சிறைக் கூடமாக நாட்டினை மாற்றி, இந்த உண்மைகளை உலகு அறிந்திடா வண்ணம் ஓர் "இரும்புத் திரை' போட்டுக்கொண்டு, வன்னெஞ்சம் கொண்டதாகச் சோவியத் இருந்துவருகிறது, எங்கும் எந்த வேளையிலும் ஏதேனும் கலாம் விளைந்தவண்ணம் இருத்தல் வேண்டும் என்பதற்கான திட்டமிட்டு ஒற்றர்களையும், கூடிக் குடிகெடுப்போரையும் ஏவிவிட்டு, பிறநாடுகளின் பலத்தை ஒடுக்கி, அங்கு அமளியை மூட்டிவிட்டு, அதன் இறுதியில், அங்கெல்லாம் தன் ஆதிபத்தியத்தைப் புகுத்தி, உலகினை ஆள வேண்டும் என்ற கெடுமதி கொண்டுள்ள நாடு சோவியத்; தீயாரைக் காண்பதும் தீது, தீயார் சொல் கேட்பதுவும் தீது என்ற முறையில், திருவருளை இகழ்ந்து வாழும் அந்நாட்டுடன் எத்தகைய தொடர்பு கொள்வதும் தீது மட்டுமல்ல. ஆண்டவனுக்கே இழைக்கும் துரோகமாகும்! என்று தம்மை அருளாளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள், பீதி மூட்டினர்.

நாட்டிலே பெருங்காற்று வீசிடினும், காட்டிலே பெருங் கூச்சல் எழுந்திடினும், ஆற்றிலே வெள்ளம் கரைபுரண்டோடி வந்திடும்போதும், காட்டுத் தீ கட்டுக்கடங்காது பரவிடும்போதும், நில நடுக்கத்தின்போதும், தொத்துநோய்படை எடுத்திடும் போதும், பஞ்சம் பரவிடும்போதும் இயற்கைக் கோளாறு எது நேரிடும்போதும், “எல்லாம் ஈசன் சோதனை - மகேசனை மறந்தனர், ஐயன் தண்டிக்கிறார் - பக்தி குன்றிற்று, இன்னல் வந்துற்றது - நாத்திகம் தலைகாட்டுகிறது. நாசம் தலை விரித்தாடுகிறது ஈசன் நாமத்தைப் பஜியுங்கள்'' என்று உபதேச மூலம் ஊர்மக்களைமிரட்டினர் ஆதினகர்த்தாக்கள்; அவர்களின் அடிதொழுது காணிக்கை கொட்டிக்கொடுத்து அந்தத் திருத் தொண்டு மூலமே தம்மைச் சீலர்கள் என்ற நிலைக்குக் கொண்டு சென்ற சுயநலக்காரர்கள், எதேச்சாதிகாரிகள், ஏன் என்று கேட்பவனையும், ஆகுமா என்று பெருமூச்சு விடுவோனையும், பாடுபடும் எனக்கா இந்தப் பஞ்சமும் நோயும்? உறிஞ்சிப் பிழைப்போனுக்கா உல்லாச வாழ்வும் வாழ்க்கையில் விருந்தும்? இடுப்பொடிய உழைக்கிறேன் இல்லாமை கொட்டுகிறதே, ஊருக்கு உழைக்கிறேன், உருக்குலைந்து போகிறேன், நான் வெட்டி எடுக்கும் இரும்பே எத்தரிடம் சிக்கி என் கரங்களில் தளைகளாகவும், என் நெஞ்சைத் துளைக்கும் குண்டுகளாகவும் உருவெடுக்கிறதே, ஈதென்ன அக்ரமம்? இதற்கோ நான் எலும்பு முறியப் பாடுபடுவது? நான் கட்டிக் கொடுக்கும் பாசறையும் நான் சமைத்துத் தரும் படைக் கலங்களும், நான் அமைத்துத்தரும் அரண்மனைகளில் புகுந்துகொண்டு அரசோச்சும் அக்ரமக் காரரிடம் சிக்கி, என்னையே அல்லவா கொடுமை செய்திடக் காண்கிறேன், இதுவோ நல்லாட்சி முறை? இதற்கோ நான் ஆயிரம் தொழில் செய்வது? காட்டில் உலவும் புலிக்குக் குகையும், நச்சுப் பல் கொண்ட பாம்புக்குப் புற்றும், நயவஞ்சக நரிக்குப் புதரும் கிடைக்கிறது; ஆயிரமாண்டுகள் அழகொளியுடன் நிற்கத்தகும் அரண்மனைகளும், மந்தகாச வாழ்வுக்கான மாளிகைகளும், மாற்றாரைத் திகைக்கச் செய்யும் கோட்டை கொத்தளம், அரண் அகழி ஆகியவற்றினையும் கட்டித் தந்திடும் எனக்குத் தங்க ஓர் குடில் இல்லை! இது அக்ரமம் என்று எடுத்துக்கூற எந்தத் தூய்மையாளனும் தோன்றிடக் காணோம், சாமான்யன் இதைக் கேட்டாலோ, சன்மார்க்கமறியாதான், சழக்கருடன்கூடி நாசமானோன், சர்வேசன் திட்டத்தை எதிர்த்திடும் சண்டாளன் என்று ஏசுகின்றனர். மலை மலையாக ஏடுகள் உள்ளன, படித்துப் படித்துப் பக்குவம் பெறுகின்றனர் என்று கூறுகின்றனர். மேதைகள் தீட்டியன மட்டுமல்ல, மேலே உள்ள தேவன் திருஅருளால் கிடைத்தன என்றும் இந்த ஏடுகள் பற்றிக் கூறுகின்றனர் - ஒரு ஏடும் எமக்கு நீதி வழங்குவதுதான் முறை என்று கூறக்காணோமே - என்று ஏழை கேட்கிறான் - பசியால் பதைத்து, கொடுமைக்காளானதால் குமுறி, துரத்தப்பட்டுத் துரத்தப்பட்டு மேலே சென்று தப்பிட வழி அடைபட்டுப் போன நிலையில், நிமிர்ந்து நிற்கவும், புருவத்தை நெரிக்கவும், கரத்தை உயர்த்தவும், கனல் கக்கவும் தொடங்கு கின்றான் - உடனே ஆத்மீகப் பாதுகாவலரும் அரசியலில் எதேச்சாதிகாரம் செலுத்துவோரும் அவனைத் தாக்கிடுகின்றனர் - தாக்கும்போது. இவன் ரஷிய ஏஜண்டு, பொது உடைமைக்காரன், புரட்சிக்காரன், அழிவு வேலைக்காரன், ஆண்டவனுக்கு விரோதி என்று பழி சுமத்துகின்றனர்!

அப்போதெல்லாம், சோவித் ரஷியா பற்றித்தான் பேசுவர் - ஏசுவர்.

உழவன் உள்ளம் குமுறிப் பேசும்போதும், பாட்டாளி பதைத்தெழுந்து நீதி கேட்கும்போதும், தாழ்த்தப்பட்டோன் தலை நிமிர்த்தி ஆண்டவன் படைப்பிலே பேதம் ஏதய்யா என்று கேட்கும்போதும், புரோகிதப் புரட்டு, மதத்தின் பெயரால் புகுத்தப்பட்டுள்ள மடத்தனம், ஆகியவற்றினைப் பகுத்தறிவாளர் கண்டிக்கும் போதும் - ரஷியா, ரஷ்யா! - அந்த நாசபுரியின் நண்பர்கள் இந்த மாபாவிகள், இவர்களைத் தூண்டிவிட்டு, இந்த நாட்டைப் பிடித்தாட்ட பெருந் திட்டம் தீட்டுகின்றனர் ரஷியாவில் பேயாட்சி நடத்திடுவார் - உடனே அழித்தொழித்திட வேண்டும் - எம் முறையும் மேற்கொள்வோம் - கையில் கிடைத்ததைக்கொண்டு தாக்குவோம் - என்று கொக்கரித்துக் கிளம்புவர், ஒவ்வோர் நாட்டுக் கொடுங்கோலர்களும்!

பட்டினி கொட்டும், பஞ்சம் பரவும், அகவிலை தலை விரித்தாடும் - நன்மையும் தீமையும் பகல் இரவு போல மாறி மாறி வரத்தான் செய்யும், அவனவன் பாவ புண்யத்துக்குத் தக்கபடி ஓர் புனிதன் படி அளக்கிறான், ஆட்டுக்கும் அளந்துதான் வால் அமைக்கிறான் ஐயன், இட்டார்க்கு இட்ட பலன், அன்று எழுதினான் இன்று நடக்கிறது என்று பேசிட பூசாரிக் கூட்டம் எங்கும் கிளம்புகிறது; ஏழையின் வாயை அடைத்துவிடுகிறது.

“ரஷியா என்றோர் நாடு இருக்கிறதாம். . . . அங்கு. . . . ” என்று ஏழை பேசத் தொடங்கினாலோ,. . . . “அங்கு தேனும் பாலும் ஆறாக ஓடுகிறது, வாரி வாரிப் பருகலாம், பாடுபடாமல் பிழைக்கலாம். . . . பைத்யக்காரா! பைத்யக்காரா! பொய்யுரைகேட்டுப் பூரித்துப் போகிறாயே! அது ஓர் பாப பூமி! பழி பாவத்துக்கு அஞ்சாத பாதகர்கள், எதையும் இல்லை என்று கூறிடும் வஞ்சக நெஞ்சினர், ஏழை மக்களை இம்சித்து வேலை வாங்கி, மிருகங்களைப் பட்டியில் அடைத்து வைத்துத் தீனி போடுவதுபோல, கடுமையாக வேலை வாங்கி, கட்டுக் காவலில் வைத்துவிட்டு, ஏதோ தீனிபோட்டு வருகிறார்கள், அங்கு ஞானமும் மோனமும் கிடையாது, கலையும் காவியமும் காண முடியாது, தேர் திருவிழா இல்லை, தேவனருள் கிடையாது, மகிழ்ச்சி இல்லை, எழுச்சி இல்லை, செக்கு மாடுகள் போல மக்கள் கிடந்துழல்கின்றன; இங்கு நீ ஆயிரம் கேள்விகள் கேட்கிறாய், பொறுமையாகப் பதில் அளிக்கிறோம், அஞ்ஞானத்தால் உளறுகிறாய், மெய்ஞ்ஞானம் போதிக்கிறோம், சந்தேகப் பேய் பிடித்தாட்டுகிறது அதைப் போக்குகிறோம் - அங்கு இதுபோல் முடியுமா? ஏன் என்றுகேட்டு வாய்மூடு முன் பிணமாவாய்! எதிர்த்து வேலை செய்ய எண்ணினால் போதும் சைபீரியா பாலைவனத்துக்குத் துரத்துவர் - அங்கு உன்னைச் சாகடிக்கத் துப்பாக்கி தேவை இல்லை, கடுங்குளிர் போதும்” - என்று கூறி மிரட்டிவிடுவர், ஆட்சியாளர்களும் ஆலய அதிபர்களும்.

நாம் என்ன கண்டோம்! நமக்கென்ன புரிகிறது! - என்ற மனப்போக்குடன் பல ஆண்டுகள் பாமரர் இருந்துவந்தனர் - அந்த நிலை மெள்ள மெள்ள மாறலாயிற்று. சோவியத் நாட்டின் சோபிதம் பற்றிய சொல்லோவியங்களைக் காணவும், ஆய்வுரைகளைக் கண்டு தெளிவுபெறவும் வாய்ப்புகள் கிடைத்தன; சோவியத் நாடும் ‘பரீட்சைக்கூடம்’ என்ற நிலையிலிருந்து பாசறையாகி, இன்று சமதர்ம அறிவு பரப்பிடும் பல்கலைக் கழகமாகித் திகழ்கிறது உலகப் பெரும் போரிலே ரஷியா காட்டிய ஆற்றல், அவனிக்கே ஓர் பாடமாக அமைந்தது - பிரிட்டனும் அமெரிக்காவும் பேயாட்சி நடத்தப்படும் பாப பூமி என்று எந்த ரஷியாவைக் கண்டித்துப் பேசினரோ, அந்தப் பேரரசின் பெருந்தலைவனாம் ஸ்டாலினுடன் கூடிப் பணியாற்றினர் - உலகில் ரஷியாவுக்கு ஓர் உயர் இடம், உரிய இடம் கிடைத்திடத்தான் போகிறது என்ற உறுதிப்பாடு, ஹிட்லரின் வீழ்ச்சியின் மூலம் ஏற்பட்டுவிட்டது! இனி எத்தர்கள் தம் சித்தம் போல் பேசி மக்களை ஏமாளிகளாக்கிவிட முடியாது என்ற கட்டம் பிறந்துவிட்டது; பல்வேறு நாட்டுப் போர் வீரர்கள், சோவியத்தின் செஞ்சேனை வீரர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது; மிருக நிலை என்றனர், இவர்களோ மென்மையான இதயம் படைத்தோராக உள்ளனர். ஏதும் அறியாதவர்கள் என்று ஏளனம் செய்தனர், இவர்களோ எல்லாம் அறிந்து பேசுகின்றனர்; கலை அறியார் என்றனர், இவர்களோ ஆடலிலும் பாடலிலும் அகமகிழ்கிறார்கள்; ஆட்சியாளரின் கொடுமையால் இவர்கள் ஆமைகளாய் ஊமைகளாய் உள்ளனர் என்று கூறினர், இவர்களோ ஸ்டாலினைத் தமது ரட்சகர் என்று புகழ்ந்து கொண்டாடுகின்றனர், இல்லாமையை ஒழித்துக் கட்டிய ஆட்சி முறையைக் காப்பாற்ற இன்னுயிரைத் தத்தம் செய்வதற்குத் தயாராக இருப்பதாகச் சூளுரைக்கின்றனர்; மற்றானைத் தாக்கும் போது புலியாகின்றனர், நண்பர்களிடம் பழகும்போது குழந்தை போலாகின்றனர்! இவர்களா பாப பூமியினர்!! செச்சே! வீண் புரளி! வேண்டுமென்று கூறப்பட்ட கட்டுக்கதை, நமது கண்களை மறைத்திட, கருத்தைக் குழப்பிட, காதகர்கள் கட்டிய பொய்யுரை! சோவியத் ஆட்சி, நல்லாட்சிதான், ஏனெனில் அங்கு மக்களின் மாட்சிக்கு மதிப்பு இருக்கிறது - என்று களம் சென்ற காளையர் கூறினர்; சோவியத் நாடு பற்றி இருந்துவந்த இருள்திரை பல்வேறு இடங்களில் கிழிந்தது - சமதர்ம ஆட்சியின் ஒளிக் கதிர்கள் மெல்லிய கோடுகளாக, உலகின் பல்வேறு இடங்களில் தெரியலாயின; மிகச் சிரமப்பட்டு அமெரிக்கா, தங்கத்திரை யிட்டுத் தன் மக்களின் பார்வையை மறைத்து வந்தது - இன்றுங்கூடப் பெருமளவுக்கு இந்நிலைதான் அமெரிக்காவில்.

மீண்டும் ஓர் பயங்கரப் போரை மூட்டிவிட்டு, வல்லரசுகள் தமது பலத்தை ஒன்று திரட்டி, ஏமாந்த நாடுகளைத் தமது முகாமுக்குள் இழுத்துப் போட்டுக்கொண்டு, எழிலும் ஏற்றமும் பெற்று, எவருடைய மனதையும் வசீகரிக்கத்தக்க முறையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிவரும் சோவியத் நாட்டின் மீது கடைசித் தாக்குதலை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு, அமெரிக்கப் பேரரசு வள்ளல் வேடமிட்டுக்கொண்டு கிளம்பியது கண்டு, சோவியத் நாடு இனியும் நாம் வாளாயிருத்தல் தேவையில்லை, வண்ணம்தனைக் காட்டுவோம், வலிவும் பொலிவும் பிறர் காணட்டும், நல்லோர் மகிழவும் நாசகாலர் மிரளவுமான நிலையை நாம் பெற்றிருக்கிறோம், இனி உலகினரே! காண்மின்! உயர்ந்த திட்டம் இது என அறிமின்! - என்று கூறிட நமக்கு இயலும் என்று பெருமிதத்துடன் பேசிடும் கட்டத்தில் நிற்கிறது.

இந்தக் கட்டத்தில் சோவியத் நாடு இருக்கும் நேரத்தில் புல்கானினும், குருஷேவும், இந்திய துணைக்கண்டத்திலே சுற்றுப்பயணம் செய்து, இங்குக் களிப்புச் சுறாவளியைக் கிளம்பி விட்டனர் - அது கடல் கடந்து பிரிட்டனையும், அமெரிக் காவையும் மிரட்டிவிட்டது.

பத்து இலட்சம் மக்கள் கூடினர்! பதினாறு மைல் வரையில் மக்கள்! கட்டுக்கடங்காக் கூட்டம்.

மலர் மலை போல! மக்கள் கூட்டம், கடல் போல!

ஆரவாரம் அலைபோல!

ஆனந்தம், பெரு வெள்ளம் போல! கண் கொள்ளாக் காட்சி! சரிதம் காணா வரவேற்பு!

இவைபோல, தயாரிக்கப்பட்ட தலைப்புகள் அல்ல, விளக்கம் வெளியிடுகின்றன, நாட்டிலே உள்ள ஏடுகளெல்லாம்; பட்டி தொட்டிகளிலும் புல்கானின், குருஷேவ்! என்று பேசுகின்றனர்; பார்த்தோர் பிறருக்குக் கூறுகின்றனர், அனைவரும் திருவிழாப் போலக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இவ்வளவுக்கும் வந்தவர்கள் ஈராண்டுகளுக்கு முன்பு வரையில் இந்நாட்டுப் பொதுமக்களுக்கு அறிமுகமாகாதவர்கள்.

ஸ்டாலின் அல்ல, வந்திருப்பது - புல்கானின் - குருஷேவ் - ஸ்டாலின் வழி நிற்பவர்கள் - அவர்கள் விட்டுச் சென்ற பணியினைத் தொடர்ந்து நடத்துபவர்கள்.

இங்கு டிட்டோ வருவதற்கு முன்பு, அவரைப் பற்றி மக்கள் தெரிந்திருந்த அளவுக்குக் கூட, புல்கானின், குருஷேவ் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்ததில்லை.

எனினும், சோவியத் நாடு, அதன் முறை, நெறி ஆகியவை பற்றி, ஏறக்குறைய ஒரு தலைமுறை கேட்டுக் கேட்டு, மக்கள் மனதிலே ஏற்பட்டிருந்த எழுச்சி இன்று வெள்ளம்போல் கரை புரண்டோடிற்று - என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை எங்கும் நான் கண்டதில்லை என்று எப்போதும் மாபெருங் கூட்டங்களைக் காணும் நேரு பண்டிதரே கூறத்தக்க வகையில் கூடிற்று.

சுகர்னோவும் யூநூவும், நாசரும், டிட்டோவும், இங்கு வந்தனர் - அவர்களெல்லாம் அந்தந்த நாட்டு நேருக்களாக இருப்பவர்கள். எனவே, நாட்டு விடுதலைக்காக வீரப்போரிட்ட தலைவர்கள் என்ற முறையில், மக்களும் மக்களின் தலைவர்களும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஈடனும் டல்லசும் வந்திருந்தனர் - அவர்களை மாளிகை வாசிகளும், அவர்களிடம், மக்களுக்குத் தம்மிடம் உள்ள பாசத்தைக் காட்டி, நண்பர்களாக்கிக்கொண்ட ஆளவந்தார்களும், மதிப்பளித்து வரவேற்றனர்.