அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அளவுகோல் எது?

பெரியாரின் கொடி எரிப்புப் போராட்டம்-
பெரியார் தன்மைகள்.

தம்பி!

நாடு பெருங் கொந்தளிப்பில் சிக்கிவிடும், திராவிடர் வீடுகளில் இளைஞர் பலர் துப்பாக்கிக்கும் தடியடிக்கும் இலக்காகி இம்சிக்கப்பட்டது பற்றியும், சிறையில் போட்டு அடைக்கப்பட்டனர் என்பது குறித்தும் பேசிடும் காட்சிகள் இருக்கும், கலாம் செய்வோருக்கும் குழப்பம் விளைவிப் போருக்கும் நல்ல வேட்டையாடும் வாய்ப்பு ஏற்படும். சச்சரவுகள், சமர், சந்துமுனை அடிதடிகள், உருட்டுக் கண்ணினர் மிரட்டும் குரலினர் ஆகியோருக்கெல்லாம் நிரம்ப வேலை கிடைத்து வேண்டத்தகாத நிகழ்ச்சிகள் பல நெளியும் என்றெல்லாம் நீயும்நானும் அச்சப்பட்டுக் கொண்டிருந்தோம், சென்ற கிழமை.

பெரியார் சிறைப்படுவதுடன், அவர்மீது பயங்கரமானது என்று கருதப்படும் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு நடைபெறும், என்று அஞ்சினோம்.

டில்லி மந்திரி பந்த் மிரட்டிய போதும் சரி, பெரியார் தமது போர் பற்றிய விளக்கமளிக்கையில் 300 பேர் சாக வேண்டி நேரிடலாம், 1000 பேர் காயப்படவேண்டி நேரிடக்கூடும். ஒரு பத்தாயிரம் பேர் சிறை செல்லவேண்டி ஏற்படக்கூடும் என்று கூறினார் - அதனைக் கேட்டபோதும் உண்மையிலேயே நான் பதறிப் போனேன்.

எப்படியோ ஒன்று நமக்கெல்லாம் நிம்மதியும் நாட்டுக்கு அமைதியும் கிடைத்திடத்தக்க விதமாக நிலைமைஉருவெடுத்தது - மகிழ்கிறேன், தம்பி, உண்மையிலேயே பூரிப்படைகிறேன்.

அதிர்ச்சி தரும் அமளிகள், மயிர்க் கூக்செறியத்தக்க கிளர்ச்சிகள், மூக்கின்மீது விரல்வைத்து ஆச்சரியப்படத் தக்கதான போராட்டங்கள் ஆகியவைகளின் மூலமாகப்பெறக் கூடிய புதுவலுவைவிட, நாட்டு மக்களிடம், குறிப்பாக இன்னமும் காங்கிரசிலுள்ள திராவிட மக்களிடம் கொள்கையைப் புகுத்துவதிலே பெறுகிற வெற்றியையே நான் பெரிதும் விரும்புகிறவன். அப்படிக் கூறுவதால் போரே கூடாது என்பவனல்ல; போரில் கலந்து கொள்ளாதவன் என்றோ போர் வாடை அடிக்கும்போது புதுடில்லிக்கு உத்தியோக வேட்டைக்கு ஓடிவிட்டவனென்றோ பொருள் கொள்ளப் பொறுப்புள்ள யாரும் துணியமாட்டார்கள் - எதையும் துணிவுடன் கூறிடும் போக்கினர் பற்றி நான் பொருட்படுத்தப் போவதில்லை.

காங்கிரஸ்காரர் மனதில், வேதனை, வெறுப்புணர்ச்சி, பகை உணர்ச்சி மூட்டிவிடக்கூடிய வகையிலே கிளர்ச்சிகள் அமைவதை, நான், இன்று அல்ல, எப்போதுமே விரும்பிய தில்லை. இந்த என் எண்ணத்தை எடுத்துரைக்க என்றும் தயங்கினதுமில்லை.

ஆகஸ்ட்டு முதல் நாள் அய்யா அவர்கள் சொன்னபடி கொடி கொளுத்தப்பட்டிருந்தால், நிச்சயமாக அவரைத் தூசி கூட அணுகாது. அவரைப் பொறுத்தமட்டில் எத்தகைய எதிர்ப்பும் பகையும் துரும்பு; எனவே, அவருக்கு ஒரு சிறு குறைபாடும் ஏற்படாது. ஆனால் அன்று மூண்டிருக்கக்கூடிய பகை உணர்ச்சியும் வெறுறுப்புணர்ச்சியும் நிச்சயமாக திராவிட இயக்கத்தைப் பல ஆண்டுக் காலத்துக்குப் பழிக்கும் பகைக்கும் உள்ளாக்கிவிட்டிருக்கும். "பரவாயில்லை, அவர்கள் கூறுவதிலும் நியாயம் இருக்கிறது' என்று சொல்லும் அளவுக்கு நம்மை நெருங்கி வந்துகொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்கள், நாம் கூறும் எதையும் ஏற்றுக் கொள்ளலாகாது என்ற அளவுக்கு நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.

தம்பி, ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்துப் பணியாற்றும்போது நாளாகவாக எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாக அந்தக் கொள்கை ஒரு சிலரிடம் பதிந்து விடுகிறது என்பது மட்டுமல்ல, வெற்றிக்கு வழி, நாளாகவாக எவ்வளவுக் கெவ்வளவு விரிவடைகிறது, பரவுகிறது, மாற்றாரை உற்றார் ஆக்குகிறது, என்பதுதான் வெற்றிக்குப் பெரிதும் துணை செய்யும்.

இந்த முறையிலேதான், நான், பலகாலமாகவே, காங்கிரஸ் கட்சியில் இன்று உள்ள திராவிடத் தோழர்களில் - அந்தக் கட்சியாலேயே வாழ்ந்து தீரவேண்டியவர்கள் தவிர - மிகப்பலரை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும் வகையான கிளர்ச்சி வேண்டும் என்று கூறிவருகிறேன்.

கோழைத்தனம் என்கிறார், பெரியார்.

ஏறக்குறையப் பதினைந்து ஆண்டு பயிற்சிக்குப் பிறகும் பெரியாரிடம்தான் - பார் தம்பி! என்னை விட்டுக் கோழைத்தனம் போகவில்லை என்றால், (பெரியாரே கூறுகிறார்?) என் போன்றவர்களையே ஏராளமாகக் கொண்டுள்ள திராவிடச் சமுதாயத்துக்கு, ஏற்றதான ஓர் திட்டமல்லவா தீட்டவேண்டும், தாங்கிக் கொள்ள வேண்டுமே, தம்பி!

ஒரு படைத் தலைவரின் ஆற்றலும் அஞ்சாமையும், இடுக்கண் கண்டு கலங்காத போக்கும், ஒரு படையிலுள்ள கோழைகளையும் வீரர்களாக்கிவிடும் வரலாறு அத்தகைய சம்பவங்கள் பலவற்றைக் காட்டுகிறது - ஆனால், தம்பி, உற்றுக் கவனித்தால் உனக்கு உண்மை விளங்கும் - இவைகள் சம்பவங்கள்! அவ்வளவுதான்!

போர் முறை என்பது இந்தச் "சம்பவங்களை' இலக்கண மாகக் கொள்வத அல்ல. எதிரே ஒரு பெரிய படை, தம்பி, எல்லாப் போர்க் கருவிகளுடனும். இந்தப்புறம் ஒரு சிறு படை, பழுதான படைக் கலங்களுடன். ஒரு சிறு கணவாய்தான இடையில். அதைக் கடந்து அப்பெரும்படை வந்துவிட்டால் இந்தப் படை சின்னா பின்னமாகிவிடும் - என்று வைத்துக் கொள் - தம்பி, நீயும் நானும் அந்தச் சிறிய, ஆனால் சீரிய படையில் இருப்பதாக எண்ணிக்கொள் - நமது படைத் தலைவர் அந்தச் சமயத்தில், அபாரமான வீரதீரம் காட்டி, கணவாயைக் கடந்து, பெரும் படையினைத் துளைத்துக்கொண்டு செல்வ ஆயத்தமாகி வருக! என்று உத்தரவிட்டு முன்னேறுகிறார், என்றால், பெரியபடை கண்டு பீதி கொள்ளத் தக்க வகையில் சிறிய படை தழலெனப் பாயும், கணவாய் இரத்த ஆறாக மாறும். உலக வரலாற்றிலே வீரத்துக்கு ஓர் ஒப்பற்ற சம்பவம் பொறிக்கப்பட்டு விடும்.

இதைத்தான் நான் சம்பவம் என்கிறேன். இத்தகைய சம்பவம் பற்றிப் படிக்குந்தோறும் படிக்கப் பக்கம் நின்று கேட்குந்தோறும், வீரம் வீறிட்டெழச் செய்கிறது. என்றாலும், தம்பி, சிறிய படை கணவாயில் பாய்ந்து சென்று பெரிய படையைத் தாக்கி வெற்றி தேடுவதுதான், போர் முறை என்று இலக்கணம் அமைத்துக் கொள்ளமாட்டார்கள்.

போர்க்களத்து எடுத்துக்காட்டினைக் கூறினால், என்னமோ போல இருப்பதானால், தம்பி, இதோ இந்த உதாரணத்தை வேண்டுமானால், கேள்.

கட்டுக் காவலில் உள்ள கட்டழகி, மாடியில்.

அவளைக் காதலிக்கும் ஆணழகன், பக்கத்துத் தோட்டப் புறத்தில்.

கண்ணும் கண்ணும் பேசிவிட்டது - பெற்றோர் பேயராகி விட்டனர் - நெஞ்சைத் தொட்டிடும் காதற் கடிதம் தீட்டியிருக்கி றான் அந்த நேரிழையாளுக்கு; அதை நேரிடையாகத் தரமுடியாது; எனவே, அதனைச் சிறு கல்லில் சேர்த்துக் கட்டி விட்டெறிகிறான் - அது அவள்மீது பட்டபோது, கல்லே மலராகி விடுகிறது - கண்களில் ஒத்திக் கொள்கிறாள்...

இது காதலருக்கு ஒரு சம்பவம்,

ஆனால், காதலுக்கே இதுதான் இலக்கணம் என்று கொண்டுவிடக் கூடாதல்லவா.

போரிலும் காதலிலும் சந்தர்ப்பங்கள், சில சம்பவங்களை உருவாக்கும்; அந்தச் சம்பவங்களை மட்டுமே கொண்டு, அவைகளுக்கு இலக்கணம் வகுத்துக் கொள்ளக்கூடாது.

அதே முறையிலேதான், கொடிகளை எரிப்பதும், கோட்டைக் கொடிமரத்தை வெட்டிச் சாய்ப்பதும், குத்தீட்டி வீசுவதும், கொல்லும் வேழத்தை ஏவுவதும் - எல்லாம் சம்பவங்கள் - விடுதலைப் போரிலே - பல நாடுகளிலே.

அந்தச் சம்பவங்கள், திட்டமிட்டு நடைபெற்றவை அல்ல.

அந்தச் சம்பவங்களை கொண்டு, ஒரு போர்முறை வகுக்கப்படுவதில்லை.

இந்த எண்ணம் எனக்கு மேலிட்டதால்தான், ஆகஸ்ட்டில் நடைபெற இருந்த அந்தக் காரியம், அவசியமற்ற பகையையும், அணைக்க முடியாத குரோதத்தையும், போக்க முடியாத பழியையும் உண்டாக்கிவிடும் என்று அஞ்சினேன்.

காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும், அந்தச் சம்பவம் நடைபெறவில்லை. கடைசிநேரத்தில், கொடி கொளுத்துவதைப் பெரியார் நிறுத்திக் கொண்டார்.

எனக்குள்ள பிரச்சினை, போதுமான வாக்குறுதி பெற்றுக் கொண்டு நிறுத்தினாரா, இல்லையா என்பதல்ல. என் மகிழ்ச்சி கொடி கொளுத்துவது நிறுத்தப்பட்டது என்பதில்தான்.

பெரியாருக்கு இன்று உள்ள பெரும் செல்வாக்கு சாமான்ய மானதல்ல - அதைக் குறைத்து மதிப்பிடும் கயவனமல்ல நான் - காங்கிரசிலே உள்ளவர்களிலேயே சில பலருக்கு இன்று செல்வாக்கு இருப்பதை, உதாரணமாகக் காமராஜருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதை ஒப்புக் கொள்ளும் நான், பெரியாருக்கு உள்ள செல்வாக்கையா குறைத்து மதிப்பிடுவேன். அவருக்கு இன்றுள்ள செல்வாக்கும், அதனை ஈட்டிட அவராற்றியுள்ள அரும் பெரும் பணியும் அபாரம். எதற்கும் அஞ்சுபவரல்ல! எதிர் நீச்சலில் பழகியவர்! கொடி கோட்டை வாசலில் உள்ளதை கொளுத்த வேண்டுமென்றாலும், அதனால் ஏற்படக் கூடிய ஆபத்து பற்றித் துளியும் கவலைப்பட மாட்டார். அது அவருக்குச் சேவையால் கிடைத்தது மட்டுமல்ல, அவருடைய சுபாவமே அத்தகையது. அந்தக் குறுகுறுப்பான கண்களிலேயே நான் பல சமயங்களில் கோபம் கொந்தளிக்கக் கண்டிருக்கிறேன், அடிக்கடி அலட்சியத்தைக் கொட்டக் கண்டிருக்கிறேன், சில வேளைகளில் பிரிவு பச்சாதாபம் தோன்றிடக் கண்டிருக்கிறேன். ஒருபோதும் அந்தக் கண்களிலிருந்து பயம் கிளம்பக் கண்டதில்லை. நானொன்றும், தம்பி, பத்து கெஜத் தொலைவிலே இருந்து அவரைப் பார்த்துப் பூரித்திடும் இரசிகனல்ல. பக்கத்திலேயே பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்தவன்; அவரைப் பல கோணங்களிலே இருந்து பார்த்தவன் - பல பிரச்சினைகள் குறித்த அவருடைய பிரத்தியேகக் கருத்துக்களை அறிந்தவன் - "மேஸ்திரி' வேலையல்லவா பார்த்திருக்கிறேன்.

எனவேதான், திராவிட இயக்கத்தில் வகுக்கப்படும் போர்த்திட்டம், அவருடைய ஆற்றலை அளவு கோலாகக் கொண்டு மட்டும் அமையக் கூடாது, எந்தக் கொள்கைக்காக இயக்கம் நடைபெறுகிறதோ, அந்தக் கொள்கைக்குத் தீராப் பகையைத் தேடிப் பெறுவதாக இருத்தல் ஆகாது - பரவலான அளவில் செல்வாக்குப் பெறத்தக்கதும், பகைக் கூடாரத்தில் உள்ளவர்களின் உள்ளத்திலுல் பரிவு ஊட்டக் கூடியதுமான தாகத் திட்டம் இருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். பிரிந்த பிறகு ஏற்பட்ட பித்தமல்ல இது, ஒன்றாக இருந்து நாள்தொட்டு எனக்குள்ள கருத்து.

துளைத்துவிட்டார்! துளைத்துவிட்டார்! என்று இனிப்புப் பண்டத்தைச் சப்பிக்கொண்டு களிப்புக் கூச்சலிடும் சிறார் போல, பெரியார், கடற்கரைக் கூட்டத்திலே தி.மு.க. வையும் குறிப்பாக என்னையும் துளைத்தெடுத்தார் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், குத்தும் குணாளர். அவருக்கு மகிழ்ச்சி கிடைப்பது பற்றி எனக்கு எப்போதுமே அதிருப்தி இருந்ததில்லை.

நான் "துளைக்கப்பட்டேன்' என்று எந்தக் கடற்கரைப் பேச்சுபற்றி அந்த நண்பர் களிப்படைகிறாரோ, அந்தக் கடற்கரை மணல் அறியும், பெரியார் குறித்து இவர் கொண்டிருந்த கருத்துகளை. பழங்கதை - பழங்கதையாகவே போகட்டும்.

என்னை ஏசட்டும், பரவாயில்லை. - நான் தாங்கிக் கொண்டு பழக்கப்பட்டுவிட்டேன்.

ஆனால் ஆகஸ்ட்டு நடைபெற்றிருந்தால், அதனால் ஏற்பட கூடிய பகை உணர்ச்சி, திராவிடர் இயக்கத்துக்கு நிச்சயமாக ஊறு செய்திருக்கும்.

காங்கிரஸ் வட்டாரத்திலே கிளம்பக்கூடிய பகை உணர்ச்சியும், பொதுமக்கள் மனதிலே கிளம்பக் கூடிய அருவருப்பு உணர்ச்சியும், பெரியாரை அசைக்காது!

அவர் அத்தகைய விரோதப் பெருவெள்ளத்தை எதிர்த்து நிற்க வல்லவர்.

ஆனால், அவர் விரும்புகிற கொள்கைக்காக இருந்து பணியாற்றும் இயக்கம் இருக்கிறதே, தம்பி, திராவிட இயக்கம், அது விரோதப் பெருவெள்ளத்தால் மெத்தப் பாதிக்கப்பட்டுவிடும்.

எனவேதான், கோழை என்றோ காட்டிக்கொடுப்பவன் என்றோ, வஞ்சகன் என்றோ, பிஞ்சு சொத்தை என்றோ, எதைச் சொல்லி என்னை ஏசினாலும் பரவாயில்லை, இயக்கத்துக்கு மட்டும், அதிர்ச்சி தராமலிருந்தால் போதும் என்று கருதினேன்.

பெரியாருக்கு உள்ள அஞ்சாமையும், எதிர்நீச்சுத் தன்மையும், எத்தகைய நிலைமையையும் சமாளிக்கும் திறமையும், எவருடைய விரோதம் குரோதம், பகையாயினும் சரி, எத்தகைய பூசலாயினும் சரி, இவைகளைத் துச்சமெனக் கருதிடும் நெஞ்சழுத்தமும், இயக்கத்தில் நிரம்பி, ததும்பி இருக்கிறது என்று நான் நம்பவில்லை. பெரியாருக்கும் அந்த நம்பிக்கை இல்லாததால்தான், அடிக்கடி அவர் இப்படிப்பட்ட சமயத்தில்என்னையே நம்பி இதிலே ஈடுபடுகிறேன் என்று வெளிப்படை யாகவே எடுத்துக் கூறி இருக்கிறார்.

நாம் மேற்கொண்டுள்ள நாட்டு விடுதலை வெற்றி பெறுவதற்கு, இத்தகைய ஒப்பற்ற ஒரு தலைவரின் உள்ளத் திண்மை மட்டும் போதாது, மேலும் மேலும் வலுவு பெற்ற வண்ணம் ஒரு கட்டுப்பாடான இயக்கம் வளர்ந்தாக வேண்டும். அந்த வளர்ச்சியை ஆகஸ்ட்டுக் கெடுத்துவிட்டிருக்கும் - என்பதனால்தான், நான் அதை விரும்பவில்லை.

பெரியார், எப்படிப்பட்ட "வெறுப்பை'க் காங்கிரஸ் வட்டாரம் வெளிப்படுத்தினாலும் தாங்கிக் கொள்ளக் கூடியவர்- இயக்கம் தாங்கிக் கொள்ள முடியாது - இது, தம்பி, அங்கு உள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை - நான் இதைக்கூறும்போது பெரியாருக்கு நான் ஏதோ ஊறு தேடுவதாகக் கருதுகிறார்கள். அவர்பால் கொண்ட அன்பைக் காட்டிக் கொள்வதற்கு, எளிதான, சுவையுள்ள வழி உன்னையும் என்னையும் ஏசுவதுதான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில், பெரியாருடைய திறமையையும் அவர் பெற்றுள்ள செல்வாக்கையும் இம்மி அளவும் நான் குறைத்து மதிப்பிடாததால்தான், அவர் தன் நிலைக்குத் தகுந்த திட்டம் தீட்டும்போது, அது முறையல்ல, இயக்கத்தின் இன்றைய நிலைமைக்குத் தக்கபடியானதும், அதன் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்காத முறையிலும் திட்டம் வேண்டும் என்று கேட்கிறேன் - ஓஹோ! நீ யார் கேட்க, என்பார்கள்! வினயமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களையும் பெரியாருக்குச் சமமானவராகவும், (உள்ளூர, அதைவிட உயர்ந்த திறமையுள்ளவராகவும்) அவருக்கு ஏற்றதத்தனையும் தமக்கும் உடன்பாடே என்று சொல்வதுதான், தாங்களும் பெரியார் அளவுக்கு வளர்ந்து விட்டதாகக் காட்டிக் கொள்வதற்கான வழி என்று கருதுபவர்களாகவும் உள்ளவர்கள்தான், அவர் கூறும் திட்டத்தை அப்படியே ஒப்புக்கொண்டு - அதற்காகச் "சபாஷ்' பட்டம் வெறுகிறார்கள்.

பெரியாரின் நிலை வேறு! இயக்கத்தின் நிலை வேறு! பெரியாரால் தாங்கிக்கொள்ளக் கூடியதை எல்லாம் இயக்கமும் தாங்கிக்கொள்ள முடியும் என்பது தப்புக் கணக்கு.

பெரியாருக்கு உள்ள தன்மையையும் திறமையும், இயக்கத்தில் உள்ள தங்கள் ஒவ்வொருவருக்கும் அதே அளவிலும் வகையிலும் இருக்கிறது என்று எண்ணிக்கொள்வது, அவரைப் பூரணமாக அறியாததால் ஏற்படும் தவறு; தங்களைப் பற்றி மிகைப்படுத்திக் கணக்குப் போடுவதால் ஏற்படும் தவறுமாகும்.

தம்பி! அண்ணன் தம்பி இருவர் - அண்ணன் ஊர்ப் பெரிய தனக்காரன் - எங்கும் கலியாணம் கார்த்தி என்றதும், பஞ்சாயத்து பாகப்பிரிவினை என்றதும், அண்ணன்தான் செல்வான் - அமளி அடங்கும், ஊர் சீர்ப்படும்.

தம்பி, ஏருண்டு தானுண்டு என்று இருப்பவன்.

தம்பி, அண்ணன் தனக்கேற்றது செய்கிறான், நாம் நமக்கு ஏற்றது செய்கிறோம் என்றுதான் "தலையணை மந்திரம்' ஏறுகிற வரையில் எண்ணிக் கொண்டிருந்தான். அது தலைக்கேறியதும் "ஏன்! நீ மட்டும் தான் ஊர்ப் பெரிய தனம் பார்க்க வேண்டுமா - நான் என்ன நம்ம குடும்பத்து உழவுமாடா?' என்று அண்ணனிடம் வம்புக்கு நின்றான். அண்ணன் சூஷமம் தெரிந்து கொண்டான் - "தம்பி! நீயே இனி, ஊர்ப் பெரிய தனக்காரர் வேலையைப் பார் நான் காடு கழனியைக் கவனித்துக் கொள்கிறேன் - எதற்கும் இரண்டோர் நாள் என்னோடு வா? ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நான் என்னோடு வா? ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நான் எப்படி எப்படிக் கவனிக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்வாய்'' என்று கூறி அழைத்துச் சென்றான்.

அன்று ஒரு சாவு - மகன் கோவெனக் கதறி அழுகிறான், தாய் இறந்ததற்காக.

ஊர்ப் பெரிய தனக்காரனான அண்ணன், அவனைத் தேற்றி, "என்னப்பா செய்யலாம்! எவ்வளவு அருமையான குணம், அம்மாவுக்கு எங்களிடமெல்லாம் எவ்வளவு அன்பு தெரியுமா? அதிகம் சொல்வானேன். அவர்கள் உனக்கு தாய் அல்ல, எனக்கும் தாயாகத்தான் இருந்தார்கள்'' என்றான்.

தம்பி, கேட்டுக்கொண்டான் - பூ! பூ! இவ்வளவுதானா, பெரிய தனக்காரன் வேலை - என்று எண்ணினான் - மறுநாளே பட்டத்துக்கு வந்துவிட்டான்.

எட்டாம் நாள் வேறோரிடத்தில் ஒரு இழவு.

மனைவியைப் பறிகொடுத்த கணவன், மண்ணில் புரண்டு அழுகிறான் - "ஐயோ! அவள் போனபிறகு நான் எப்படிவாழ்வேன் - எனக்கேன் சாவுவரக்கூடாது! என் ஆசைக்கனியே! அமுத நிலவே!'' என்றெல்லாம் கூறிக் கதறுகிறான். பெரிய தனக்காரனான தம்பி. அருகே சென்றான். அவனை அனைத்துப் பிடித்தபடி, "அழாதே அப்பா! அழாதே! என்ன செய்யலாம்! எவ்வளவு நல்லவர்கள், எவ்வளவு அன்பு! அதிகம் சொல் வானேன், அவர்கள் உனக்கு மட்டுமா மனைவியாக இருந்தார்கள், எனக்கும்தான்'' என்றான்.

சாவு வீடு, படுகளமாகிவிட்டது.

"அண்ணா அண்ணா! எனக்கு வேண்டவே வேண்டாம் இந்தப் பெரியதனக்கார வேலை'' என்று சொன்னான் தம்பி.

கதைதான் - ஆனால் தம்பி! பெரியார் தனது ஆற்றலுக்குத் தகுந்ததைச் செய்யும்போது, அதை நானும் செய்வேன், என்னால் முடியும் என்று சொல்லிக் கிளம்புவது, சரியாகாது என்பதற்கான பாடம் இந்தக் கதையில் இருக்கிறது.

இயக்கம் உள்ள நிலையையும், அதன் எதிர்க்காலவளர்ச்சி யையும் கருத்தில் கொண்டுதான் நான் ஆகஸ்ட்டை விரும்ப வில்லை, பெரியாரைச் சரியாக மதிப்பிடாததால் அல்ல, மிக மிகச் சரியாக மதிப்பிட்டதால்தான்.

எனவே, ஒரு இயக்கம் நடத்தத் திட்டமிடும் கிளர்ச்சி, அதன் தலைவரின் தனிப்பெருந் தன்மையை மட்டும் அளவு கோலாகக் கொண்டு அமைதல் கூடாது, அந்த இயக்கத்தின் இன்றைய நிலைக்கு ஏற்றதாகவும், எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்காததாகவும் இருக்க வேண்டும் என்கிறேன். நன்றாக எண்ணிப்பார். தம்பி! நன்றாக - ஒரு முறைக்கு இருமுறை படித்து விட்டு.

அன்புள்ள,

7-8-1955