அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஓட்டுச்சாவடி போகுமுன்பு...
1

பம்பாயில் சவானுக்கு எதிர்ப்பு -
தமிழர் தாழ்ந்த நிலை -
வடக்கின் வளர்ச்சி

தம்பி!

புதுடில்லியிலிருந்து கிளம்பி வந்த மொரார்ஜி தேசாய், பூவிருந்தவல்லியிலே, காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைத்தார் - ஞாயிறன்று!

இந்தத் திருநாளுக்குத் துணைநின்றனர். ஓ.வி. அழகேசன், போன்றோர். உள்ளூர் அமைச்சர்கள் உற்சவத்திலே கலந்து கொண்டனர்.

ஒரே ஒரு குறைதான்; மக்களுக்கு உற்சாகம் எழவில்லை!!

முதல் காரணம், முதன் முதலாக இவர்கள் அழைத்து வந்தது, யாரை, கவனித்தாயா? மலடியைக்கொண்டு, பிள்ளைப் பேறின் சுகவழி பற்றிய போதனை பெறுவது போல, மங்கலநாண் இழந்தவளைக்கொண்டு, கட்டுக் கழுத்தினளுக்கு மங்கல ஸ்நானம் செய்விப்பது என்பார்களே, அதுபோல பம்பாய் மாநிலத்தில், மக்களின் சீற்றத்தால் தாக்கப்பட்டு மேற்கொண்டு அங்கே முதலமைச்சராக இருக்கமுடியாத நிலைபெற்று, நேரு பண்டிதருடைய தயவினாலே, டில்லியில் வேலைதேடிக் கொண்டு ஓடிப்போன மொரார்ஜி தேசாயை, அழைத்து வந்தார்கள்!

பாபம், அவர், ஆமதாபாத்தில் பட்ட அல்லலையும், பம்பாயில் பதறியதையும், மக்கள் பத்திரிகை வாயிலாகப் பார்த்திருக்கிறார்கள்.

பேச வந்தார் இந்தப் பெரியவர்; ஆமதாபாத்திலே, ஆத்திரமிகுந்த மக்கள், இவர் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும், மக்களுக்குத் துரோகம் செய்துவிட்ட மகானுபாவரே! போதும் உமது பேச்சு! நிறுத்திக்கொள்ளும்! என்று பெருங் கூச்சலிட்டு, இவரைப் பேச விடாமலே தடுத்துவிட்டனர். பெரிய கலகம் நேரிட்டது. பல நாள் பட்டினி கிடந்து, பரிதாபத்தை ஊட்டிப்பார்த்தார்; பிறகாவது பேசவிடுவார்கள் என்று அப்போதும் மக்கள், நீ என்ன மாயாஜாலம், மகேந்திர ஜாலம் செய்தாலும், அதற்கெல்லாம் மயங்கப் போவதில்லை என்று கண்டிப்பாகக் கூறிவிட்டனர். பேச, மேடை ஏறினார், கலகம்தான் மீண்டும்!

எந்த மாகாணத்தில் இவர் தேசிய விடுதலைப் போராட்டக் காலத்திலே, வீரர் என்றும் தீரர் என்றும் தியாகி என்றும் கர்மயோகி என்றும் புகழ்ந்துரைக்கப் பட்டாரோ, அங்கு இவருடைய பேச்சு, செல்லாக்காசு ஆகிவிட்டது - இவர் வருகிறார் பூவிருந்தவல்லிக்கு!!

பாரததேசம் என்பது ஒன்று - இதிலே வடக்கு என்றும், தெற்கு என்றும், மத்திய சர்க்கார் என்றும், மாநில சர்க்கார் என்றும், இந்த மொழி என்றும், அந்த மொழி என்றும் பேசிப் பிளவு உண்டாக்கக்கூடாது என்று மொரார்ஜி "தேசிய மாமந்திரம்' உபதேசித்தார்; அவருடைய மாகாணத்திலே, அவரை இந்த உபதேசத்தைப் பேசக்கூட விடவில்லை; விரட்டி அடித்தனர், வீறுகொண்ட மக்கள்! அங்கு அல்லற்பட்டவரை அழைத்து வந்து இங்கு விழா நடத்திக் காட்டினார் அமைச்சர் பக்தவத்சலம்!! பரிதாபம்! ஆரம்பமே அழுது வடிவதாக அமைந்தது பற்றி அவருடைய "ஆப்த' நண்பர்களேகூட ஆயாசப்பட்டுக் கொண்டார்களாம்!!

முதலமைச்சருடன் சேர்ந்து மொத்தம் நான்கு மந்திரிகள், தம்பி! டில்லி மந்திரி ஒருவர் - அவர்தான் மொரார்ஜி - குட்டி மந்திரி ஒருவர் - அரியலூர் அழகேசன் அவர்கள்!

எல்லோருமே அன்று வெளுத்து வாங்கிவிட்டார்களாம் போயேன், நமது கழகத்தை,

"கூட்டம் கூடும் அவர்களுக்கு - கும்பகோணம் மாமாங்கத் துக்குக் கூடத்தான் கூடுகிறது'' - என்றாராம், ஒரு மேதை!! இவர்களுக்குக் கூட்டம் வராததாலே, இந்தப் பேச்சுப் பேசுகிறார்கள், வெட்கமின்றி; பிறருக்குப் பெரிய கூட்டம் கூடினால், "மாமாங்கக் கூட்டம்' என்று கேலி பேசுகிறார்களே, இவர்களுடைய நேரு வருகிறபோது, கூடும் கூட்டமும், மாமாங்கந்தானா? அப்போது பார், வாயை! ஜன சமுத்திரம்! மக்கள் வெள்ளம்! இலட்சோப இலட்சம்! என்றெல்லாம் அப்போது பெருமை அடித்துக் கொள்கிறார்களே!! - என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் பேசிக் கொண்டதாகக் கேள்விப்பட்டேன்.

நொந்த உள்ளம் கொண்டோர் தம்பி! பேசுவது, வேகாததைத் தின்றுவிட்டு வேதனைப்படுபவர் எடுத்திடும் வாந்தி' போலத்தான் - நாற்றமும் குழப்பமும் அவ்வளவு இருக்கும். எனவேதான், "கூட்டம் கூடுகிறதாம் கூட்டம்! என்ன கூட்டம்! மகாமகத்துக்குக்கூடத்தான் கூடுகிறது'' என்று பேசினர். போகட்டும், எப்படியோ ஒன்று தம்மை நிந்திப்பதால், நொந்து கிடக்கும் அவர்கள் உள்ளத்துக்குச் சிறிதளவு சாந்தி ஏற்படட்டுமே, நமக்கென்ன நஷ்டம்!

மொரார்ஜி, மாகாணப் பிரிவினை உணர்ச்சி - வடக்கு தெற்கு என்ற பேதம் கூடாது, என்று இங்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் - அதே போது பம்பாய் மாகாண முதலமைச்சர் சவான், திணறித் திண்டாடிப் போகிறார். மொரார்ஜி இங்கு தந்த உபதேசம் போலவே சவான் அங்கு உபதேசம் செய்யப் புறப்பட்டார். மராட்டிய மக்கள் இதற்கு இடந்தரவில்லை!

சம்யுத்த மராட்டியம் வேண்டும்!
சவான், திரும்பிப்போ!

என்ற முழக்கம் இடியென்று கிளம்பிற்று!

இது சரியா?
இது முறையா?
இது தேசியம் ஆகுமா?

என்றெல்லாம் சவான், இறைஞ்சுகிறார் - மராட்டிய மக்களோ,

எமது உரிமையை இழக்கமாட்டோம்!
எமக்கு சம்யுத்த மராட்டியம் வேண்டும்!

என்று முழக்கமிட்டிருக்கிறார்கள்.

கருப்புக் கொடிகளைக் காட்டி, ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.

முதலமைச்சர் கலந்துகொள்ளும் கூட்டமாதலால் போலீஸ் படை வரிசையும் ஏராளம், ஆட்சிக்குத் துதிபாடகர் களாக உள்ளோரும் நிரம்ப! எனினும், உரிமை முழக்கத்தின் முன்பு எந்தச் சக்தியும் நிமிர்ந்து நின்றிட முடியவில்லை! சவான் பாடு, திண்டாட்டமாகிவிட்டது. போற்றித் திரு அகவல் போதுமானதாகிவிடவில்லை!

இந்த "பம்பாய்' மாநிலத்திலிருந்து வந்த மொரார்ஜி தான் பூவிருந்தவல்லியிலே "ஒற்றுமை' - "தேசியம்' என்பன பற்றித் திருப்பல்லாண்டு பாடி இருக்கிறார், - ஆங்கிலத்தில் அதனை அவசரத் தமிழாக்கித் தந்திருக்கிறார், அமைச்சர் பக்தவத்சலனார்.

வடக்கே உள்ள மக்கள் ஏதோ, மாகாணப்பற்று, மொழிப் பற்று, ஏதுமற்று "பாரதம்' என்ற பாசத்துக்கே கட்டுப்பட்டுப் போய்விட்டது போலவும், இங்கே மட்டுமே அதுபோன்ற ஓர் உணர்ச்சி ஏற்படுத்தப்பட்டு இருப்பது போலவும், அதுவும் நாம் நடத்துகிற பிரசாரம், விஷமத்தனத்தையும் விபரீதத்தையும் இங்கு மூட்டிவிட்டது போலவும், அந்த நஞ்சு போக மொரார்ஜி போன்றார் வந்து பேசுவது போலவும் ஒரு நாடகம் ஆடப்படுகிறது; தம்பி, உண்மை நிலைமையோவேறு, அதனை நீயும் அறிவாய், நம் நாட்டிலுள்ள காங்கிரசாரும் அறிவர்.

எந்த மொழிக்காரரும், மாநிலக்காரரும், காங்கிரஸ் என்பதற்காகக் கட்டுப்பட்டு, தமது உரிமைகளை இழந்துவிடத் தயாரில் இல்லை! "கண் கண்ட கடவுள்' என்றும் "பார்புகழ் தலைவர்' என்றும் பிற நேரங்களிலே கொண்டாடும் நேரு பண்டிதராக இருப்பினும், மொழி உரிமை, மாநில உரிமை என்ற பிரச்சினைகள் எழும்போது, பண்டிதரையே பதறி ஓடச் செய்கிறார்கள். காந்தி படமானாலும் நேரு உருவச் சிலையானாலும், கதர்ச் சட்டையானாலும் குல்லாயானாலும், கொளுத்துகிறார்கள்,

உடைத்துத் தூளாக்குகிறார்கள். துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்ச மறுக்கிறார்கள்! இரத்தத்தைச் சந்தனக் குழம்பென எண்ணிக் கொள்ளுகிறார்கள். அமைச்சர்கள் அஞ்சி ஓடுகிறார்கள்! ஆமதாபாத்தில் அகில உலகப் புகழ் பெற்ற நேரு பண்டிதர், 20 நிமிடம் முயன்று பார்த்தார், கெஞ்சிப் பேசினார், கோபம் மிஞ்சிடப் பேசினார், கதை பேசிப் பார்த்தார், எதுவும் பலன் தரவில்லை!

எங்கள் உரிமை
எங்கள் குஜராத்!

என்றே எக்காளமிட்டனர் குஜராத்திகள்!

வங்கமும் - பீகாரும் இணையும் என்று கூறினார், வங்க முதலமைச்சர் டாக்டர் ராய்! இஃதன்றோ தேசிய - இது வன்றோ பாரதப் பண்பாடு என்று அங்கிருந்து மகிழ்ந்து வாழ்த்தினார் நேரு பண்டிதர். இங்கிருந்தபடியே ஆசி கூறினார் ஆச்சாரியார்! ஆனால், வங்க மக்கள் செய்தது என்ன?

கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பினர் - டாக்டர் ராய்மீது! அவர் "தேசிய ஒற்றுமை' பேசித்தான் பார்த்தார்! "நான் தெரியவில்லையா? உங்கள் தலைவன்! வங்கத்துக்கு வாழ்வளிப்பவன்! உங்கள் சுகமே என் சுகம் என்று எண்ணிப் பணியாற்றும் ஊழியன்!'' என்று ஏதேதோ பேசினார்! அவருடைய பேச்சுக்குப் பக்க பலமாகப் போலீசும் பட்டாளமும் நின்றது! எனினும் சிங்கக் குணம் படைத்த வங்க மக்கள், "இணைப்பு' எமக்கு வேண்டாம் என்று தீர்ப்பளித்தனர் - டாக்டர் ராயைக் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றினர்-"தள்ளாத வயதிலே, இந்த எதிர்ப்புத் தருகிறீர்களே, தகுமா?'' என்றார். "எதிர்ப்பு உம்மீது அல்ல; எம்மைத் துச்சமாக மதித்த உமது போக்கினை எதிர்க்கிறோம், என்றனர் வங்க மக்கள்! ஆர்ப்பரிப்பு அமளியாற்று! அடக்கு முறை அமளியைக் காட்டுத் தீயாக்கிற்று! வங்கமும் பீகாரும் இணைந்து ஒரு பேரரசாகும் என்று பேசிவிட்டு வந்த டாக்டரே, பிறகு, இணைப்பு இல்லை! வங்கம் வங்கமாகவே இருக்கும்! என்று அறிவித்தார்! மக்கள் வெற்றி பெற்றனர்.

இதுபோல, வடக்கே, ஒவ்வொரு மாநிலத்தாரும் தத்தமது உரிமையைப் பாதுகாத்துக் கொண்ட பிறகு, தேசியக் காலட்சேபம் செய்கிறார்கள்!

விருந்தினை முடித்துக்கொண்டு, பட்டுப்பட்டாடை அணிந்துகொண்டு, பீடத்தில் அமர்ந்து, விரலில் உள்ள வைர மோதிரத்தைப் பளபளப்பாக்கிக் கொண்ட பிறகு,

வாழ்வாவது மாயம்
செல்வம் ஒரு பிசாசு

என்று வேதாந்தம் பேசும், பாகவதரைப் பார்க்கிறோமல்லவா, அதுபோல் வடக்கே உள்ள தலைவர்கள் இங்கு வந்து நமக்குப் பேசுகிறார்கள் - வேறென்ன!

தம்பி! வடக்கே உள்ள மக்கள், தத்தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதிலே, தவறுவதில்லை. அதற்கான உரிமைக் கிளர்ச்சிகளிலே மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது மட்டுமல்ல, அந்தக் கிளர்ச்சிகளில்,

வெறுக்கத்தக்க பலாத்காரத்தை,
கண்டிக்கத்தக்க காலித்தனத்தை,

புகுத்துகிறார்கள்!

இங்கு, நாம் நமது மாநில உரிமைக்காக, மொழி உரிமைக்காக நடத்துவது இன்னும் கிளர்ச்சி உருவம்கூட எடுக்க வில்லை! நியாயத்தை எடுத்துரைக்கிறோம்; காரணங்களைக் காட்டுகிறோம்; நீதி கோருகிறோம்; இதற்கே, எவ்வளவு இடி, இழிசொல்! எத்துணை அடக்கு முறை; தாக்குதல்!

நேரு பண்டிதர் சிலையை உடைக்கும் அளவுக்கு வடக்கே காலித்தனம் நடக்கிறது, அதற்குத் துப்பாக்கி தூக்குகிறது, அங்கு உள்ள துரைத்தனம். இங்கு நாம், பொது மக்களிடம் முறையிட்டுக் கொள்கிறோம், அதற்கே, துப்பாக்கி துரத்துகிறது!

இந்த இலட்சணத்திலே, மொரார்ஜிபாயை அழைத்துக் கொண்டு வருகிறார்கள் இங்குள்ள அமைச்சர்கள், நமக்கு "தேசிய' பாடம் போதிக்க! வெட்கம்! வெட்கம்! என்று கூறுவதன்றி, வேறென்ன கூறுவது?

நான் பன்னிப் பன்னிக் கூறி வருகிறேன், "இல்லாத ஒன்றை, இயற்கையாக எழாத ஒன்றினை, எத்தனை பெரிய தலைவர் களானாலும், அறிவாளர்களாயினும், ஆற்றலரசர்களாயினும் கூடி முயற்சித்தாலும், புகுத்தி நிலை நிறுத்திட முடியாது' என்பதனை. காங்கிரஸ் நண்பர்கள் ஏதோ "தேசிய ஒற்றுமை' என்ற உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது போலவும், அதனை நாம் பாழாக்குவது போலவும் எண்ணிக்கொண்டு வேதனைப் படுகிறார்கள், வெகுண்டெழுகிறார்களேயன்றி, இயற்கையாக எழ முடியாத ஓர் உணர்ச்சியை இட்டுக்கட்ட முயற்சிப்பது தவறு என்பதை அறிந்து திருந்த அஞ்சுகிறார்கள். தம்பி! வெண்ணெய்ச் சட்டியை வெளியே வைத்திருந்தால் பூனை களவாடித்தின்று விடும் என்று பயந்துகொண்டு, வீட்டுக்கரசி, அந்த வெண்ணெய்ச் சட்டியை எடுத்து அடுப்புக்குள்ளே செருகி வைத்தால் என்ன ஆகும்!! "தேசியம்' பேசுவோர், நம்மீது குறைபட்டுக் கொள்கிறார்களேயன்றி, இந்தப் பேருண்மையை உணர மறுக்கிறார்கள்.

எத்தனை எத்தனையோ நெருக்கடிகள், தாக்குதல்கள், இடிகள், இழி நிலைகள் ஆகியவற்றினுக்குப் பிறகும், தமிழன் என்ற ஓர் உணர்ச்சி இன்றும் மகிழத்தக்க அளவுக்கும், நம்பிக்கை தரத்தக்க வகையிலும், மின்னிக்கொண்டு இருக்கிறது என்றால், தம்பி! இந்த உணர்ச்சியைப் பெற, எத்தனை எத்தனை நூற்றாண்டுகள், எவ்வளவு பெரும் பெரும் அறிவாளர்கள், என்னென்ன வகையினாலே பணியாற்றினர், தெரியுமா அவ்வளவையும் அரை நூற்றாண்டில் அழித்துவிட முடியும் என்று எண்ணிக் கொண்டனரே, அதிலேதான் தவறு இருக்கிறதே தவிர, நம்மீது என்ன குற்றம்?

சிலம்பு ஒலிக்கவில்லை, சிந்தாமணி மின்னிடவில்லை, அகம் இல்லை, புறம் இல்லை, தொல்காப்பியம் ஏதுமில்லை. எனினும், குஜராத்தி தன் மொழிக்கு ஏற்றமும், உரிய இடமும், தனித்தன்மையும், இவைதமைக் கெடுத்திடாத தனிக் கொற்றமும் தேவை என்று கேட்கலாமாம், கேட்பதுடன் விடாது கேடுபல நேரிடுமே என்றுகூட எண்ணிடாமல், அமைச்சர்களை விரட்டலாமாம், அமளி பலவற்றினை மூட்டிவிடலாமாம், இங்கு நாம் மட்டும், அருந்தமிழ் மரபு காத்திட "உம்' மென்றாலும் "இம்'மென்றாலும் தேசியம் கெடுமாம், பாரதீயம் பாழ்படுமாம், நாடு நலியுமாம்! என்ன அறிவீனம்!! என்று சீறிக் கேட்பதா? என்னே உமது ஓரவஞ்சனை? என்று துக்கத்துடன் கேட்பதா? நம்மை எவ்வளவு, ஏது மறியாதார், இனப்பற்று இல்லாதார், மரபு காத்திடும் வழி அறியாதார், என்று எண்ணிக் கொண்டிருந்தால், மொரார்ஜிகளைக் கொண்டுவந்து இங்கு பேசச் சொல்வார்கள் என்பதை எண்ணிப்பார், தம்பி, எண்ணச் சொல்லிப் பார், காங்கிரஸ் நண்பர்களை.