அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


'நெடுநல்வாடை' நின்ற பிறகு

தோழர்கட்குச் சகிப்புத்தன்மை -
காங்கிரசாட்சியும் நகரசபையும்

தம்பி!

"நெடுநல்வாடை'யில் சிக்கினோர், தென்றல் மீண்டும் ஓர் நாள் கிட்டுமோ என்று ஏங்கிக் கிடப்பர் - நமது நிலை அதுபோன்றதாக இருந்தது. நீண்ட நாட்களாக - செச்சே! நாட்களா? - நீண்டகாலமாக, நமது தொடர்புக்குத் தனிச் சுவையும் தகுதிமிகு பயனும் அளித்துவந்த, "மடல்' நின்றுபோய் இருந்தது, செய்வதையும் செய்துவிட்டுச் செப்படி வித்தை வேறா? என்று கோபித்துக்கொள்கிறாய் - தெரிகிறது. ஆனால், நான் என்ன செய்ய? குறைபாடு ஏற்பட்டுவிட்டதற்கு, நானேவா முழுக்க முழுக்கப் பொறுப்பாளி? "நீயும், உன்போன்ற உடன்பிறந்தார்களும், "மடல்' எழுத எங்கே எனக்கு நேரம் தந்தீர்கள்? திங்களில் இருபது நாட்களேனும், நானன்றோ, நீங்கள் இருக்குமிடம் தேடிவந்தேன். காடும் மேடும் கண்டு கலங்கினேனா? அருவிக்கரை ஓரமாயினும் சகதி மிகு இடமெனினும், கொஞ்சிடும் நஞ்சை சூழ் நகராயினும், பஞ்சம் தாக்கும் பட்டியெனினும், சகடத்தைச் சாய்த்திடும் குழிகள் மிகு பாழ்வெளியெனினும், புதை மணல் நிரம்பிய புரம் எனினும், உன் அன்பழைப்புப் பெற்றால், தயக்கம் கொள்ளவா முடிகிறது; ஓடோடி வருகிறேன், உன் உள்ளன்பைப் பெற, உற்சாகம் பெற! அண்ணா! இது அறுபத்து எட்டாவது முறை!! இம்முறையும் வாராது இருப்பீரேல்...! என்று உரிமையுடன், கோபித்துக் கொள்கிறாய். "பயண அலுப்பு, பாதையில் உடைப்பு' என்று என்ன காரணம் காட்டினால்தான், உன் மனம் திருப்தியா பெறுகிறது! "அதெல்லாம் முடியாது, மாற்றுக் கட்சியினர், மனம்போன போக்கிலே ஏசிவிட்டுச் செல்கின்றனர் - கோபம் கொந்தளிக்கிறது - மக்களுக்கு உடனடி வந்து, விளக்கம் தாராது போனால், மனம் உடைந்துபோகும், மன்றம் கலகலத்துப் போகும், கழகம் கரையும், உலகம் பழிக்கும் என்றெல்லாம் காரணம் காட்டுகிறாய், நீட்டோலை கொண்டு தாக்குகிறாய்! ஆனால் தம்பி அந்த நீட்டோலைத் தாக்குதலில்தான், நான் எத்துணை இன்பம் காணுகிறேன், தெரியுமா! கழகக் கருத்துக்கள் பரவவேண்டும், குறிக்கோளுக்கு வலிவு ஏறவேண்டும், மாற்றார் கட்டிடும் மமதைக் கோட்டைகள் மண்மேடாக வேண்டும் என்ற ஆர்வமல்லவா, உன்னை, அவ்விதமெல்லாம், எழுதச் சொல்கிறது. கோபம் கொப்பளிக்கிறதே, நமது நிலை குறித்துத் துளியும் எண்ணிப் பாராமலேயே, இத்துணை வேகம் காட்டுகிறானே தம்பி! என்று, ஒரு கணம் எண்ணுகிறேன். மறுகணமோ, கழக வளர்ச்சியில் உள்ள அக்கறை அல்லவா இதற்குக் காரணம். இத்தகைய ஆர்வமன்றோ பெருதற்கரிய கருவூலம், அஃதன்றோ நாம் காண்பது என்று எண்ணுகிறேன். உன்னைக் காணப் புறப்படுகிறேன். ஓட்டையோ ஒடிசலோ. சொந்தமோ இரவலோ, எந்த மோட்டார் கிடைத்தாலும், வழி நெடுக, அன்பு பொழியும் கண்ணினர், ஆர்வமிகு உரையினர். அஞ்சா நெஞ்சினர், ஆற்றல் மறவர்கள் ஆகியோரைக் கண்டு கண்டு களிப்படைகிறேன்; உன் செயல்திறனின் உருவமாய் அமைந்திடும் மாபெருங் கூட்டத்தைக் காண்கிறேன். மட்டற்ற மகிழ்ச்சியால் உந்தப்பட்டு, ஓராயிரம் சொல்லத் துடிக்கிறேன், ஒருசில மட்டுமே சொல்லுகிறேன். உள்ளம் விரும்பும் அளவுக்குப் பணிபுரியத்தக்க உடல் வளம் இல்லை - அறிந்தே இருக்கிறாய்! எனினும், எனக்குள்ள வலிவிலே செம்பாகம் உனக்கே! என்பது நீ அறிந்த உண்மை. ஆனால் நீ அறியாதது, என்னையோவெனில், நித்த நித்தம் உன்னைக்காண மெத்தவும் சுற்றிவந்த பிறகு, ஓய்வாக இருக்க, உள்ளத்திலே தோன்றிடும் கருத்துக்களை வகைப்படுத்த, வரிசைப்படுத்த, வளம்காண, படிக்க, சிந்திக்க, ஆராய, ஐயமகற்றிக்கொள்ள, நேரம் கிடைப்பதில்லை. தம்பி! நேரம் கிடைப்பதில்லை. இந் நிலையில் ஒவ்வோர் கிழமையும், உன்னிடம் உறவாட மடல் தீட்டி மகிழும் வாய்ப்புக் குறைந்தே போய் விட்டது; அடியோடு மறைந்தே போய்விடுமோ என்ற அச்சம்கூட மனதைப் பிய்த்துத் தின்னத் தொடங்கிற்று. எனினும், கூட்டங்கட்கு வரச்சொல்லி, வேலை முடிந்ததும், "விடை கொடுப்பாய் தம்பி!' என்று நான் கூறிடும்போது, "மடல்' எழுதுங்கள் அண்ணா! மறவாமல் எழுதுங்கள்!, ஏமாற்றாதீர்கள்! - என்று கூறுகிறாய். நான் என்ன செய்ய!! என்ன செய்ய என்றா கேட்கிறாய், இதோ இப்போது சொல்கிறீரே, அதுதான் - எப்படியாவது நேரம் கண்டுபிடித்து எழுதத்தான் வேண்டும் என்று கட்டளையிடுகிறாய்! சரி! எழுதுகிறேன். ஆனால் இப்போது நேரம் என்ன தெரியுமா தம்பி, ஏதோ அலுப்பு, கோழி கூவவில்லை, ஆனால், நேரம் அதுதான்! இரவு மணி பன்னிரண்டுவரை, கழகத் தோழர்களிடம் பேசிவிட்டுச், சிறிது படித்துவிட்டுப் பிறகு எழுதுகிறேன்.

பொதுக்கூட்டங்களிலே எடுத்துக் கூறியது தவிரக் கடிதமூலம், என் எண்ணங்களைத் தெரிவித்து நீண்ட காலமாகி விட்டதால், தம்பி, எதை விடுவது எதைத் தொடுவது என்ற திகைப்பேகூட ஏற்படுகிறது.

எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள், எழுச்சிகள்!

"வேலவன் குன்றம் வென்றோம்! இனி மாலவன் குன்றம் வெல்வோம்!' என்று இதோ ம.பொ.சி. குழுவினர் முழக்கமிட்டுச் செல்கின்றனர்.

"பிரிட்டிஷ் சிங்கத்தை வென்ற, வீரமிகு தலைவனே வருக! வருக! - என்று எழில்மிக எகிப்து பெற்ற இணையில்லாத் தலைவனாம் நாசருக்கு வரவேற்பு வழங்குகிறார்கள், ஓர் புறம்.

"எல்லாம் முடிந்துவிட்டது! மாணவர் படை கலைந்து போய்விட்டது! பொதுமக்களோ, எப்போதோ போய்விட்டார்கள் இவர்களை விட்டு! இப்போது நடிகர்களும் இவர்களை விட்டு விலகிவிட்டார்கள். இனி இதுகளுக்கு நாதியே இல்லை! - என்று நற்றமிழ் நாட்டுக்கு வந்துள்ள புதிய கொற்றவனார் அறிவித்து விட்டார்.

காமராஜரோ, கழகம் கலையப்போவது உறுதி என்று - ஏதோ கலைப்பதற்கான ஏற்பாட்டினை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டவர் போலப் பேசுகிறார்.

அவர் தயவை நாடிடுவோரோ நரகல் நடையை நாட்டிலே காட்டி, "ஓட்டு'க் கேட்கின்றனர்.

அடிக்கடி, மாற்றார்கள் கையாண்டு பார்க்கும் முறையான - கழகத்தில் பிளவு - என்று கூறிக் கரடிவிடும் வித்தையையும், கனம்களிலிருந்து வெறும் "சினம்'கள் வரையில், காட்டி வருகின்றனர்.

எல்லாவற்றையும் கண்டும் கேட்டும், கொள்ள வேண்டிய தைக்கொண்டு, தள்ளவேண்டியதைத் தள்ளி, இலட்சியபுரி நோக்கி இலட்சக்கணக்கானவர்கள் புடைசூழ, வீரநடைபோட்டு வருகிறாய்! இந்தக் காட்சியைக் கண்டும், கருத்திலே தெளிவு பெறாதார், உளர்! நாடு, முற்றிலும் காட்டுக் குணத்தை விட்டுவிடவில்லை என்பதற்குச் சான்று வேண்டுமல்லவா - அது இது! சேறு தேடிச் செல்லும் தவளையிடம், செந்தாமரையின் அழகு பற்றி, அகவல் பாடினால் என்ன, வெண்பாப் பாடினால் என்ன! பலன் உண்டோ! அஃதேபோல, இழுக்கிலே இன்பம் தேடிடும் சழக்கர்கள், நமது கழகத்திலே பேதம் மூண்டுவிட்டது, பிறவு கண்டுவிட்டது என்று பேசுவது காண்கிறோம். அழுக்குத் தேடி அலைவோருக்கு, கழகத்தின் வளர்ச்சியின் ஒரு கூறுதான், அதனைச் செம்மைப்படுத்த எடுத்துக் கூறப்படும் முறைகள் என்பது எங்ஙனம் புரியும்? சுட்டாலும் வெண்சங்கு நிறம் மாறாது! கழகம் அந்நிலையில் உள்ளது!! அவர்கள் அதனை உணர மறுக்கிறார்கள், உணரின் மருட்சி ஏற்படும் என்பதால். பொன்னைப் புடத்தில் போடும்போது, ஐயகோ! அநியாயமாக நெருப்பிலிட்டுவிட்டார்கள்! அரை நொடியில் வெந்து, கருகிச் சாம்பலாகிப் போகும், இந்தக் கட்டித் தங்கம் என்று பேசுவோரை என்னென்று கூறுவது! கட்டித் தங்கத்துக்கு உடையார் அறிவர், அழகுமிகு அணிபணியாக்க, இம்முறை தேவை என்பதை! கட்டித் தங்கமும், எவரிடமிருந்தும் தட்டிப் பறித்துக்கொள்ளப்பட்டதல்ல! பத்தாண்டுகளாகப் பாடுபட்டதிலே கிடைத்தது!

இந்த விளக்கம், அவர்கள் அறியாது போவது ஏனோ என்று கேட்கத் தோன்றும் - எவருக்கும். விளக்கமறியாது பேசுவோரும் உளர் - தெரிந்தும் திரித்துரைப்போர் உளர் - இரு சாராருக்கும் ஒரே நோக்கம்... அஃது இதுதான் - அடுத்து வரும் தேர்தலுக்குள் கழகத்தைத் தாக்கித் தாக்கித் தகர்க்க வேண்டும் என்பது. ஆண்டு இரண்டு இருக்கும் போதே, ஆரம்பமாகிறது தேர்தல் பிரசாரம்! பொருள் தெரிகிறதா தம்பி! அவ்வளவு முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, படை அமைத்துக்கொண்டு, பாய்வதற்கான "கவாத்து' பழகவேண்டி இருக்கிறது, நமது கழகத்தை எதிர்க்க. அந்த அளவுக்குக் கழகத்துக்கு உரம்தேடிக் கொடுத்திருக்கிறாய்! கால்கடுக்கச் சுற்றினாய், கண்ணீரைக் காணிக்கையாக்கினாய், "மகனே, உடல் துரும்பாக இளைத்துவிட்டதே! சிவந்த மேனியும் கருத்து வருகிறதே! ஏனோ உனக்கு இத்துணை அலைச்சல்! எந்த இராச்சியத்தைப் பிடிக்க, மகனே! இத்தனை பாடுபடுகிறாய்?'' என்று கனிவுடன் கேட்டிடும் அன்னைக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டுப், பாசறை காணவும், படைக்கலன் சமைக்கவும், போர்முறை பயிலவும், புகழ்க்குறி பெறவும் கிளம்பிடும், உன்போன்ற இலட்சக்கணக்கான காளையரின் கோட்டமாகிவிட்டதால், கழகம், காங்கிரசை இந்த அளவுக்கு முன்னேற்பாடு செய்துபார்க்கும்படி செய்துவிட்டது.

புதுப்புது முறைகளும் புயல்வேகப் பிரசாரமும், நாராசக் குண்டுவீச்சும், நரிக்குண நடவடிக்கைகளும் மேற்கொண் டாகிலும், கழகத்தை எதிர்த்து ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம், காங்கிரசை, மதுகுடித்த மந்தியினைத் தேளும் கொட்டிவிட்டால் என்ன நிலைமையோ, அந்த நிலைமைக்குக் கொண்டுபோய்விட்டிருக்கிறது.

கழகத் தோழர்கள் அடிக்கடிக் கூறுகிறார்கள், "காதில் கேட்கச் சகிக்காத பேச்செல்லாம் பேசுகிறார்கள் காங்கிரசார்' என்று! தம்பி! அந்த நாராசத்தை அவர்கள் நா தாங்கிக்கொள் கிறதே! - அதை எண்ணிப் பரிதாபப்படு! கோபம் கொள்ளாதே! சத்தியமென்றும் அஹிம்சை என்றும் பேசிடச் சொல்லி உலக உத்தமர் காந்தியார் கூறினார் - இவர்களோ, இன்று இழி மொழியைப் பேசி இன்பம் காணுகிறார்கள்! அந்த அளவுக்குத் தரம் கெட்டுவிட்டதே என்பதை எண்ணி வருத்தப்பட வேண்டும் - வரிந்துகட்டிகொண்டு வம்புக்குச் செல்லுதல் ஆகாது! நமது மரபும் அஃதல்ல! நமக்குள்ள பணியோ, வேறு - தாங்கிக் கொள்ளும் சக்தியும் வீரமும் இணைந்ததோர் போக்கு வேண்டும்.

தெளிவு - துணிவு - கனிவு - இவைகளில், ஒவ்வொன்றைப் பழுதறப் பெறுவதே கடினம். ஆயின், நமக்கோ இம் மூன்றும் ஒரு சேர இருத்தல் வேண்டும் - அஃதே, நாம் மேற்கொண்டுள்ள அறப்போருக்கு உரிய படைக்கலனாகும். உன் மனதை வாட்டிடும் எந்தப் பிரச்சினையாயினும் சரி, தெளிவு கிடைக்கும் அளவுக்குச் சிந்திக்க வேண்டும் - கசடுஅறலிதெளிவு கிடைத்ததும், அதனின்றும் எழும் ஓர் உன்னதமான வலிவே, துணிவாகித் துணைநிற்கும்! துணிவு பெற்றதும், ஓர் துடிப்பு உணர்ச்சி இயல்பாக எழும்! அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், தேக்கி வைக்கப்பட்ட மின்சாரமே, பிறகு ஒளிதர, ஒலிதர, விசையாகி நிற்கப் பயன்படும்! அதுபோலவே, தெளிவால் கிடைத்திடும் துணிவு, நமக்காக மட்டுமல்ல, நம்மோடு இருந்துவிட அல்ல, மற்றவர்களுக்கும் கிடைக்க, அளித்திட! அங்ஙனம் மற்றையோர்க்கும் அளித்திட வேண்டுமேல், கனிவு இருத்தல் வேண்டும்! கனிவு என்ற சொல்லிலே, கனி காண்கிறாய் அல்லவா, தம்பி! சுவை!! ஆம்! இனிமை!!

அந்தக் கனிவு, எந்த இதயத்தையும் தொடவல்லது! நாம் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள இலட்சியங்கள், கோடி கோடி இதயங்களிலே, குடி ஏறுவதிலேதானே, வெற்றியே இருக்கிறது! அந்த வெற்றி காணக் கனிவு பெரிதும் வழிகாட்ட வல்லது. நான், தம்பி, முன்னது இரண்டினைக்கூட, வேண்டுமளவு பெற்றிடவில்லை என்று கூறிடலாம் - ஆனால் கனிவு என்பதை, நான் போதுமான அளவுக்குப் பெற்றிருக்கிறேன்! மேலும் பெற விரும்புகிறேன்.

என்னை ஊக்குவிப்பதும், பொதுவாழ்விலே எனக்கு உவகை ஏற்படுவதும், அந்தக் "கனிவு' எனக்குக் கைகொடுத்து உதவுவதால்தான்!

சென்ற கிழமை நமது கழக நண்பரொருவர், மாற்றுக் கட்சி ஏடுகள், நமது மனதுக்குப் பீதியூட்டவே முயலுகின்றன என்பதை மறந்து, அவைகளில் உள்ளவைகளைப் படித்து, மெத்த மனம் நொந்து, என்னிடம் வந்து பேசலானார்.

"அண்ணா!'' - என்றார். மேற்கொண்டு பேச முடியாது. என்னையே, உற்றுப் பார்த்தவண்ணம் இருந்தார். பிறகு தழதழத்த குரலில் பேசினார். அவர் பேசுவதற்கு முன்பே எனக்கு அவர் இருந்த நிலை, அவர் உள்ளத்தைக் காட்டிற்று. உற்சாகப்படுத்த முயன்றேன்.

"அண்ணா! கட்சியிலே, பிளவாமே' என்றார். கேட்டார் என்றுகூட, எழுதவில்லை கவனித்தாயா. தம்பி! அப்படி ஒரு கேள்வி கேட்கக்கூட, அந்த நல்ல உள்ளம் கூசிற்று.

"போபாலில்'' என்று நான் ஆரம்பித்தேன். தம்பிக்கு, என் பேச்சைக்கேட்க விருப்பம் எழவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே, முதலில், அவர் கேட்க விரும்புவதைக் கூறுவதே முறை என்று எண்ணினேன். "தம்பி! கட்சியில் ஒரு பிளவும் இல்லை. பயப்படாதே. கட்சியிலே இன்னின்ன முறைகள் ஏற்பட்டுப் பொலிவும் வலிவும், தரமும், தூய்மையும் வளரவேண்டும் என்று, தம்பி சம்பத் தன் கருத்தைக் கூறி இருப்பது, பிளவுக்கு அறிகுறியுமல்ல, வழியும் ஆகாது'' என்று கூறிவிட்டு, "இனிக் கேள் சேதியை'' என்று துவக்கினேன். ஓரளவு மனநிம்மதி அடைந்த அந்தத் தம்பி, - ஓரளவுதான் - என் பேச்சைக் கேட்கத் தயாரானது தெரிந்தது, பேசினேன்.

"போபாலில், காங்கிரஸ் சட்டசபைக் கட்சிக் கூட்டத்தில், தலைவர் செயலாளர் முதலிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற ஏற்பாடாகி இருந்த கூட்டத்தில், கூச்சலும் கலவரமும் ஏற்பட்டு, அமளி மூண்டுவிட்டது. அமளியை அடக்கப் பார்த்து முடியாது போகவே, தலைவர் தேர்தலைப் பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று கூறிக், கூட்டத்தை ஒத்தி வைத்தார். கூட்டம், கலைந்தது. தம்பி! இந்த நிகழ்ச்சி எந்தக் காங்கிரசில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதோ, அதே காங்கிரஸ்தான் நமது கழகத்திலே பிளவு என்று பேசியும் ஏசியும் வருகிறது. புரிகிறதா நோக்கம்!'' - என்று கேட்டேன். "அது புரிகிறது, அண்ணா!' என்றார் அந்தத் தம்பி.

"இந்தக் கிழமை, தம்பி, நாம் நாடெங்கும் போபால் சம்பவம் குறித்துப் பேசி இருப்போம் - அதைப் பேசவிடாமல் செய்திடக் காங்கிரஸ், கழகத்துக்குள் கலகம் புகுந்துவிட்டது. என்று பேசியும் எழுதியும் தந்திரம் செய்கிறார்கள். புரிகிறதா!'' என்றேன் - "ஆமாம்' என்றார்.

இதேபோலத்தான் எதையும், தெளிவாக்கிக் கொண்டால் நல்லது, என்றேன்.

"கார்ப்பரேஷனில்?' - என்று, இழுத்தாற்போல் பேசலானார், தம்பி!

ரோடு படுமோசம்! சுகாதாரம் மட்டம்! கொசுத்தொல்லை அதிகம்! - ஏன் தம்பி! அதைத்தானே கேட்கிறாய், என்றேன். சிரிப்பைத் தம்பியால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.

"அப்படி எல்லாம் காங்கிரசார், மேடையிலே பேசும்போது, கேட்க, வேதனையாக இருக்கிறதே! ஏன் சென்னை நகரம் அப்படி இருக்கவேண்டும்? சரியாக வைத்துக்கொள்ளக் கூடாதா? நமது நிர்வாகத் திறமையைக்கண்டு பலரும் பாராட்டவேண்டாமா?'' என்று கேட்டார்.

"ஆமாம், தம்பி! ஆனால்...'' என்று நான் பதில் கூறத் தொடங்கினேன். தம்பி விடவில்லை, "பணம் இல்லை... சர்க்கார் கொடுக்கவில்லை - என்று காரணம் - சமாதானம் கூறுவீர்கள். கூறுகிறார்கள் நமது தோழர்கள்... ஆனாலும்...'' என்றார்.

"உனக்குத் திருப்தி இல்லை! அதுதானே!'' என்று கேட்டேன். பார்வையால் பதிலளித்தான், பாசம் நிறைந்த தம்பி!

"சென்னை நகரப் பாதைகளைச் சீராக வைத்திருக்கப் போதுமான அளவுக்குப் பணவசதி தேடித்தர, துரைத்தனம் முன்வரவில்லை. அதனால்தான், சில சீர் கேடுகள் உள்ளன. தம்பி! சில விநாடி, கேள் - இது விஷயமாகப் படித்துக் காட்டுகிறேன் - என்று கூறிவிட்டு, ஏடொன்றை எடுத்துப் படித்துக் காட்டினேன். அது இது!

"சென்னை நகரத்தை எடுத்துக்கொண்டால் இந்த ஆண்டு போட்டிருக்கக்கூடியது ஒரு பற்றாக்குறை பட்ஜட், கிடைக்கக் கூடிய பணம் போதாதநிலை இருக்கிறது. போதாத நிலை இருந்தும், இப்போது கொடுக்கவேண்டிய தொகையில் கருணை காட்டிக் கொடுக்காவிட்டால், நகரசபையின் கதி என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். நமது மாநிலத்திற்குத் தலைநகரம் சென்னை. அந்நியர்கள் இங்கே வரும்போது நாம் அடைந்திருக்கிற பல முன்னேற்றங்களைக் காட்டிப் பெருமைப் படுகிறோம். அவர்களைச் சென்னை நகர வீதிகளில் அழைத்துக் கொண்டு போகிறபோது, போகிற ஊர்தி வீதியிலுள்ள குண்டுகுழிகளில் விழுந்து உள்ளே இருப்பவர்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டு போகுமானால், அவர்கள் நாம் அடைந்திருக்கிற முன்னேற்றத்தைப்பற்றி மறந்து ரோடுகள் மிகவும் மோசமாக இருக்கிறதே என்று வெளியே சொல்லாவிட்டாலும்கூட நினைத்துக்கொண்டு போவர்.

சென்னை நகரத்துக்கு இன்னொரு சாபம். இங்கே ஓடுகிற பஸ்களை அரசாங்கம் நடத்துகிறது. மோட்டார் வெகிகில்ஸ் டாக்ஸ்சேஷன் இருப்பதால், இந்தப் பஸ்களைத் தனியார் நடத்தி வந்தால், அவர்களிடம் வரிப்பணத்தை வாங்குவோம். பஸ்களைத் தேசிய மயமாக ஆக்கியிருப்பதால், இதிலே வரிப்பணத்தை நகராண்மைக் கழகத்திற்குக் கொடுக்காமல், வீதிகளை மட்டும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், எப்படி முடியும்! இப்படி, மோட்டார் வெகிகில்ஸ் டாக்சேஷனில் எங்களுக்குக் கிடைக்கவேண்டியது 67 இலட்சம். ஆனால் கிடைப்பது 5 இலட்ச ரூபாய்.

அவர்கள் கொடுக்கக் கூடிய பணத்தைக்கொண்டு நகரிலுள்ள எல்லாச் சாலைகளையும் எப்படிப் பராமரிக்க முடியும்? அப்படிப் பராமரிக்க முடியவில்லை என்றால், கெட்ட பெயர் வாங்கிக் கொள்ளட்டும்; வாங்குவது நகரசபைதானே, நமக்கு என்ன என்ற முறையில் இருக்கிறார்கள். இதைப்பற்றிப் பல ஆண்டுகளாக, நகராட்சி மன்ற அங்கத்தினர்கள் தூதுக்குழு அமைத்து, அமைச்சரைக் கண்டு, அதிகமாக ஒதுக்குங்கள் என்று கேட்டபோதிலும், அதைப்பற்றிக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னது போல, மாற்றாந்தாய் குணத்தை ஏன் எங்களுக்குக் காட்டுகிறீர்கள் என்று நான் கேட்கிறேன்.

படித்து முடித்ததும், "எப்படி, தம்பி? என்று கேட்டேன். காரணம் காட்டுகிறார்கள், நமது தோழர்கள். ஆனால், காங்கிரசார், இந்தக் காரணத்தை எல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார்களே'' என்றார். "அவர்கள் போக்குக் கிடக்கட்டும், சொல்லப்பட்ட காரணம், சரியானதுதான் என்று உனக்குப் படுகிறது அல்லவா?'' என்று கேட்டேன். "ஆம்' என்றார்.

எங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை நீங்கள் கொடுக்கவில்லை.

ரோடுகளை ஏன் சரியாகப் பராமரிக்கவில்லை என்று எங்களை, நீங்கள் கேட்கிறீர்கள்.

எங்களை, நீங்கள் மாற்றாந்தாய் மனப்போக்கில் நடத்துகிறீர்கள்.

எங்களை, நீங்கள் ஏன் இப்படி நடத்துகிறீர்கள் என்று நான் கேட்கிறேன்.

தம்பி! எங்கள் - நீங்கள் - என்றால் தெரிகிறதல்லவா? என்று கேட்டேன். என்னண்ணா இது! தொடக்கப்பள்ளி நடத்துகிறீர்! எங்கள் என்றால் கழகம், நீங்கள் என்பது, காங்கிரசை; இதற்குக்கூடவா விளக்கம் வேண்டும் என்று, தம்பி கேட்டார்.

தம்பி! தெளிவு வேண்டும் என்றேனல்லவா? கேள்! எங்களுக்கு என்பது கழகம் என்ற பொருள் தரச் சொல்லப் படுவது அல்ல - கார்ப்பரேஷனுக்கு என்பது பொருள்! அது போலவே, நீங்கள் என்று குறிப்பிடப்படுவது, சர்க்காரை!

கார்ப்பரேஷனுக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடுக்காமல், சாலை சரியாக இல்லை என்று மாநில சர்க்கார் கண்டிக்கிறதே, சரியா முறையா என்று கேட்கிறார் என்றேன். ஆமாம், புரிகிறது, என்றார் தம்பி! யார் கேட்கிறார்? என்று கேட்டேன். கார்ப்பரேஷன் கவுன்சிலராக உள்ள நமது கழகத் தோழர் என்று தம்பி பெருமிதத்துடன் கூறிடவே, நான் சிரித்துவிட்டு, "தம்பி! தம்பி! கார்ப்பரேஷன் சார்பாக வாதாடி, சென்னை மாநில துரைத்தனத்தைச் சாடி, நான் கேட்கிறேன் என்று உரிமையோடு கேட்டவர், நமது கழகத்தோழர் அல்ல! - என்றேன் - தம்பிக்குச் சிறிதளவு திகைப்பு ஏற்பட்டது.

"காரசாரமாகப் பேசியவர், காங்கிரஸ்காரர், தம்பி! ஆமாம், திகைக்காதே'' - என்றேன்.

"காங்கிரசாரே காங்கிரஸ் கட்சி நடத்தும் சென்னைத் துரைத்தனத்தின் போக்கைக் கண்டித்தாரா?'' என்று கேட்டார் தம்பி.

"நேர்மையும் அஞ்சாமையையும் பாராட்டுகிறாய் அல்லவா?'' என்று நான் கேட்டேன்.

"எப்படிக் கேட்கத் துணிந்தார்?'' என்று தம்பி கேட்க, "நியாயமான கேள்விதான் தம்பி! ஏன் கேட்டார் என்றால், அவர் ஒரு காங்கிரசார் மட்டுமல்ல, கார்ப்பரேஷனில் அக்கறை கொண்டவர். யார் சொல்லட்டுமா? திருமதி அனந்தநாயகி அம்மையாரின் திருவாசகம் தம்பி! என்றேன். தம்பி, உண்மையிலேயே திணறிப்போனது தெரிந்தது.

நான் கேட்கிறேன் மாற்றாந்தாய் மனப்போக்கிலே நடக்கிறீர்கள் - என்றெல்லாம், அடித்துப் பேசியவர், அனந்தநாயகி அம்மையேதான்!! கார்ப்பரேஷனில் பேசவில்லை! கடை வீதிக் கூட்டத்திலும் அல்ல!! அங்குதான் நாம் கிடைக்கிறோமே, கரும்புபோல!! அம்மையார், பேசியது, சென்னை சட்டசபையில், மார்ச் 25-ம் நாள், 1959-ம் ஆண்டு; அதாவது கார்ப்பரேஷனில் கழகத்தவர், மேயராகா முன்பு!!

அப்போது, அந்தப் பேச்சு, நேர்மைக்கு எடுத்துக்காட்டாக, நாணயத்துக்கு உதாரணமாக, அஞ்சாமைக்கும் அறிவுடைமை க்கும் சான்றாக இருந்தது!! அப்போது கார்ப்பரேஷனில் காங்கிரஸ் கட்சி அரசோச்சி வந்தது. ஆகவே, துரைத்தனத்தைத் தட்டிக் கேட்க முன்வந்தார்.

இப்போது ஆண்டு பல அல்ல, திங்கள் சில ஆயின, கார்ப்பரேஷனில் கழகம் நிர்வாகம் நடத்தத் தொடங்கி.

இப்போது அம்மையாரின் அருமருந்தன்ன கட்சியினர் "ஐயயே! சாலை மோசம்! கொசுக்கடி அதிகம்! நாற்றம் தாங்க முடியவில்லை!' என்று அருவருப்பைக் கொட்டுகிறார்கள், மனக் கசப்பைக் கக்குகிறார்கள். "ஐயன்மீர்! மோட்டார் வரியிலே, கார்ப்பரேஷனுக்கு உரிய பங்கு கொடுக்காமல், உருட்டி மிரட்டிப் பார்க்கிறீர்களே, சரியா, முறையா?'' என்று நமது கழகத்தவர் கேட்டால், காங்கிரஸ் கண்ணியவான்களுக்கு, முகம் கடுகடுப் பாகிறது. வார்த்தைகளிலே தீ பறக்கிறது, "உள்ளவர்களுக்கு' மீசை துடிக்கிறது!!

நான் சொன்னதைக் கேட்ட, தம்பி, பதறி எழுந்து "அண்ணா! முதலில் இதைப் போய், நான், நமது நண்பர்களுக் கெல்லாம் கூறிவிட்டுத்தான் மறுவேலை'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

தம்பி! உன் உள்ளத்திலும், காங்கிரசார் கதைத்திடுவது கேட்டு, கோபமோ, வருத்தமோ, ஏற்பட்டால், ஆர அமர எண்ணிப்பார், உண்மை விளங்கும். அப்படி எண்ணிப் பார்த்துப் பார்த்துத்தானே ஓர் தெளிவான திட்டத்தை நாம் பெற்றிருக்கிறோம்.

கட்சிக்கான முறைகள், திட்டங்கள் என்னென்ன மாற்றம் பெற்றாலும், கழகக் குறிக்கோளில் உயிரூட்டம் உள்ளவரையில், காப்பாற்றப்படும் வரையில், எந்தக் கெடுதியையும் விளைவித்துவிடாது என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு. அந்த நம்பிக்கையை நான் பெறுவது, உன் கண்ணொளி காட்டிடும் ஆர்வத்தைக் காண்பதாலும், கனிமொழி கேட்டு இன்புறுவதாலும், சிலகாலம் தொடர்பற்று இருந்ததால் கஷ்டமும் நஷ்டமும், உனக்கல்ல, தம்பி; எனக்குத்தான். இனி, இந்நிலை ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள முடிவெடுத் திருக்கிறேன். உன் ஒத்துழைப்பும் வேண்டுமே! கிடைக்குமா?

அண்ணன்,

10-4-60