அண்ணா பேரவையின் செயல்பாடுகள்


பேரவையின் தோற்றம்

என் தந்தை பேரறிஞர் அண்ணா மறைந்தது 1969 ஆம் ஆண்டு.

அடுத்த ஆண்டே நான் தனியனாக ஓர் இமாலய முயற்சியில் இறங்கினேன். ஆம், தந்தை அவர்களின் எழுத்துக்களை பேச்சுக்களை தொகுப்பது, எனும் முயற்சியில், சிறுகதைகள், குறுப்புதினங்கள், புதினங்கள், ஓரங்க நாடகங்கள், பெரு நாடகங்கள், வரலாற்று ஓவியங்கள் (நம்நாடு, மேலை நாடு) கட்டுரைகள், தம்பிக்கு கடிதங்கள், மேடைப் பொழிவுகள், வானொலி பொழிவுகள், சட்டசபை பொழிவுகள், பாராளுமன்ற பொழிவுகள், ஆங்கிலக் கட்டுரைகள் (ழடிஅந சுரடந, ழடிஅந டுயனே) ஆகியவற்றில் வந்த கட்டுரைகள்) இவைகள் எல்லாம் தொகுத்து, தனித் தனி தொகுப்பாக வெளியிடவேண்டும் என்கிற பேராசையில் . . .
கன்னி முயற்சியில் நான் வெற்றிபெறவில்லை.

அதுமட்டுமல்ல, அவசரப்பட்டு அந்த முயற்சியில் நான் இறங்கியது எவ்வளவு தவறு என்று வருத்தப்பட்டேன். இந்தப் பணிகளை முடிக்க தம்பியர் படைஇருக்கும் போது, இந்தத் தனையனுக்கு ஏன் இவ்வளவு அவசரம் என்று என்னை நானே நொந்து கொண்டதுண்டு.

மீண்டும் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

அறிஞர் அண்ணாவின் சிறு கதைகளை, புதினங்களை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர். இரா.சேது அவர்கள் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையின் முன்னுரையில் இப்படி எழுதியிருந்தார்

"20 ஆம் நூற்றாண்டு சமுதாய மறுமலர்ச்சிக்கு அண்ணாவின் சிறுகதை புதினங்களின் கொடை" என்ற தலைப்பை ஆய்வு பொருளாகக் கொண்டேன். அதன் பின்னர் அண்ணாவின் கதைகளை தேடும் பணியில் ஈடுபட்டேன். அண்ணா நடத்திய இதழ்களிலிருந்தும் அவரோடு உடன் உறைந்து இணைந்து பணியாற்றியவர்களிடத்தும் அவரது கதைகள் பற்றிய குறிப்புகளை பெற முனைந்தேன். ஆயினும் அவரது கதைகள் பற்றிய முழுமையான தகவல்களைப் பெற முடியவில்லை. அவரது எழுத்துக்களில் ஈடுபாடு கொண்டவர்கள் அவற்றைப் படித்துவிட்டுப் போற்றி பாதுகாக்காமல் விட்டுவிட்டனர். நம் காலத்து வாழ்ந்த ஒரு அறிஞரின் எழுத்துக்கே இந்நிலை ஏற்பட்டது கண்டு மனம் மிகக் கவன்றேன். . . கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும் கருத்து வேறுபாடு கொண்டவர்களின் புறக்கணிப்பாலும், தமிழ் இலக்கியத்தில் புதிய விழிப்பை உருவாக்கிய அண்ணாதுரையின் ஆற்றல் மறைக்கப்பட்டதாக உணர்ந்தேன்.

அறிஞர் அண்ணாவிடம் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளவர்கள் கூட, அவர் சிறந்த இலக்கியவாதி என்று ஒப்புக்கொள்வர். அப்படிப்பட்ட இலக்கிவாதியை, அடுத்து வருகிற தலைமுறைகள் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம், என் நெஞ்சத்தில் எழுந்தது.

சிலைகளும் மண்டபங்களும் காலத்தால் அழியலாம். ஆனால் அவர்கள் வழங்கிய எழுத்துச் செல்வங்கள் என்றென்றும் வாழும். அவர்களை வாழவைக்கும், வள்ளுவரை நாம் அறிந்தது அவர் குறளை வைத்துதானே?

அதேபோல் அறிஞர் அண்ணாவின் காலத்தை வென்ற எழுத்துக்களை காத்து அடுத்த தலைமுறையிடம், அளிக்கவேண்டியது நம் நன்றிக் கடன் என்பதை உணர்ந்தேன்.

பல நண்பர்களுடன் பேசி, இவைகளைச் செய்ய ஓர் அமைப்பு தேவை. இதை எப்படி ஓர் அமைப்பாக கொண்டு வருவது என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், சமீபத்தில் நம்மைவிட்டு மறைந்த இனமானக் கவிஞர் கருணாநந்தம் அவர்கள், இதில் பெருத்த ஈடுபாடுடன், அமைப்பை உருவாக்கித் தந்திட பெரிதும் உதவினார். நான் அந்தப் பெரும் உள்ளத்தை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அமைப்பின் பெயர் "பேரறிஞர் அண்ணா இலக்கியப் பேரவை" என்பதே பொருத்தம் என நண்பர்களுடன் முடிவு செய்தோம்.

புதிய சந்ததியினர் புதிய சரிதம் படைத்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ் மகன், மனிதாபிமானி, மனித மேம்பாட்டு இயக்கத்தின் பாட்டுடை தலைவன் அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை அறிந்து தமிழ் இன, மொழித் தொண்டு, அரசியல் விழிப்புணர்ச்சித் தொண்டு இவைகளை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள, வழி நடக்க, வீழ்ந்து பட்ட இனம், வீறு கொள்ள, அவர் காலத்தில் தமிழகம் பெற்ற ஏற்றத்தை அவர் கொள்கை வழி நடந்த, இன எழுச்சியுற்ற பழந்தமிழகத்தை மீண்டும் காண, பணிபுரிதல், இந்தப் பேரவையின் தலையாய நோக்கமாக இருக்கும்.

இதன் நோக்கம் இலக்கியச் சொற்பொழிவுகளை ஆற்றிக் கொண்டிருப்பது மட்டுமல்ல, இலக்கு + இயம் இலக்கியம், அண்ணாவின் இலக்கு எது, அது எதை நோக்கி இயங்கியது என்றால், சமுதாய மேம்பாட்டு பணிதான் மிக முக்கியமானது என்பது தெளிவாகும். அதனால் இந்த அமைப்புக் அண்ணா இலக்கியப் பேரவை என்கிற பெயரே பொருந்துகிறது.

ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை அமைப்பது, சாதி மதச்சனியன்கள் ஒழிய பாடுபடுவது மூடநம்பிகைகளை சாடுவது, மக்களுக்கு இன உனர்வை ஊட்டுவது, அதன் மூலம், மொழி நாடு இவைகளின் உரிமையை நிலைநாட்டுவது, இவைகள்தான் அவருடைய தலையாயப் பணிகளாக இருந்தன.

இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு இவைகள் அவ்வளவாக தெரியாது. தெரிவிக்கப்படவில்லை. அதை இந்தப் பேரவைச் செய்யும்.

அது இப்போது தேவைதானா, அது பொருத்தமா, பொருந்துமா என சிலருக்கு ஐயம் எழலாம்.

உதாரணமாகச் சொல்வதென்றால், ஐயா, அண்ணாவுடன் வாழ்ந்தவர்கள், அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கொள்கைத் தங்கங்களாக, இந்த நாட்டுக்கு உழைத்தவர்கள், திராவிட இயக்கத் தூண்கள் என்று கூட சொல்லலாம். அவர்களெல்லாம், பதவி போகத்துக்கு ஆட்பட்டு அலைக்கழிந்து, கொண்ட கொள்கைகளை உதறிவிட்டு, மாயையில் சிக்கிச் சீரழிந்தனர்.

யார் யார் பின்னாலேயோ சென்று நின்று கொண்டு, அவர்களை தங்கள் தலைவராக வரித்துக் கொண்டு, திராவிட இயக்க பாரம்பரியத்தையே காக்க வந்தவர்கள் அவர்கள்தான். என்று சொல்லுகின்ற ஓர் பரிதாப நிலையை வேதனையான வேடிக்கையை, கண்டோம், அது இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கண்டு கொண்டிருக்கிறோம்.

அவர்களுக்கே இந்த கதியென்றால், இன்றைய இளைஞர்களுக்கு, பழையசரித்திரம் தெரியாமல் இருந்தால், கொள்கை கோட்பாடுகள் சரிவர தெரிவிக்கப்படாமல் இருந்தால் இவர்கள் எப்படி தாக்குப் பிடிப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தால், நாம் எவ்வளவு பெரிய பணியை மேற்கொள்ளவேண்டும் என்பதும், இன்னமும் ஐயா, அண்ணா இவர்களுடைய பாதிப்புகளுடன், திராவிட இயக்க உணர்வுகள் கொண்டுள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு நன்கு புரியும்.

எங்களை வாழ்த்துங்கள், வழி நடத்துங்கள், ஒத்துழைப்பைத் தாருங்கள்.

டாக்டர் சி.என்.ஏ.பரிமளம் MBBS
தலைவர், பேரறிஞர் அண்ணா இலக்கியப் பேரவை.

பேரறிஞர் அண்ணா பேரவையின்
நோக்கங்களும், மேற்கொள்ள இருக்கும் பணிகளும்

1. பேரறிஞர் அண்ண அவர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள், (தமிழ், ஆங்கிலம்) இவைகளை தொகுத்து புத்தக வடிவில் குறைந்த விலையில் எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகை செய்தல்.

2. அண்ணா வரைந்த ஓவியங்களை தொகுத்து நூலாக வெளியிடுதல்.

3. அண்ணாவின் சொற்பொழிவுகள் தமிழ், ஆங்கிலம் இரண்டும் அடங்கிய ஒலி நாடாக்களை தொகுத்து, மக்களிடம் பரவும் வகை செய்தல்.

4. அண்ணா அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் அடங்கிய திரைப்படங்களை ஒளி நாடாக்களாக மாற்றி தொகுத்து வெளியிடுதல்.

5. அண்ணா அவர்கள் நடத்திய காஞ்சி, HOME RULE கிழமை இதழ்களை மீண்டும் கொண்டு வருதல்.

1937 ம் ஆண்டிலிருந்து 1940 ம் ஆண்டு வரை அண்ணா அவர்கள் விடுதலை, குடியரசு, பகுத்தறிவு ஆகிய இதழ்களில் எழுதிய கட்டுரைகளை தொகுக்க வேண்டும்.

திராவிடநாடு இதழில் வெளிவந்த விட்டுப்போனக் கட்டுரைகளைத் தொகுக்க வேண்டும்.

அண்ணாவின் முதல் பேச்சு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 'ஆற்றோரம்' எனும் தலைப்பில் பேசிய பேச்சு இவைகளை தேடி எடுக்க வேண்டும்.

1948 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி வானொலியில் வெவ்வேறு தலைப்புகளில் பேசிய பேச்சுக்களின் (இவை புத்தகமாக வந்துவிட்டன) ஒலி நாடாக்களை தேடி தொகுத்து குறுந்தட்டில் வெளியிட வேண்டும்.

யேல் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளைத் தொகுத்து குறுந்தகடுகளில் கொண்டு வரவேண்டும்.

அண்ணா ஆய்வடங்கல் (BIBLIOGRAPHY) ஒன்று கொண்டு வரவேண்டும்.

அண்ணாவின் கையெழுத்துப் பிரதிகளை (MANUSCRIPTS) தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும்.

இதுவரை செய்து முடிக்கப்பட்டப் பணிகள்

அண்ணாவின் சொற்பொழிவுகள் 1953-ல் இருந்து 1968 வரை நம்நாடு இதழில் வெளிவந்தவற்றை தொகுத்து 7 தொகுப்புகளாக தமிழரசி பதிப்பகத்தின் சார்பில் திரு. ம.நடராசன் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு ஊனு வெளியிட்டிருக்கிறார்கள்.

பூம்புகார் பதிப்பகத்தின் மூலம் திரு.பிரதாப் சிங் அவர்கள், கடிதங்கள் கட்டுரைகள், சட்ட மன்ற உரைகள் இவைகளை தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.

மீனா கோபால் பதிப்பகத்தின் மூலம் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கம் அவர்கள், திராவிட நாடு, காஞ்சி இதழ்களில் வெளிவந்த அண்ணாவின் கட்டுரைகளை 17 தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்.

அண்ணா பேரவையின் சார்பில் சென்னையில் அண்ணா இல்லத்தில் அண்ணா நூலகமும், அண்ணா ஆய்வு மையமும் தொடங்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.

அண்ணா பேரவையின் சார்பில் அண்ணாவின் சொற்பொழிவுகள் 15 சிடி, அண்ணா பற்றியப் பாடல்கள் 2 சிடி, அண்ணாவின் நாடகங்களான 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்', 'நீதி தேவன் மயக்கம்' ஆகியவை, ஒலி குறுந்தகடுகளாக தயார் செய்யப்பட்டு விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன.

அண்ணாவைப் பற்றிய Who is ANNA? என்று தெரிந்து கொள்கிற வகையில் சிறு புத்தகங்களாக தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அண்ணா பேரவை அண்ணா Photo CD ஒளிப்படக் குறுந்தகடு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

திரு. தமிழரசி நடராசன் அவர்கள் அண்ணாவின் ஆங்கில இதழ்களான HOME RULE, HOME LAND ஆகிய இதழ்களில் வந்த அண்ணாவின் கட்டுரைகளை திரு. எம்.எஸ்.வெங்கடாசலத்தை வைத்து தொகுத்து இரண்டு தொகுப்புகளாகத் தயாரித்து் வெளியிட்டிருக்கிறார்கள்.

அண்ணா பேரவையின் சார்பில், அண்ணாவுக்காக, 01.08.2005-ல் இருந்து இணையதளத்தில் (Internet) ஒர் வலைப்பின்னல் (Website) தொடங்கப்பட்டிருக்கிறது. முகவரி www.arignaranna.info

இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற பணிகள்.

அண்ணாவின் ஒளிப்படத் தொகுப்பு ANNA PHOTO ALBUM (இதில் அண்ணா வரைந்த ஓவியங்களும் இடம்பெறும்) தயாரித்துக் கொண்டிருக்கிறோம்

தமிழகத்தின் நகரங்களில் கீழ்க்கண்டவர்களின் தலைமையின்கீழ்
அண்ணா பேரவை செயல்படுகிறது.

தஞ்சாவூர்:
வீ.சு.இராமலிங்கம் பி.ஏ.பி.எல்.

இரா.செம்பியன்

சென்னை:
அண்ணா மலர்வண்ணன்

டாக்டர். பழநிச்சாமி, எம்.எஸ்,
முனைவர் இரா.சேது, எம்.ஏ., பி.எச்டி

டாக்டர். சுப்புராமன், எம்.டி.

வட ஆற்காடு:
தோப்பூர் திருவேங்கடம் எம்.ஏ.

திருவண்ணாமலை:
முனைவர். ப. ஆறுமுகம், எம். ஏ. பி.எச். டி

தென் ஆற்காடு:
முனைவர். மயில்வாகனன், எம்.ஏ., பி,எச்டி

மதுரை:
திரு. பெரியய்யா

நெல்லை:
திரு. கணபதி இராம சுப்பய்யா
திரு. இசை. இறை சேரலாதன்

காஞ்சீ:
திரு. முனுசாமி

திருப்பூர்:
திரு. தசரதன்
திரு. விவேகானந்தன், பி.எஸ்சி., பி.எல்.

 

உலகமெங்கும் உள்ள அண்ணா பற்றாளர்களே, என்னோடு சேர்ந்து பணியாற்றவேண்டும் என்பது என் பேரவா. நிதி மிகுந்தோர் நிதியுதவி தாரீர். அண்ணா எனும் ஒளி விளக்கை உயர்த்திப் பிடிப்போம். அண்ணாவின் கொள்கைகளை அண்ணா எனும் மாமனிதரை இன்றய இளைய சமுதாயம் அறிந்துகொள்ள இணைந்து பணியாற்றுவோம். புதிய தமிழகம் படைப்போம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

அண்ணா பேரவை என்பது
'ANNA MISSION'


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள