அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


காட்டாட்சி...

ஆமதாபாத்தில் குழப்பம் -
பட்டேல் தினம் -
"மகா குஜராத்' கிளர்ச்சி

தம்பி!

பம்பாய்க்காரர் பட்டீல் காங்கிரசை கேரளத்தில் வெற்றிபெறச் செய்வதற்காகவென்றே, தனியானதோர் திட்டத்துடன் அனுப்பப்படுகிறாராம். புறப்படுவதற்கு முன்பு பட்டீல், தமது திட்டத்தில் ஒரு துளி எடுத்துக் காட்டினார் - ஓட்டு வேட்டைக்கு இந்தத் தடவை சினிமாப்படம் பயன்படுத்தப்படுமாம்!

மிகப் பெரும்பாலான மக்கள் தற்குறிகளாக உள்ள இந்த நாட்டிலே, சினிமா மூலம் நல்லவிதமான பிரசாரம் நடத்தலாம் - படக்காட்சியைக் காணும்போது கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சி ஏற்படும் - மக்கள் மகிழ்ந்திருக்கும் நேரமாகப் பார்த்து, காங்கிரசுக்கு "ஓட்டு' தாருங்கள் என்று கேட்டுப் பெறுவது எளிது என்பது பட்டீல் வாதம்.

இந்தத் திட்டத்தை, நெடுந் தொலைவிலிருந்து, பட்டீல் வந்து தானா செய்துகாட்ட வேண்டும் - பனம் பள்ளியிடம் ஒரு படம் கொடுத்தால் போதாதா என்று கேட்கிறாய், தெரிகிறது; ஆனால், தம்பி! ஒரு விஷயம் உனக்குப் புரியவில்லையே, கேரளத்துக்குப் பட்டீல் தேவை என்பதற்காக அவர் அனுப்பப்படுகிறார் என்று கூறப்படுகிறதே தவிர, உண்மை வேறு என்றுதான் நான் எண்ணவேண்டி இருக்கிறது.

பட்டீல், கேரளம் அனுப்பப்படுவதற்குக் காரணம், இங்கு அவர் மிக மிக அவசியமாகத் தேவை என்பதாலே அல்ல; பட்டீல் இந்தத் தேர்தலின்போது, பம்பாயில் இருக்க முடியாது என்பதாலே, அவர் கேரளம் அனுப்பப்படுகிறார் என்று எண்ண வேண்டி இருக்கிறது.

"தேர்தல் வேலை'யிலே இவர் புலி! கல்லிலே நார் உரிப்பார்! காயைக் கனியவைப்பார்! புதுப்புதுப் பிரசார முறைகளைக் கண்டறிவார்! யாராரை எப்படி எப்படி வளைய வைப்பது, எங்கெங்கு எப்படியெப்படி நெளிந்து கொடுப்பது, என்ற வித்தைகளிலே மெத்தச் சமர்த்தர் என்றெல்லாம் கூறப்படுகிறது இது உண்மை என்று வைத்துக் கொண்டால், தம்பி, இந்த வித்தையை அவர் தமது மாகாணத்தில் செய்து காட்டலாமே! ஏன், இங்கு வருகிறார்? தேர்தல் காலத்தில் பட்டீல் பம்பாய் பகுதியிலே இருப்பது, அவருக்கோ, காங்கிரசுக்கோ நல்லதல்ல! எனவேதான், பட்டீலைப் பிடித்துக் கேரளத்துக்கு அனுப்புகிறார்கள்.

நான் வேண்டுமென்றே கூறுகிறேன் என்று காங்கிரஸ்காரர் யாராவது பேசுவரேல், தம்பி, ஒரு கிழமையாக, பட்டீல் வாழ்கிற பகுதியில், காங்கிரஸ் படுகிற பாடுபற்றிப் பத்திரிகைகளிலே வருகிற செயல்களைப் படித்துக் காட்டு.

படம் தயாரித்துக் கொண்டு, பட்டீல், இங்கு வருவது இருக்கட்டும், இப்போது, அவர் மாகாணத்தில் காங்கிரஸ் பெரிய புள்ளிகள் படுகிறபாடு, படமாக்கப்பட்டால், பாரெல்லாம் பரிகாசம் செய்யும் போலல்லவா இருக்கிறது!!

பம்பாய் - ஆமதாபாத் அமளி அடங்கிவிட்டது என்றும், மக்கள் அறிவு பெற்றுவிட்டனர், காங்கிரஸ் ஆணைக்குக் கட்டுப்பட்டுவிட்டனர் என்றும், இருமொழி ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றும், மொரார்ஜி தேசாயைத் திணறவைத்தவர்கள், நேரு பண்டிதரைப் பேசவிடாதபடி செய்தவர்கள், இப்போது வெட்கித் தலைகுனிந்து கிடக்கிறார்கள் என்றும், தேசிய ஏடுகள் மிகத் தந்திரமாகப் பிரசாரம் செய்தன.

சவான் பம்பாய் மாகாண முதலமைச்சரானார், புதிய சூழ்நிலையே பூத்துவிட்டது, என்று பூரிப்புடன் அந்த ஏடுகள் எழுதின.

ஆனால், நீறுபூத்த நெருப்பென, சம்யுத்த மராட்டிய இயக்கமும் மகா குஜராத்தி இயக்கமும் இருந்து வருகின்றன! அடுத்து வருகிற பொதுத் தேர்தலில், காங்கிரசை முறியடிப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

அந்த இயக்கங்கள் ஓய்ந்து போயின, மாய்ந்துவிட்டன, என்று டில்லி மனப்பால் குடித்தது. இல்லை! இல்லை! எங்கள் இதயக் குமுறல் அடங்காது! எமது இலட்சியம் அழிந்துபடாது! நாங்கள் எதற்கும் தயார்! என்று கூறுவது போல, கிளர்ச்சிகாரர்கள், ஒரு கிழமையாகக் கொதித்து எழுந்து விட்டுள்ளனர்.

பழையபடி, மந்திரிகள் மருள்கிறார்கள்! மோட்டார்கள் உடைபடுகின்றன! கதர்க்கொடிகள் தீக்கிரையாகின்றன! குல்லாய்களைக் கொளுத்துகிறார்கள்! குலை அறுபடும் நிலையில், தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று தலைவர்கள் ஓடி ஒளிகிறார்கள். கருப்புக் கொடி காட்டுவதும், கண்டன முழக்கம் எழுப்புவதும், பொதுக் கூட்டங்களை நடைபெற வொட்டாது தடுப்பதுமான காரியம், தீவிரமாகச் செய்யப்படுகின்றன!

இந்த நிலைமை நீடிக்குமானால், தேர்தலின்போது ஓட்டுச் சாவடிக்குப் பட்டாளக் காவல் போட்டாக வேண்டும் போலிருக்கிறது!

காங்கிரஸ் அபேட்சகர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்களா என்பது கிடக்கட்டும்; மக்களிடம் இவர்கள் சென்று, ஓட்டுக் கேட்டுவிட்டு மானம் அழியாமல், மரியாதை கெடாமல், ஊனம் ஏற்படாமல், வீடு திரும்புவார்களா என்பதே அல்லவா, பாவம், சந்தேகமாகிவிட்டது!

பட்டீல், மெத்த சமர்த்தர்தான்! இந்தச் சூழ்நிலையில் அவர் கேரளம் நாடுகிறார்!

தமிழ் நாடு தவிர, பிற எல்லா இடங்களிலும், மக்கள் தத்தமது மொழி, பண்பாடு, இவற்றின் அடிப்படையில் அமையும் உரிமை ஆகியவற்றுக்காகச் சிறிது வரம்புமீறிக் கூடக் காரியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இங்குதான், கோயிலில் கற்பூரம் கொளுத்துவது மூடப் பழக்கம், அது ஒழியவேண்டும்; அதை ஒழிப்பதுதான் எமக்குள்ள வேலை; என்றாலும், கற்பூரக்கடை வைத்திருக்கும் காத்தமுத்து, நல்ல மனிதர், நாலைந்து குழந்தைகளுக்குத் தகப்பன், எனவே அவனுக்குப் பிழைப்புத் தரவேண்டும் என்பதற்காக, அவன் கடையிலே கற்பூரம் வாங்கிக் கோயிலில் கொளுத்துங்கள்; என்று கூற முடிகிறது! மனம் இடம் தருகிறது!!

அங்கெல்லாம், அவ்விதமில்லை; எமது பிறப்புரிமையைப் பறித்திட உனக்குத் துணிவு பிறந்துவிட்டபோது, எனக்கும் உனக்கும் என்ன பந்தம் பாசம், ஒட்டு உறவு, சொந்தம், போ! போ! - என்று உரிமைக்காகக் கிளர்ச்சி நடத்துவோர், முழக்கமிடுகிறார்கள்!

அவர்கள் கையாண்டுவரும் முறைகள், தம்பி, எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் அவர்கள் உரிமைக்காக எழுச்சி பெற்று பணியாற்றும் போக்கினைப் பாராட்டாமலிருக்க முடிகிறதா!!

அமைச்சர்கள் படுகிற அவதியைக் காணும்போது, பட்டீல் எப்படி அங்கு தேர்தலின்போது இருந்திட ஒப்புவார்! எனவேதான் கேரளம் வருகிறார்.

பலமான கல்வீச்சு
போலீஸ் சவுக்கிமீது தாக்குதல்
முனிசிபல் லாரிகள் தகனம்
போலீசாருக்குக் காயம்
விளக்குகள் உடைக்கப்பட்டன
பொதுக் கூட்டம் கலைக்கப்பட்டது
கைகலப்பிலே பலருக்குக் காயம்
கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு!

தம்பி, ஆமதாபாத் நகரில், டிசம்பர் 15 மாலை நடைபெற்ற நிகழ்ச்சிகளை, தலைப்புகளாகத் தந்திருக்கிறேன்; இவற்றைக் கொண்டு, நீ, மனக்கண்ணால் பார், நிகழ்ச்சியை.

கூட்டம் போட வந்துவிட்டார்களா, கூட்டம்?

அவ்வளவுக்குத் துணிந்துவிட்டார்களா, அக்ரமம்,

ஜீரணமாகிவிடும் என்ற எண்ணமோ!

என்று, சிறு சிறு பிரிவினர் உரையாடுவது, தெரிகிறதா!

கூட்டத்தில் பேசும் பிரமுகர், எந்த போலோ பாரத் மாதாகீ என்ற முழக்கமும், மகாத்மா காந்திக்கு ஜே என்ற முழக்கமும், கோடிக்கணக்கான மக்களைச் சொக்கிட வைத்ததோ அதே முழக்கத்தின் துணையைத்தான் தேடுகிறார்; ஆனால் பாபம், பலிக்கவில்லை! அந்த முழக்கத்தை மிஞ்சும் வேறோர் முழக்கம் எழுகிறது.

மகாகுஜராத் ஜிந்தாபாத்!
சவான் சர்க்கார் மூர்தாபாத்!

இந்த முழக்கம், கலவரத்துக்கு முன் அறிவிப்பாகிறது!

ஐயோ! கல்! கற்கள்! நாலா பக்கமும்!
தலை ஜாக்கிரதை, கண் ஜாக்கிரதை!
ஓடிவிடுவோம், ஓடிவிடுவோம்!
பாவிப் பயல்கள்! கொலைகாரப் பயல்கள்!
கூப்பிடு போலீசை, போலீசைக் கூப்பிடு!
ஓடு! ஓடு! பதுங்கிட இடம், தேடு! தேடு!
மக்கள் இவ்விதமெல்லாம் கூவிக்கொண்டு ஓடுவது தெரியுமே, தம்பி, எண்ணத்தேரில் ஏறிச் சென்று பார்த்தால்.

அன்று, பட்டேல் தினம்!

மக்களும், தலைவர்களும், அநேகமாக, அந்த இரும்பு மனிதரை மறந்தேவிட்டார்கள்! மராட்டியத்திலும், குஜராத்திலும் அமளிநிலை இருப்பதைச் சரிப்படுத்த, எந்த ஆமதாபாத் நகரில் அவர் இட்டதுதான் சட்டம் என்ற நிலை இருந்து வந்ததோ அங்கே, பட்டேல் தினம் கொண்டாடினால், மக்கள் பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் இவை நாலும் கலந்து பானம் சுவைப்பது போலாகி மாச்சரியத்தை மறப்பர், என்று எண்ணிக்கொண்டனர், மக்கள் இளித்த வாயர் என்ற எண்ணம்கொண்ட இறுமாப்பாளர்.

மகாகுஜராத் இயக்கத்தினருக்கு இந்தச் "சூட்சமம்' புரிந்துவிட்டது; நீங்களென்ன படேல் தினம் கொண்டாடுவது! நாங்கள் நடத்துகிறோம் என்றுகூறி, காங்கிரசார் நடத்துவதற்கு முன்பு, மகாகுஜராத் ஆதரவாளர் சார்பில் கூட்டம் நடத்தினர்.

பட்டேலின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தனர். "பாரதம்' அவருடைய பணியின் பயனைப் பெற்றதைக் கூறினர்; பலன் பெற்ற கூட்டம் இன்று, தமது இலட்சியத்துக்கு, மகாகுஜராத்துக்கு இழைக்கும் கேடுபற்றிக் கண்டித்தனர்.

வேறோர் இடத்திலே காங்கிரஸ் ஏற்பாடு செய்த கூட்டம். இதைக் கண்டதும், ஆத்திரம் பிறந்தது - ஆர்ப்பரிப்பு எழும்பிற்று - அமளி மூண்டது!

யாரோ இரண்டொரு காலிகள் செயல் என்று, தேசிய ஏடுகளாலேயே இதனை அலட்சியப்படுத்திவிட முடியவில்லை. கல்வீச்சு கண்டிக்கத்தக்க செயல்; ஐயமில்லை! ஆனால் கல் வீச்சிலே ஈடுபட்டவர்கள், விரல்விட்டு எண்ணத்தக்க சிலர் அல்ல.

மாணிக்கசௌக் பிரதேசத்தில் 3000 பேர்கள் கற்களை வீசினர்!

என்று "மித்திரன்' தெரிவிக்கிறது!

மூவாயிரம்பேர் கல்வீச்சில் ஈடுபட்டால், எத்துணை அலங்கோலம் ஏற்பட்டிருக்கும், எவ்வளவு அமளி மூண்டுவிட்டிருக்கும்; எண்ணிப் பார்க்கும்போதே தம்பி, அந்தக் கண்றாவிக் காட்சி தெரிகிறதல்லவா?

போலீசார் 14 கண்ணீர் வாயு வெடிகளை உபயோகித்தனர்.

போலீஸ்மீது சோடாபுட்டிகள் வீசப்பட்டன.

கூட்டத்தைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்திற்று!

போலீசைத் தாக்கிட ஜனத்திரள் முனைந்தது.

மொத்தம் 30 போலீசாருக்கு மேல், காயமுற்றனர்.

நாலு ஆபீசர்களுக்குப் பலமான தாக்குதல்.

போலீஸ் லாரிகள் ஜரூராயின!

போக்குவரத்துக்கு ஜனக்கூட்டம் தடைகளைப் போட்டுவிட்டன!

முனிசிபல் பஸ்கள் கொளுத்தப்பட்டன.

தம்பி! பெரியதோர் அமளி நடந்திருக்கிறது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், தேசிய ஏடுகள் தகவல்களைத் தருகின்றன!

வெறும் காலிகள் சேட்டை அல்ல இது! பொறுப்பு உணர்ந்தவர்களுக்கே, ஆத்திரம் பொங்கி எழத்தக்க விதத்தில் அநீதி இழைக்கப்பட்டால், காலித்தனமேகூட அவர்களுக்குக் கரும்பாக இனிக்கிறதுபோலும்!

எந்த அளவுக்கு, அங்கு காங்கிரசாட்சியின்மீது கசப்பு இருந்தால், கோபம் கொதித்தால், தம்பி இது நடந்திருக்கும் என்று எண்ணிப்பார்.

"இன்று மக்கள் தெருக்களில் காந்தி குல்லாய் அணிந்து சென்றவர்களைக் குல்லாய்களை அப்புறப் படுத்தும்படி நிர்ப்பந்தித்தனர்.''

தம்பி! நிர்ப்பந்தித்தனர் என்ற நாசுக்கான பதத்துக்குப் பின்னாலே தெரியும் நானாவிதமான நடவடிக்கைகளைக் கூறவாவேண்டும்! ஆமதாபாத் காட்டியதைவிடவா "காங்கிரஸ் பக்தி'யை, வேறு நகரம் காட்டமுடியும்!! அங்கு, இது! எல்லாம் எதன் பொருட்டு? மொழிவழி அரசு எனும் உரிமை அழிக்கப்படுவதை எதிர்த்து!

இங்குமட்டுமே தேவிகுளம், பீர்மேடு பறிகொடுத் திடவும், ஐயோ! இழந்தோமே என்று கதறினால், குளமாவது, மேடாவது என்று கேலி பேசிடவும் ஒரு முதலமைச்சரால் முடியும் காரணம் என்ன? அவர்தான் தமிழரின் புதிய ரட்சகர்! ஒரே ரட்சகர்! ஒப்பற்ற ரட்சகர்!! - என்று நெஞ்சு நெக்குருகப் பேசும் பேரியக்கம் இருக்கிறது.

ஆமதாபாத்தில் காங்கிரசார் நடத்திய படேல் தினக்கூட்டம் காரணமாக இந்த அமளி ஏற்பட்டு, பதினைந்தே நிமிஷத்தில் கூட்டம் கலைந்தது. வேறோரிடத்திலே மகா குஜராத் இயக்கம் நடத்திய "படேல் தினம்' இரவு நெடு நேரம் வரையில் நிம்மதியாக நடைபெற்றது.

டிசம்பர் 2 ஆம் தேதிதான் ஆமதாபாத் ஜில்லா போலீஸ் சூபரின்டெண்டு, நகரில் குற்றங்களை பெரும் அளவுக்குக் குறைந்துவிட்டன, என்று அறிக்கை விடுத்தார்.

எனவே, காலிகளின் சேட்டையே இவ்வளவு அமளிக்குக் காரணம் என்று கூறுவதில் பொருள் இல்லை வழக்கமாக இதுபோல் தத்துவ விளக்கம் தரும் ஏடுகள் கூட, இம்முறை அதுபோல் கூறிடக் காணோம்.

படேல் தினம் நடத்திப் "படாத பாடுபட்ட' காங்கிரசார் அதிகமாக வருத்தப்படுவதற்கில்லை; ஏனெனில் இதைவிட "மோசமான' நிலைமை காங்கிரஸ் அமைச்சராகப் பணியாற்றும் ஒரு அம்மையாருக்கு ஏற்பட்டது. அது டிசம்பர் 14 இல்.

இந்துமதி சிமன்லால் சமூக நலமந்திரி! மாதர்குல நலனுக்காக, துவக்கப்பட்ட ஜோதி சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொள்ள அம்மையார் சென்றார், கிளர்ச்சிக்காரர்கள் வளைத்துக்கொண்டனர்.

அமைச்சரின் மோட்டார் "பன்ச்சர்' செய்யப்பட்டதாம்! நடந்தே சென்றார்களாம் அமைச்சர்! வழிநெடுக, ஒரே கூச்சல், கேலி, கண்டனம், இடையிடையே கல்வீச்சு! கலவரத்தில் ஈடுபட்டவர் தொகை 2000 என்று, பம்பாய் "டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை எழுதுகிறது.

அமைச்சரின் விலாவிலும் முதுகிலும் அடியாம்! அவருக்குத் துணைசென்ற பத்து பன்னிரண்டு தாய்மார்களுக்கும் தாக்குதலாம்! பெண்களைப் பாதுகாக்கச் சென்ற போலீசாரில் ஐவருக்குப் பலமான காயமாம்! இத்தனைக்கும் போலீசார், கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பார்த்தனர், கல்வீச்சின் முன்பு, அது போதுமான பலன் தந்ததாகத் தெரியவில்லை!

கார் கெடுக்கப்பட்டு விட்டதால் கால்நடையாகச் சென்றாரல்லவா, அம்மையார்; வழியில் பாவம், உருட்டிக் கீழேகூடத் தள்ளிவிட்டார்களாம்!

இவ்வளவு சங்கடத்தையும் சமாளித்துக்கொண்டு சங்கம் சென்றார். அங்கு என்ன நடந்தது தெரியுமா, தம்பி! உள்ளே நுழையாதே! என்று முழக்கமிட்டனர். யார்? பெண்கள்! மகா குஜராத் ஆதரவாளர்.

புதிய முதலமைச்சர் சவான் மட்டும் தப்பினாரா? இல்லை, தம்பி, இல்லை.

ஆமதாபாத் காங்கிரஸ் மாளிகையில், ஊழியர்கள் கூட்டம் நடத்த வந்தார் முதலமைச்சர்.

வருகிற வழியிலேயே கலகம் ஆரம்பமாகிவிட்டது; கல்விச்சு பலமாகிவிட்டது; கருப்புக்கொடிகள் ஏராளம்; கட்டுக்கு அடங்கும் போக்கு இல்லை; போலீஸ் நடவடிக்கை பலன்தரவில்லை; ஆர்ப்பாட்டக்காரர் அமளிநிலை உண்டாக்கி விட்டனர். இது காலையில்.

மாலையிலோ, காங்கிரஸ் மாளிகையையே ஆர்ப்பாட்டக் காரர் முற்றுகையிட்டு விட்டனர். போலீஸ் வளையம், அவர்களைத் தடுத்தது, ஆர்ப்பாட்டக்காரர் வளையத்தைப் பிளந்து கொண்டு முன்னேறினர், தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு நடத்திப்பார்த்தனர் - பலன் கிட்டவில்லை. இடி முழக்கம் போல,

சவான்! திரும்பிப்போ!
மகா குஜராத் வேண்டும்!

என்றனர் மக்கள். முதலமைச்சரின் முகம், படமாக்கப்பட்டதோ, என்னவோ! படமாக்கப்பட்டிருந்தாலும், பட்டீல் அதையே காட்டுவார், மக்களிடம்!

"மாஜி'யையும் சும்மாவிடவில்லை' இந்த "வம்புக்காரர்கள்.'

அவர் இந்தத் தொல்லையே வேண்டாமென்று, பம்பாய்ப் பிரச்சினைக்குத் தலைமுழுக்குப் போட்டுவிட்டு, நேருவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார்! போகட்டும் என்று விட்டுவிட்டார்களா?

அவர் ஒரு கூட்டத்தில் பேசினார் - பேச முயன்றார்.

பெருங்கூச்சல் எழுப்பினர், பேசவிடாதபடி தடுத்தனர்.

இதற்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல, என்றார் மொரார்ஜி.

எதற்கும் நாங்கள் அஞ்சுபவர் அல்ல, என்று கூறுவது போல, மக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

மொரார்ஜி, கடுமொழி புகன்று பார்த்தார்லிபோலீஸ் நடவடிக்கை எடுத்தது - குழப்பமோ நிற்கவில்லை.

இந்த நிகழ்ச்சி, "பரோடாவில்' டிசம்பர் 16 இல் நடைபெற்றது.

தம்பி! குஜராத்திகள் எத்துணை கொந்தளிப்பாக இருக்கிறார்கள் - மொழிப்பற்றும், அதனுடன் தொடர்பாக உள்ள உரிமை குறித்த ஆர்வமும், அந்த மக்களுக்கு "எத்தனை தேசியம்' பேசப்பட்டாலும், "பாரதீயம்' உபதேசிக்கப்பட்டாலும், குலைவதாகவோ, குறைவதாகவோ காணோம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

குஜராத்திகள், "காங்கிரஸ் வளர' கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தவர்கள்.

காந்தி மகாத்மாவை கோயில் கட்டிக் கும்பிடும் போக்கினர்.

"மகா குஜராத்' என்ற தேசிய எழுச்சியின் முன்பு, இதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகிறது.

இத்தனைக்கும், தம்பி, குஜராத்துக்கு, தமிழகத்துக்கு உள்ளதுபோன்ற உலகப் புகழ் பெற்ற வரலாறு கிடையாது. எனினும் அங்கே அந்த அளவுக்கு எழுச்சி இருக்கிறது! இங்கு, "தமிழ்நாடு' என்ற பெயர் இல்லாவிட்டால் என்ன! குத்துகிறதா, குடைகிறதா' - என்று கேட்கும் காமராஜர் பவனி வருகிறார்.

தம்பி! இந்தக் கருத்துமட்டுமல்ல நான் உன்னைக் காணச் சொல்வது, நாட்டுக்கு எடுத்துக் கூறச் சொல்வது.

அங்கெல்லாம், மொழிக்கிளர்ச்சி எவ்விதமான கோர உருவம் எடுத்திருக்கிறது, எவ்வளவு அமைதியுடன், அறநெறி நின்று இங்கு பணியாற்றுகிறோம் - இதற்கு இங்குள்ள காங்கிரஸ் அரசு. எவ்வளவு சுறுசுறுப்புடன் அடக்குமுறையை அவிழ்த்துவிடுகிறது. இதை எண்ணினேன் - பொது மக்களுக்கு அறிவிக்க, ஒரு துண்டு வெளியீடு அச்சிட்டு வழங்கினால் என்ன என்று தோன்றிற்று - அது இதோ - இதை அச்சேற்றி, இல்லந் தோறும் வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத்தான், தம்பி, நீ இருக்கிறாயே, எனக்கென்ன கவலை.

காட்டாட்சி

மராட்டியம்
குஜராத்
வங்கம்

எங்கும் கலகம்

மந்திரிகளைத் தாக்கினர்
நேருவை மடக்கினர்
போலீசை அடித்தனர்
கார்களைக் கொளுத்தினர்.

கதர்க் குல்லாயைக் கொளுத்தினர்
நேரு படத்தை உடைத்தனர்!

எல்லாம் மொழி உரிமைக்கு.

அன்புடையோரே!
அறிவாளரே!

இங்கு நாங்கள்
உரிமை கேட்டோம்,
அமைதியாக
பலாத்காரமின்றி.

இங்கு
காங்கிரஸ்

தடியால் தாக்கி
துப்பாக்கியால் சுட்டு

அடக்குமுறை தர்பார் நடத்திற்று.

ஏன் என்று கேட்கமாட்டீர்களா?
நீதிக்காக வாதாடமாட்டீர்களா?

கொடுமைக்கு ஆளானோர்

உங்கள்
இனத்தவர்!

உங்கள்
நாட்டவர்!

உங்கள் தொண்டர்!

அவர்களிடம் ஆதரவுகாட்டுவது
அடக்குமுறையைக் கண்டிப்பதாகும்.

காங்கிரசை
ஆதரிப்பது
காட்டாட்சிக்கு
வழிகாட்டும்.

பட்டீல் கட்சியில் பணம் படைத்தோர் ஏராளம். பல இலட்சம் மிக இலேசாகத் திரட்ட வழி இருக்கிறது. படம் எடுக்கலாம், கட்டணமின்றிக் காட்டலாம்! உன்னால் முடியுமா, என்னால் முடியுமா? நாம், நம்மாலான முறையில், நாட்டுக்கு உண்மையை எடுத்துச் சொல்வோம். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை என்பார்களே, அதுபோல, இந்தத் துண்டு வெளியீடு என்று எண்ணிக்கொள்ளேன்.

தம்பி! இதுபோன்ற துண்டு வெளியீடுகளை, வீடுதோறும் வழங்கு - தூய உள்ளம் படைத்தோர்; உண்மைக்காக வாதாட முன்வந்தே தீருவார்கள். காட்டாட்சியால் நாட்டுக்குக் கேடு என்ற பேருண்மையை உணர்ந்து, அதற்கு ஏற்ப, பொதுத் தேர்தலின்போது, தமது கடமையைச் செய்வார்கள்.

அன்பன்,

23-12-56